ரூத் 1

fullscreen1 நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.

fullscreen2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.

fullscreen3 நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.

fullscreen4 இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள்.

fullscreen5 பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.

fullscreen6 கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமகளோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,

fullscreen7 தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழிநடக்கையில்,

fullscreen8 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.

fullscreen9 கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:

fullscreen10 உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.

fullscreen11 அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?

fullscreen12 என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும்,

fullscreen13 அவர்கள் பெரியவர்களாகுமட்டும் புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.

fullscreen14 அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக் கொண்டாள்.

fullscreen15 அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.

fullscreen16 அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.

fullscreen17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.

fullscreen18 அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.

fullscreen19 அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.

fullscreen20 அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.

fullscreen21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.

fullscreen22 இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.