எரேமியா 43

fullscreen1 எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லாவார்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,

fullscreen2 ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.

fullscreen3 கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.

fullscreen4 அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.

fullscreen5 யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,

fullscreen6 கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

fullscreen7 கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.

fullscreen8 தக்பானேசிலே கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்:

fullscreen9 நீ உன் கையிலே பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா ஜனங்களுக்கு முன்பாக அவைகளைத் தக்பானேசில் இருக்கிற பார்வோனுடைய அரமனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணிலே புதைத்து வைத்து,

fullscreen10 அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.

fullscreen11 அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.

fullscreen12 எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.

fullscreen13 அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.