1 Samuel 12 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது: “நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின்படி நடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.2 இதோ! ஓர் அரசர்! இவர் உங்களை வழிநடத்துவார். எனக்கோ வயதாகித் தலைநரைத்து விட்டது. என் புதல்வர்தாம் இருக்கின்றனர். என் இளமைமுதல் இந்நாள்வரை நான் உங்களை வழி நடத்தியிருக்கிறேன்.3 இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். ஆண்டவர் முன்பும் அவர் திருப்பொழிவு செய்தவர் முன்பும் என்மீது குற்றம் சாட்ட முடியுமா? யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டோனா? யாருடைய கழுதையாவது நான் எடுத்துக் கொண்டேனா? யாரையாவது நான் ஏமாற்றினேனா? யாரையாவது நான் ஒடுக்கினேனா? யாரிடமிருந்தாவது கையூட்டுப் பெற்று நான் அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா? சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்.”4 அதற்கு அவர்கள், “நீர் எங்களை ஏமாற்றவில்லை, ஒடுக்கவில்லை, கையூட்டு யாரிடமும் பெறவில்லை” என்றார்கள்.5 அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் என்னிடம் எக்குற்றமும் காணவில்லை என்பதற்கு இன்று ஆண்டவர் சாட்சி. அவர் திருப்பொழிவு செய்தவரும் சாட்சி!” அதற்கு அவர்கள், “அவரே சாட்சி!” என்றார்கள்.⒫6 மீண்டும் சாமுவேல் மக்களிடம் கூறியது: “ஆண்டவர் தாம் மோசையையும் ஆரோனையும் நியமித்து, உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டினின்று கொண்டு வந்தார்.7 ஆண்டவர் திருமுன் நில்லுங்கள். உங்களுக்காகவும் உங்கள் மூதாதையருக்காகவும் ஆண்டவர் செய்த அனைத்து மீட்பின் செயல்களையும் முன் வைத்து அவர் முன்னிலையில் உங்களோடு வழக்காடுவேன்.8 யாக்கோபு எகிப்திற்குச் சென்ற பின்,உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் மோசையையும் ஆரோனையும் அனுப்பினர். அவர்கள் உங்கள் மூதாதயரை எகிப்தினின்று கொண்டுவந்து இவ்விடத்தில் குடியேறச் செய்தார்.9 உங்கள் மூதாதையர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தபோது, அவர் அவர்களை ஆசோரின் படைத்தலைவன் சீசராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும் மோவாபு அரசரின் கையிலும் விட்டு விட்டார். இவர்கள் அவர்களோடு போரிட்டனர்.10 அவர்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்டு, 'நாங்கள் ஆண்டவரை புறக்கணித்தோம். பாகால்களையும் அஸ்தரோத்துகளையும் வழிபட்டுப் பாவம் செய்துள்ளோம். இப்போது எங்களை எங்கள் எதிரிகளிடமிருந்து விடுவியும். நாங்கள் உம்மையே வழிபடுவோம்' என்றனர்.11 ஆண்டவர் எருபாகால், பேதான், இப்தாகு, சாமுவேல் ஆகியோரை அனுப்பி, சுற்றிலுமிருந்த உங்கள் எதிரிகளின் கையினின்று உங்களை விடுவித்தார். நீங்களும் அச்சமின்றி வாழ்ந்தீர்கள்.12 அம்மோனிய அரசன் நாகாசு உங்களை எதிர்த்து வருவதைக் கண்டபொழுது நீங்கள், 'இல்லை, எங்களை அரசாள எங்களுக்கு ஓர் அரசர் வேண்டும்!' என்று என்னிடம் கூறினீர்கள்.⒫13 இதோ நீங்கள் விரும்பித் தேர்ந்து கொண்ட அரசர்! நீங்கள் வேண்டியவாறு உங்களை ஆள ஆண்டவர் ஓர் அரசரைத் தந்துள்ளார்.14 நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்கு பணிந்து, அவர் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் கட்டளைக்கு எதிராகக் கலகம் விளைவிக்காமல் இருந்தால், நீங்களும் உங்களை ஆளும் அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுபவராக இருப்பீர்கள்.15 ஆனால், நீங்கள் ஆண்டவர் குரலுக்குச் செவிக் கொடுக்காமல், அவர் தம் கட்டளைக்கு எதிராக கலகம் விளைவித்தால், ஆண்டவரின் கை உங்கள் மூதாதையருக்கு எதிராக இருந்தது போல், உங்களுக்கும் எதிராகவும் இருக்கும்.16 இப்பொழுது ஆண்டவர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யவிருக்கும் மாபெரும் நிகழ்ச்சியை நின்று பாருங்கள்.17 இன்று கோதுமை அறுவடையன்றோ? இடியும் மழையும் அனுப்பும்படி நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன். எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்டது, ஆண்டவர் கண்முன் நீங்கள் செய்த மாபெரும் குற்றம் என்பதை இதனால் நீங்கள் கண்டுணர்வீர்கள்."⒫18 சாமுவேல் ஆண்டவரிடம் மன்றாட, ஆண்டவர் அன்று இடியும் மழையும் அனுப்பினார். மக்கள் அனைவரும் ஆண்டவரிடமும் சாமுவேலிடமும் மிகுந்த அச்சம் கொண்டனர்.19 அனைத்து மக்களும் சாமுவேலை நோக்கி, “நாங்கள் சாகாவண்ணம், உம் அடியார்களுக்காக உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும். ஏனெனில், நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தோடும் எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்ட இந்தக் குற்றமும் சேர்ந்து கொண்டது” என்றனர்.⒫20 பின் சாமுவேல் மக்களிடம் கூறியது: “அஞ்ச வேண்டாம், நீங்கள் இக்குற்றங்களை எல்லாம் செய்திருப்பினும் ஆண்டவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகாமல் அவரையே உங்கள் முழு மனத்தோடு வழிபடுங்கள்.21 பயனற்ற, விடுவிக்க இயலாத சிலைகளை நாடிச் செல்லவேண்டாம். அவை வீணே.22 தம் மாபெரும் பெயரின் பொருட்டு ஆண்டவர் தம் மக்களைப் புறங்கணிக்கமாட்டார். ஏனெனில், உங்களை தம் மக்களாக்க அவரே திருவுளங் கொண்டார்.23 என்னைப் பொறுத்தமட்டில், உங்களுக்காக மன்றாடுவதை நிறுத்துவதனால் ஆண்டவருக்கு எதிராக புரியும் குற்றம் என்னை விட்டு விலகி இருக்கட்டும். நான் உங்களுக்கு நல்ல, நேரிய வழியைக் கற்றுக் கொடுப்பேன்.24 ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி நடந்து, உங்கள் முழு மனத்தோடு உண்மையாகவே அவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்துப் பாருங்கள்.25 ஆனால், நீங்கள் தொடர்ந்து தீமை செய்தால் நீங்களும் உங்கள் அரசனும் அழிந்து விடுவீர்கள்.”1 Samuel 12 ERV IRV TRV