1 சகோதர சகோதரிகளே! நான் உங்களுக்கு வேறு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்குக் கற்பித்தோம். நீங்கள் அத்தகைய விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மென்மெலும் அவ்வாறு வாழ கர்த்தராகிய இயேசுவின் பேரில் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு ஊக்கப்படுத்தவும் செய்கிறோம்.
2 நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம்.
3 நீங்கள் பரிசுத்தமுடன் இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
4 உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும்.
5 உங்கள் சரீரத்தை வெறித்தனமான உணர்வுகளுக்கு ஒப்படைக்காதீர்கள். தேவனை அறிந்துகொள்ளாதவர்கள்தான் அதனை அதற்குப் பயன்படுத்துவார்கள்.
6 உங்களில் எவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் சகோதரர்களை இக்காரியத்தில் ஏமாற்றவோ, கெடுதல் செய்யவோ முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை கர்த்தர் தண்டிப்பார். இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி எச்சரித்திருக்கிறோம்.
7 நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை.
8 எனவே இந்தப் போதனைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவன், மனிதருக்கு அல்ல, தேவனுக்கே கீழ்ப்படிய மறுக்கிறான். அவர் ஒருவரே நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தர வல்லவர்.
9 கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார்.
10 மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும் மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
11 சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்.
12 இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும்.
13 சகோதர சகோதரிகளே! இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நம்பிக்கையற்ற மக்களைப் போன்று நீங்கள் வருத்தம் கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை.
14 இயேசு இறந்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறோம். ஆகையால் இயேசுவை விசுவாசித்து மரித்துப்போன எல்லாரையும் தேவன் இயேசுவோடுகூட ஒன்று சேர்ப்பார்.
15 கர்த்தரின் செய்தியையே நாங்கள் இப்போது உங்களுக்குக் கூறுகிறோம். இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் கர்த்தர் வரும்போதும் ஒருவேளை வாழ்ந்துகொண்டிருப்போம். ஏற்கெனவே மரித்தவர்கள் கர்த்தரோடு இருப்பார்கள். உயிரோடிருக்கிற நாமும் அவரோடிருப்போம். ஆனால் நாம் அவர்களுக்கு (ஏற்கெனவே இறந்தவர்களுக்கு) முந்திக்கொள்வதில்லை.
16 கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள்.
17 அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.
18 ஆகவே இவ்வார்த்தைகளால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
1 Thessalonians 4 ERV IRV TRV