2 Chronicles 30 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாட ஆண்டவரின் இல்லத்திற்கு வருமாறு இஸ்ரயேல், யூதா மக்கள் அனைவருக்கும் ஆள்மூலமும் எப்ராயிம், மனாசே குலத்தாருக்கு மடல் மூலமும் எசேக்கியா அழைப்பு விடுத்தார்.2 பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதாக அரசரும், எல்லாத் தலைவர்களும், எருசலேமின் மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்.3 குறிப்பிட்ட காலத்தில் கொண்டாட இயலாததற்குக் காரணம், போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை; மக்களும் எருசலேமில் வந்து கூடவில்லை.4 அரசருக்கும் மக்கள் சபையார் எல்லாருக்கும் இத்திட்டம் சரியெனப்பட்டது.⒫5 எருசலேமில் இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாடப் பெயேர்செபாமுதல் தாண்வரை இருந்த இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கும் ஓர் அறிவிப்பை அனுப்ப முடிவு செய்தனர்; ஏனெனில், எழுதியுள்ளபடி மக்கள் பெரும் தொகையினராய் அதனைக் கொண்டாடவில்லை.6 அரசரிடமிருந்தும் தலைவர்களிடமிருந்தும் மடல்களைப் பெற்றுக்கொண்ட அஞ்சலர், அரச கட்டளைப்படி, இஸ்ரயேல், யூதா நாடெங்கும் சென்று, “இஸ்ரயேல் மக்களே! ஆபிரகாம், ஈசாக்கு இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; அப்பொழுது அசீரிய மன்னனின் கைக்குத் தப்பிய எஞ்சியோராகிய உங்களிடம் அவர் மீண்டும் வருவார்.7 தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகத் தீமையானதையே செய்த உங்கள் தந்தையர், சகோதரர்கள் போன்று நீங்கள் இருக்க வேண்டாம்; நீங்களே காண்பதுபோல், அவர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார்.8 உங்கள் மூதாதையரைப் போல் நீங்களும் முரட்டுப் பிடிவாதம் கொண்டவராயிருக்க வேண்டாம். மாறாக, ஆண்டவருக்குப் பணியுங்கள், அவர் என்றென்றும் புனிதமாக்கியுள்ள திருத்தலத்திற்கு வந்து, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கு ஊழியம் புரியுங்கள். அப்பொழுது அவரது கோபக்கனல் உங்களை விட்டு நீங்கும்.9 நீங்கள் ஆண்டவரிடம் திரும்பி வந்தால், உங்கள் சகோதரர்களும் புதல்வர்களும் தங்களைச் சிறைப்படுத்தியோரிடமிருந்து இரக்கம் பெற்று, இந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். ஏனெனில், உங்கள் கடவுளாம் ஆண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்; நீங்கள் அவர்பால் திரும்பினால் அவர் தம் முகத்தை உங்களிடமிருந்து திருப்பிக்கொள்ளார்” என்றனர்.⒫10 அஞ்சலர், எப்ராயிம், மனாசே நாடுகளிலும் செபுலோனிலும்கூட நகர் நகராகச் சென்றனர். ஆனால், அவற்றின் மக்கள் இவர்களை எள்ளி நகையாடினர்.11 ஆயினும், ஆசேர், மனாசே செபுலோன் ஆகியவற்றிலிருந்து சிலர் தம்மையே தாழ்த்திக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர்.12 ஆண்டவரின் வாக்கிற்கு ஏற்பவும், அரசர், தலைவர்களின் கட்டளைப்படியும் யூதாவினர் நடப்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் அவர்களை ஒருமனப்படுத்தியது.13 இரண்டாம் மாதத்தில் புளியாத அப்பத் திருவிழாவைக் கொண்டாட எருசலேமில் மக்கள் சபையார் மாபெரும் அளவில் கூடினர்.14 அவர்கள் எருசலேமில் இருந்த பலிபீடங்கள், தூபபீடங்கள் எல்லாவற்றையும் தகர்த்து, கிதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தனர்.15 இரண்டாம் மாதத்தின் பதினான்காம் நாள் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினர்; குருக்களும் லேவியரும் வெட்கம் அடைந்தவராய், தங்களையே தூய்மையாக்கிக் கொண்டனர். பின்னர், ஆண்டவரின் இல்லத்திற்கு எரிபலியைக் கொண்டு வந்தனர்.16 கடவுளின் மனிதராம் மோசேயின் திருச்சட்டப்படி, அவர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றனர். லேவியர் கையினின்று பெற்ற இரத்தத்தை குருக்கள் தெளித்தனர்.17 சபையிலிருந்த பலர் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, லேவியர் பாஸ்காப் பலியை அதனை புனிதப்படுத்த இயலாத தீட்டுடையோர் சார்பாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர்.18 இருப்பினும், மக்கள் பலர் — எப்ராயிம், மனாசே, இசக்கார், செபுலோன் குலத்தார் பலர் — தங்களையே தூய்மையாக்கிக் கொள்ளாமல், எழுதியுள்ளதற்கு மாறாக, பாஸ்காவை உண்டனர். எனவே, எசேக்கியா வேண்டியது: “நல்லவரான ஆண்டவரே! மன்னித்தருளும்.19 தன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைத் தேட மனம் கொண்ட ஒவ்வொருவனையும் — அவன் திருத்தலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே தூய்மையாக்கிக் கொள்ளவில்லையெனினும் — மன்னித்தருளும்.”20 ஆண்டவர் எசேக்கியாவின் வேண்டுதலைக் கேட்டு, மக்களுக்கு நலமளித்தார்.21 எருசலேமில் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் புளியாத அப்பத் திருவிழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏழு நாள்கள் கொண்டாடினர். ஆண்டவரை லேவியர் நாள்தோறும் புகழ்ந்தனர்; குருக்கள் பேரொலி இசைக்கருவிகளை மீட்டிப் போற்றினர்.22 ஆண்டவரின் பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட லேவியர் அனைவரின் உள்ளத்தையும் தொடுமாறு எசேக்கியா பேசினார். விழா உணவை அவர்கள் ஏழு நாள் உண்டு நல்லுறவுப் பலிகளைச் செலுத்தி, அவர்களின் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் புகழ்ந்து போற்றினர்.⒫23 மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாட, மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்; அவ்வாறே, அவர்கள் அக்களிப்புடன் மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாடினர்.24 யூதாவின் அரசர் எசேக்கியா மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், எழுபதாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தார், அவ்வாறே, தலைவர்களும் மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தனர். குருக்கள் பலர் தங்களையே தூய்மையாக்கிக்கொண்டனர்.25 யூதாவின் அனைத்துச் சபையார், குருக்கள், லேவியர், இஸ்ரயேலின் அனைத்து மக்கள் சபையார் இஸ்ரயேலிலிருந்து வந்தவரும் யூதாவில் வாழ்ந்தவருமான அந்நியர் அனைவரும் அக்களிப்புற்றனர்.26 எருசலேமில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனெனில், இஸ்ரயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் எருசலேமில் இப்படி நடந்ததே இல்லை.27 குருக்களும் லேவியரும் எழுந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அவர்களது மன்றாட்டு கேட்கப்பட்டது. கடவுளின் திருஉறைவிடமான வானத்தை அவர்களது வேண்டுதல் எட்டியது.2 Chronicles 30 ERV IRV TRV