எண்ணாகமம் 14

fullscreen1 அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

fullscreen2 இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.

fullscreen3 நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளையும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.

fullscreen4 பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

fullscreen5 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.

fullscreen6 தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

fullscreen7 இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்.

fullscreen8 கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.

fullscreen9 கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பபண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.

fullscreen10 அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

fullscreen11 கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

fullscreen12 நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

fullscreen13 மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.

fullscreen14 கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.

fullscreen15 ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:

fullscreen16 கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

fullscreen17 ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,

fullscreen18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

fullscreen19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

fullscreen20 அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

fullscreen21 பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

fullscreen22 என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சை பார்த்த மனிதரில் ஒருவரும்,

fullscreen23 அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்.

fullscreen24 என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

fullscreen25 அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.

fullscreen26 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

fullscreen27 எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

fullscreen28 நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

fullscreen29 இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.

fullscreen30 எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.

fullscreen31 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.

fullscreen32 உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும்.

fullscreen33 அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பதுவருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.

fullscreen34 நீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.

fullscreen35 கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.

fullscreen36 அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,

fullscreen37 சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.

fullscreen38 தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.

fullscreen39 மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள்.

fullscreen40 அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.

fullscreen41 மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது.

fullscreen42 நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.

fullscreen43 அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான்.

fullscreen44 ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை.

fullscreen45 அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள்.