யாத்திராகமம் 27

fullscreen1 ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.

fullscreen2 அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.

fullscreen3 அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.

fullscreen4 வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,

fullscreen5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.

fullscreen6 பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்Τால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.

fullscreen7 பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.

fullscreen8 அதை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணவேண்டும். மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப் பண்ணக்கடவர்கள்.

fullscreen9 வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.

fullscreen10 அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.

fullscreen11 அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்க வேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.

fullscreen12 பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.

fullscreen13 சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ அகலமாயிருக்கவேண்டும்.

fullscreen14 அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.

fullscreen15 மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.

fullscreen16 பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாய்ச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்குதிரையும் அதற்கு நாலு தூண்களும் அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும்.

fullscreen17 சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

fullscreen18 பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்.

fullscreen19 வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும்.

fullscreen20 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.

fullscreen21 ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.