எண்ணாகமம் 3

fullscreen1 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது:

fullscreen2 ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

fullscreen3 ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.

fullscreen4 நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

fullscreen5 கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen6 நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களை நிறுத்து.

fullscreen7 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள்.

fullscreen8 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள்.

fullscreen9 ஆகையால் லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

fullscreen10 ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.

fullscreen11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen12 இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.

fullscreen13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.

fullscreen14 பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:

fullscreen15 லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.

fullscreen16 அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப்பட்ட பிரகாரம் அவர்களை எண்ணினான்.

fullscreen17 லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

fullscreen18 தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.

fullscreen19 தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.

fullscreen20 தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.

fullscreen21 கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.

fullscreen22 அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள்.

fullscreen23 கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும்.

fullscreen24 கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின் குமாரனாகிய எலியாசாப் என்பவன்.

fullscreen25 ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவும்,

fullscreen26 வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.

fullscreen27 கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.

fullscreen28 ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.

fullscreen29 கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.

fullscreen30 அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.

fullscreen31 அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.

fullscreen32 ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.

fullscreen33 மெராரியின் வழியாய் மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.

fullscreen34 அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.

fullscreen35 அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்.

fullscreen36 அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும் அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,

fullscreen37 சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.

fullscreen38 ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்.

fullscreen39 மோசேயும் ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படி எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்.

fullscreen40 அதன்பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒருமாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி,

fullscreen41 இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.

fullscreen42 அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.

fullscreen43 ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்று பேராயிருந்தார்கள்.

fullscreen44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen45 நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்.

fullscreen46 இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,

fullscreen47 நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.

fullscreen48 லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.

fullscreen49 அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,

fullscreen50 ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,

fullscreen51 கர்த்தருடைய வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.