1 சகோதர சகோதரிகளே, உங்களுக்குக் கூறிய நற்செய்தியை இப்போது நீங்கள் நினைவுகூரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இச்செய்தியைப் பெற்றீர்கள். அச்செய்தியில் உறுதியாய்த் தொடருங்கள்.

2 நீங்கள் இந்நற்செய்தியால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னவற்றை தொடர்ந்து நம்புங்கள். அங்ஙனம் செய்யாத பட்சத்தில் உங்களின் விசுவாசம் வீணாய் போகும்.

3 நான் பெற்ற செய்தியை உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கூறினேன். வேத வாக்கியங்கள் கூறியபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்.

4 வேதவாக்கியங்கள் கூறியபடியே கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார்.

5 கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார்.

6 அதற்குப் பிறகு கிறிஸ்து 500 சகோதரர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர்.

7 அதன் பின்னர் கிறிஸ்து யாக்கோபுக்கும் பிறகு மீண்டும் எல்லாச் சீஷர்களுக்கும் காட்சியளித்தார்.

8 இறுதியாக வழக்கமற்ற முறையில் பிறந்த ஒருவனைப் போன்ற எனக்கும் கிறிஸ்து தன்னைக் காண்பித்தார்.

9 மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள். நான் தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தியவன். எனவே அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல.

10 ஆனால் தேவனுடைய இரக்கத்தினால் இப்போதைய எனது தகுதியைப் பெற்றேன். தேவன் என்னிடம் காட்டிய இரக்கம் வீணாய் போகவில்லை. நான் மற்ற எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் கடினமாய் உழைத்தேன். (ஆனால், உண்மையில் உழைப்பவன் நான் அல்ல. தேவனுடைய இரக்கமே என்னோடு இருந்தது.)

11 நான் உங்களுக்குப் போதித்தேனா, அல்லது மற்ற அப்போஸ்தலர்கள் உங்களுக்குப் போதித்தார்களா என்பது முக்கியமில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே விஷயத்தையே போதிக்கிறோம். இதையே நீங்களும் நம்பினீர்கள்.

12 கிறிஸ்து மரணத்தில் இருந்து எழுப்பப்பட்டார் என்று போதிக்கிறோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட முடியாது என்று உங்களில் சிலர் கூறுவதேன்?

13 மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படமாட்டார்கள் என்றால் கிறிஸ்துவும் ஒருபோதும் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம்.

14 மரணத்திலிருந்து ஒருபோதும் கிறிஸ்து எழுப்பப்பட்டிருக்கவில்லை எனில், பிறகு எங்கள் போதனை எந்தத் தகுதியுமற்றது. மேலும் உங்கள் விசுவாசம் தகுதியற்றதாகிறது.

15 நாம் தேவனைப் பற்றி பொய்யுரைக்கும் களங்கம் உடையவர்கள் ஆவோம். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பினாரென்று நாம் தேவனைக் குறித்துப் போதித்துள்ளோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம்.

16 இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம்.

17 கிறிஸ்து எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. இன்னும் நீங்கள் அனைவரும் பாவிகளாக இருக்கிறீர்கள்.

18 ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள்.

19 இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம்.

20 ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார்.

21 ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது.

22 ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம்.

23 ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.

24 அப்போது முடிவு வரும். எல்லா ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், சக்திகளையும் கிறிஸ்து அழிப்பார். பிதாவாகிய தேவனிடம் கிறிஸ்து இராஜ்யத்தை ஒப்படைப்பார்.

25 கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும்.

26 கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும்.

27 “தேவன் அவரது அதிகாரத்துக்குள் எல்லாவற்றையும் வைத்தார்” என்று வேதவாக்கியங்கள் சொல்கின்றன. “எல்லாப் பொருள்களும் அவரது (கிறிஸ்துவின்) அதிகாரத்துக்கு உட்பட்டது” எனும்போது தேவனை உள்ளடக்கிக் கூறவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தியவர் தேவனே.

28 எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.

29 மரணத்திலிருந்து மக்கள் எழுப்பப்படமாட்டார்கள் என்றால், ஞானஸ்நானம் பெற்ற மக்கள் மரணமடைந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதென்ன? மரணமடைந்த மக்கள் எழுப்பப்படவில்லை என்றால் மக்கள் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவதேன்?

30 நமது நிலை என்ன? ஒவ்வொரு மணி நேரமும் ஏன் நாம் ஆபத்துக்குள்ளாகிறோம்?

31 நான் தினமும் மரணமடைகிறேன். கிறிஸ்து இயேசுவாகிய நமது கர்த்தருக்குள் நான் உங்களைக் குறித்துப் பெருமை பாராட்டுவது போன்ற உண்மை அதுவாகும்.

32 எபேசுவில் கொடிய விலங்குகளோடு என் பெருமையை திருப்திப்படுத்தும் எண்ணத்தோடு போராடினேன் என்று கூறினால் எனக்கு எந்த நன்மையுமில்லை. மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவதில்லை என்றால், “நாம் நாளை மரணம் அடையக் கூடுமென்பதால் உண்டு பருகுவோம்.” என்று சொல்லலாமே.

33 முட்டாளாக்கப்படாதீர்கள். “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள்.”

34 சரியானபடி சிந்திக்க ஆரம்பியுங்கள். பாவம் செய்யாதீர்கள். உங்களில் சிலர் தேவனை அறியவில்லை. நீங்கள் வெட்கப்படும்படியாக இதைக் கூறுகிறேன்.

