2 சாமுவேல் 2

fullscreen1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான், அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.

fullscreen2 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரானான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்திற்குப் போனான்.

fullscreen3 அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும் அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.

fullscreen4 அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்த போது,

fullscreen5 தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து அவரை அடக்கம்பண்ணினபடியினலே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

fullscreen6 கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.

fullscreen7 இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

fullscreen8 சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,

fullscreen9 அவனைக் கீலேயாத்தின்மேலும் அஷூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாகிக்கினான்.

fullscreen10 சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டு வருடம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார்மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.

fullscreen11 தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.

fullscreen12 நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.

fullscreen13 அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய் கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும் குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.

fullscreen14 அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.

fullscreen15 அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து ஒரு பக்கமாய் போய்,

fullscreen16 ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.

fullscreen17 அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி அப்பேனரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.

fullscreen18 அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாயும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.

fullscreen19 அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.

fullscreen20 அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான்; அவன்: நான்தான் என்றான்,

fullscreen21 அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்து அவனை உரிந்துகொள் என்றான் ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.

fullscreen22 பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ, நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.

fullscreen23 ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.

fullscreen24 யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின் தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.

fullscreen25 அப்பொழுது அப்னேரைப் பின் சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.

fullscreen26 அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு: பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்த மட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.

fullscreen27 அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல் அப்பொழுதே திரும்பிவிடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

fullscreen28 யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும் யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள்.

fullscreen29 அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவ நடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.

fullscreen30 யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொண்பதுபேரும் ஆகசேலும் குறைந்திருந்தார்கள்.

fullscreen31 தாவீதின் சேகவரோ பென்யமீனரிலும் அப்னேரின் மனுஷரிலும் முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள்.

fullscreen32 அவர்கள் ஆசகேலை எடுத்து பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இரா முழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.