யாத்திராகமம் 20

fullscreen1 தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

fullscreen2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

fullscreen3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

fullscreen4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

fullscreen5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

fullscreen6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

fullscreen7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

fullscreen8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

fullscreen9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

fullscreen10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

fullscreen11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

fullscreen12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

fullscreen13 கொலை செய்யாதிருப்பாயாக.

fullscreen14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.

fullscreen15 களவு செய்யாதிருப்பாயாக.

fullscreen16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

fullscreen17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

fullscreen18 ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

fullscreen19 மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.

fullscreen20 மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.

fullscreen21 ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

fullscreen22 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.

fullscreen23 நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.

fullscreen24 மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

fullscreen25 எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.

fullscreen26 என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.