1 Samuel 8 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார்.2 அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்; இளையவனின் பெயர் அபியா; இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.3 ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.⒫4 எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர்.5 அவர்கள் அவரிடம், “இதோ உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்” என்று கேட்டுக் கொண்டனர்.⒫6 ‘எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத் தாரும்’ என்று அவர்கள் கேட்டது சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார்.7 ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர்.8 நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்து அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள்.9 இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால், அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து”.⒫10 ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்.11 “உங்கள் மீது ஆட்சி செய்யும் அரசனின் உரிமைகளாவன: அவன் உங்கள் புதல்வர்களை தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான்.12 அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஐம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விளைச்சலை அறுவடை செய்பவராகவும், தன் போர்க்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.13 மேலும், அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறவர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சுடுபவர்களாகவும், வைத்துக்கொள்வான்.14 அவன், உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலருக்குக் கொடுப்பான்.15 உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும் கொடுப்பான்.16 உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில்* சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான்.17 உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளர்களாய் இருப்பீர்கள்.18 அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்.”⒫19 மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்து, “இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.20 அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார்” என்றனர்.21 மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார்.22 ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “அவர்கள் குரலுக்குச் செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு, சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, “ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும்” என்றார்.