35 “எப்படி இறந்தோர் எழுப்பப்படுவர்? அவர்களுக்கு எத்தகைய சரீரம் அமையும்?” என்று சிலர் கேட்கக்கூடும்.

36 என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும்.

37 அது பூமியில் இருந்து வளரும்போது பெறுகின்ற “தோற்றத்தை” அதை பூமியில் விதைக்கும்போது பெற்றிருப்பதில்லை. நீங்கள் விதைப்பது கோதுமை அல்லது வேறு ஏதாவது ஒரு தானிய விதை மட்டுமே.

38 ஆனால் தேவன் அதற்கு என வகுக்கப்பட்டுள்ள ஓர் உருவைக் கொடுக்கிறார். ஒவ்வொரு வகையான விதைக்கும் அதற்குரிய உருவத்தை அளிக்கிறார்.

39 மாம்சத்திலான உயிர்கள் அனைத்தும் ஒரே வகையான உருவைப் பெற்றிருக்கவில்லை. மனிதர் ஒருவகை உருவையும், விலங்குகள் மற்றொரு வகை உருவத்தையும், பறவைகள் இன்னொரு வகை தோற்றத்தையும் மீன்கள் பிறிதொரு அமைப்பையும் பெற்றிருக்கின்றன.

40 வானத்துக்குரிய சரீரங்களும் உண்டு. மண்ணுக்குரிய சரீரங்களும் உண்டு. வானத்துக்குரிய சரீரங்களின் அழகு ஒருவகையானது. மண்ணுக்குரிய சரீரங்களின் அழகு மற்றொரு வகையானது.

41 சூரியனுக்கு ஒருவகை அழகும், சந்திரனுக்கு மற்றொரு வகை அழகும், நட்சத்திரங்களுக்கு வேறு வகையான அழகும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் அழகில் வேறுபட்டது.

42 மரணமடைந்த மக்கள் எழுப்பப்படும்போதும் இவ்வாறே நிகழும். மரணத்தின் பின் “புதைக்கப்பட்ட” சரீரம் கெட்டு அழியும். ஆனால் எழுப்பப்பட்ட சரீரம் அழிவற்ற வாழ்வைக் கொண்டிருக்கும்.

43 சரீரம் “புதைக்கப்படுகிறபோது” மரணத்திற்கு எந்த கௌரமும் இல்லை. ஆனால் அது மீண்டும் எழுப்பப்படும்போது அது மகிமையில் எழுப்பப்படுகிறது. புதைக்கப்படுகிறபோது பலவீனமாக இருக்கிறது. ஆனால் அது ஆற்றலில் எழுப்பப்படுகிறது.

44 “அடக்கம் செய்யப்பட்ட” சரீரம் பூத சரீரம். எழுப்பப்படும்போது அது ஆவிக்குரிய சரீரமாகும். பூத சரீரம் ஒன்று உண்டு. எனவே ஆவிக்குரிய சரீரமும் உண்டு.

45 இதே பொருளில் “முதல் மனிதன் (ஆதாம்) உயிருள்ளவனானான்.” இறுதி ஆதாமாகிய கிறிஸ்துவோ உயிரளிக்கும் ஆவியானவரானார் என்று வேதவாக்கியம் கூறுகிறது.

46 ஆவிக்குரிய சரீரம் முதலில் தோன்றவில்லை. இயற்கையான சரீரத்துக்குரிய மனிதனே முதலில் தோன்றினான். பின்னரே ஆவிக்குரிய மனிதனின் தோற்றம் அமைந்தது.

47 முதல் மனிதன் பூமியின் மண்ணிலிருந்து வந்தவன். இரண்டாம் மனிதன் (கிறிஸ்து) பரலோகத்திலிருந்து வந்தவர்.

48 மக்கள் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் பூமியில் இருந்து வந்த முதல் மனிதனைப் போன்றவர்கள். ஆனால் பரலோகத்துக்குரிய மனிதர்கள் பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றவர்கள்.

49 நாம் பூமியிலிருந்து வந்த மனிதனைப் போன்று அமைக்கப்பட்டோம். எனவே பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றும் அமைக்கப்படுவோம்.

50 சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன். மாம்சமும், இரத்தமும் (பூத சரீரம்) தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கமுடியாது! அழியத்தக்க பொருள் அழிவற்ற பொருளின் பாகமாக மாற முடியாது!

51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம்.

52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.

53 அழியக் கூடிய இந்த சரீரம் என்றும் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். மரணமுறும் இந்த உடம்பு மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும்.

54 எனவே அழியக்கூடிய இந்த சரீரம் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். மரணத்திற்குள்ளாகும் இச்சரீரம் மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். இது நடந்தேறும்போது வேத வாக்கியத்தின் வாசகம் உண்மையாகும். “மரணம் வெற்றிக்குள் விழுங்கப்பட்டது”

55 “மரணமே, உன் வெற்றி எங்கே? பாதாளமே, அழிக்கும் உன் வல்லமை எங்கே?”

56 மரணத்தின் ஆற்றலே பாவம். பாவத்தின் ஆற்றலே சட்டமாகும்.

57 நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் நமக்கு வெற்றியை அருளினார்.

58 எனவே என் அன்பான சகோதர சகோதரிகளே, உறுதியாய் நில்லுங்கள். எதுவும் உங்களை மாற்றாமல் இருக்கட்டும். எப்போதும் முழுமையாக உங்களைக் கர்த்தரின் பணிக்கு ஒப்புக்கொடுங்கள். கர்த்தருக்கான உங்கள் பணி வீணாகப் போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

1 Corinthians 15 ERV IRV TRV