1 Chronicles 14 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 ஈராம், தீரு எனும் நகரத்தின் அரசன், ஈராம், தாவீதுக்கு தூதுவனை அனுப்பியிருந்தான். அதோடு கேதுரு மரத்தடிகளையும், கல்தச்சர்களையும், மரவெட்டிகளையும் அனுப்பியிருந்தான். தாவீதிற்கு வீடு கட்டவே ஈராம் இவற்றை அனுப்பினான்.
2 உண்மையிலேயே கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் அரசனாக்கியதை தாவீது அறிய முடிந்தது. தாவீதின் அரசாங்கத்தைக் கர்த்தர் பலமுள்ளதாகவும் பெரிதானதாகவும் ஆக்கினார். தேவன், தாவீதையும் இஸ்ரவேல் ஜனங்களையும் நேசித்ததால் இவ்வாறு செய்தார்.
3 எருசலேம் நகரத்தில் தாவீது மேலும் பெண்களை மணந்துக்கொண்டான். அவனுக்கு ஏராளமாக ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
4 இவை எருசலேமில் தாவீதின் பிள்ளைகளின் பெயர்களாகும்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
5 இப்கார், எலிசூவா, எல்பெலேத்,
6 நோகா, நெப்பேக், யப்பியா,
7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் ஆகியோர்.
8 இஸ்ரவேலின் அரசனாகத் தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டதை பெலிஸ்தர்கள் அறிந்தனர். எனவே பெலிஸ்தர்கள் அனைவரும் தாவீதை தேடுவதற்காக வந்தார்கள். இதனை தாவீது கேள்விப்பட்டான். பிறகு தாவீது பெலிஸ்தர்களோடு போரிடச் சென்றான்.
9 பெலிஸ்தர்கள், ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கி அவர்களது பொருட்களைக் கொள்ளை அடித்தனர்.
10 தாவீது தேவனிடம், “நான் பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிடலாமா? நான் அவர்களைத் தோற்கடிக்கும்படி செய்வீரா?” என்று கேட்டான். அதற்குக் கர்த்தர் தாவீதிடம், “போ, நான் உன்னைப் பெலிஸ்தர்களை வெல்லும்படிச் செய்வேன்” என்று பதிலுரைத்தார்.
11 பிறகு, தாவீதும் அவனது ஆட்களும் பாகால் பிராசீம்வரை சென்றனர். அங்கே தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தர்களைத் தோற்கடித்தனர். தாவீது அவர்களிடம், “உடைந்த அணையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதைப்போல, என் எதிரிகளிடமிருந்து தேவன் வெற்றிக் கண்டுள்ளார்! தேவன், இதனை என் மூலம் செய்தார்” என்றான். அதனால் அந்த இடம் பாகால்பிராசீம் என்ற பெயரைப் பெற்றது.
12 பெலிஸ்தர்கள் பாகால்பிராசீமில் தங்கள் விக்கிரங்களை விட்டு விட்டு ஓடிப் போனார்கள். அவற்றை எரித்துப்போடும்படி தாவீது கட்டளையிட்டான்.
13 பெலிஸ்தர்கள், மீண்டும் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கினார்கள்.
14 தாவீது மீண்டும் தேவனிடம் ஜெபித்தான். தாவீதின் ஜெபத்திற்குத் தேவன் பதில் சொன்னார், தேவன், “நீ பெலிஸ்தர்களைத் தாக்கும்போது அவர்களுக்கு முன்பாகப் போகாதே. அதற்குப் பதிலாக அவர்களைச் சுற்றிக்கொண்டு செல். நறுமணம் வீசும் திரவங்கள் வடியும் மரங்களுக்குப்பின் மறைந்துக்கொள்.
15 அவற்றின் மீது ஏறு. அதன் மேலிருந்து உன்னால் படைகளின் வருகை ஒலியைக் கேட்க முடியும். அப்போது, பெலிஸ்தர்களை நீ தாக்கு. நான் (தேவன்) உனக்கு முன்னால் போய் பெலிஸ்தர்களைத் தோற்கடிப்பேன்!” என்றார்.
16 தேவன் சொன்னபடியே தாவீது செய்தான். அதனால் தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தரின் படைகளை வென்றனர். பெலிஸ்தர் வீரர்களை கிபியோன் முதல் காசேர்வரை அவர்கள் கொன்றார்கள்.
17 எனவே, தாவீது அனைத்து நாடுகளிலும் பிரபலமானான். தாவீதிற்கு அனைத்து தேசங்களும் பயப்படும்படி கர்த்தர் செய்தார்.