உபாகமம் 15

fullscreen1 ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக.

fullscreen2 விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.

fullscreen3 அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.

fullscreen4 எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,

fullscreen5 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.

fullscreen6 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.

fullscreen7 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,

fullscreen8 அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.

fullscreen9 விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.

fullscreen10 அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

fullscreen11 தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

fullscreen12 உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடுவாயாக.

fullscreen13 அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல்,

fullscreen14 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.

fullscreen15 நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

fullscreen16 ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,

fullscreen17 நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய்.

fullscreen18 அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

fullscreen19 உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலைகொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக.

fullscreen20 கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்.

fullscreen21 அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்.

fullscreen22 அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.

fullscreen23 அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.