1 Samuel 3 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.2 அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை.3 கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.4 அப்போது ஆண்டவர், “சாமுவேல்” என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி,5 ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.6 ஆண்டவர் மீண்டும் “சாமுவேல்” என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்” என்றார்.7 சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.8 மூன்றாம் முறையாக ஆண்டவர் “சாமுவேல்” என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார்.9 பின்பு, ஏலி சாமுவேலை நோக்கி “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.⒫10 அப்போது ஆண்டவர் வந்து நின்று, “சாமுவேல், சாமுவேல்” என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், “பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று மறு மொழி கூறினான்.⒫11 ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “இதோ கேட்போர் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை நான் இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.12 அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராக பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன்.13 ஏனெனில், அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன்.14 ஆகவே, ஏலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று நான் ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.”15 சாமுவேல் காலை வரை படுத்திருந்தான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அஞ்சினான்.⒫16 பிறகு ஏலி “சாமுவேல், என் மகனே!”, என்று கூப்பிட, சாமுவேல். “இதோ அடியேன்” என்று பதில் சொன்னான்.17 அவர் அவனை நோக்கி உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன? தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் எதையாவது மறைத்தால், கடவுள் உனக்கு தகுந்தவாறும் அதற்கு மேலும் செய்வார்” என்றார்.18 சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவில்லை. அதற்கு அவர், “அவர் ஆண்டவர் தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும்” என்றார்.⒫19 சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.20 சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.21 ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.1 Samuel 3 ERV IRV TRV