1 சுழல் காற்றின் மூலம் எலியாவைக் கர்த்தர் பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபொழுது, எலியா எலிசாவுடன் கில்காலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள்.
2 எலியா எலிசாவிடம், “நீ இங்கே இரு. கர்த்தர் என்னைப் பெத்தேலுக்குப் போகச்சொன்னார்” என்றான். ஆனால் எலிசாவோ, “நான் உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் உங்கள் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குச் சென்றார்கள்.
3 சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம் வந்து, “இன்று உங்கள் எஜமானனான எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்போகும் செய்தி தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆமாம், எனக்குத் தெரியும். அது பற்றி பேசவேண்டாம்” என்று பதிலளித்தான்.
4 அங்கே எலியா எலிசாவிடம், “நீ இங்கேயே இரு. கர்த்தர் என்னிடம் எரிகோவிற்குப் போகச் சொன்னார்” என்றான். ஆனால் எலிசாவோ, “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டு கூறுகிறேன்” என்றான். எனவே அவர்கள் இருவருமாக எரிகோவிற்குச் சென்றனர்.
5 எரிகோவில் சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம், “இன்று உனது எஜமான் எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறாராமே?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆமாம், அது தெரியும். அதைப் பற்றி பேசவேண்டாம்” என்றான்.
6 எலியா எலிசாவிடம், “நீ தயவுசெய்து இங்கேயே இரு. யோர்தான் ஆற்றுக்குப் போகுமாறு என்னிடம் கர்த்தர் சொன்னார்” என்றான். அதற்கு அவன், “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் சென்றனர்.
7 அங்கே 50 பேர்கள் அடங்கிய தீர்க்கதரிசி குழு அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது. எலியாவும் எலிசாவும் யோர்தான் ஆற்றின் அருகில் நின்றார்கள். அவர்கள் நின்ற இடத்தை நோக்கியபடி மற்ற 50 பேர்களும் அவர்களிடம் இருந்து விலகி தூரத்தில் நின்றார்கள்.
8 எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி தண்ணீரில் அடிக்க தண்ணீர் இரண்டு பாகமாகி விலகிப்போயிற்று. அவர்கள் உலர்ந்த தரையில் நடந்து அக்கரைக்குக் கடந்து போனார்கள்.
9 பின்னர் எலியா எலிசாவிடம், “என்னை உன்னிடத்திலிருந்து தேவன் எடுத்துக்கொள்வதற்கு முன் உனது விருப்பம் என்ன?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “உங்களிடம் உள்ள ஆவி எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்கவேண்டும்” என்றான்.
10 எலியா, “கஷ்டமானதையே கேட்டிருக்கிறாய். நான் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பொழுது நீ என்னைப் பார்ப்பாயானால், இது நடக்கும். ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் என்னை உன்னால் பார்க்க முடியாமல் போகுமேயானால் இது நடக்காது” என்றான்.
11 எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துச் சென்றார்கள். திடீரென்று இரதமும் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்தன. அவை நெருப்பாகத் தோன்றின! எலியா சுழற்காற்றால் வானுலகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்.
12 எலிசா இதனைப் பார்த்து, “என் தந்தையே! என் தந்தையே! இஸ்ரவேலின் இரதமும் குதிரை வீரருமானவரே!” என்று சத்தமிட்டான். இதற்குப் பிறகு எலியாவை எலிசா பார்க்கவில்லை. அவன் தனது ஆடையைக் கிழித்து தன் சோகத்தை வெளிப்படுத்தினான்.
13 எலியாவின் மேலாடை தரையிலே விழுந்து கிடந்தது. அதனை எலிசா எடுத்துக்கொண்டு யோர்தான் கரைக்குப் போனான். மேலாடையை தண்ணீரில் அடித்து, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்று கேட்டான்.
14 மேலாடையால் தண்ணீரை அடித்த உடனே தண்ணீர் வலதுபுறமாகவும் இடது புறமாகவும் பிரிந்துபோயிற்று! எலிசா ஆற்றைக் கடந்து போனான்.
15 இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த எரிகோவின் தீர்க்கதரிசிகள் எலிசாவைப் பார்த்து “எலியாவின் ஆவி இப்பொழுது எலிசாவின் மேல் உள்ளது!” என்றார்கள். அவர்கள் எலிசாவை சந்திக்க வந்தார்கள். அவர்கள் அவனுக்கு முன்பாகத் தரையில் குனிந்து வணங்கினார்கள்.
16 அவர்கள் எலிசாவிடம், “பாருங்கள், எங்களிடம் தகுதியான 50 பேர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து நாங்கள் சென்று உங்கள் எஜமானைத் தேட எங்களை அனுமதியுங்கள். ஒரு வேளை தேவனுடைய ஆவி அவரைத் தூக்கிச்சென்று எங்காவது மலையிலோ, அல்லது பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கலாம்!” என்றார்கள். அதற்கு எலிசா, “இல்லை, எலியாவைத் தேட ஆட்களை அனுப்பாதீர்கள்!” என்றான்.
17 எலிசா குழப்பமடையும்வரை தீர்க்கதரிசி குழு அவனைக் கெஞ்சியது. பின் எலிசா, “நல்லது, எலியாவைத் தேட ஆட்களை அனுப்புங்கள்” என்றான். எலியாவைத் தேட தீர்க்கதரிசி குழு 50 ஆட்களை அனுப்பியது. மூன்று நாட்கள் தேடியும், அவர்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
18 எனவே அந்த ஆட்கள் எலிசா தங்கியிருந்த எரிகோவிற்குச் சென்றார்கள். அவர்கள் எலிசாவிடம் தங்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றார்கள். எலிசா அவர்களிடம், “நான் உங்களிடம் போகவேண்டாம் என்று கூறினேன்” என்றான்.
19 நகர ஜனங்கள் எலிசாவிடம் வந்து, “ஐயா, இந்த நகரம் நல்ல இடத்தில் அமைந்துள்ளதை நீங்கள் பார்க்கமுடியும். ஆனால் தண்ணீரோ மிகவும் மோசம். அதனால் இங்கு நல்ல விளைச்சல் இல்லை” என்றனர்.
20 எலிசாவோ, “ஒரு புதிய தோண்டியில் உப்பைப் போட்டுக்கொண்டு வாருங்கள்” என்றான். அவர்கள் அப்பாத்திரத்தை எலிசாவிடம் கொண்டு வந்தனர்.
21 அவன் தண்ணீர் பாய்கிற இடத்திற்கு போனான். அதில் உப்பைப் போட்டான். “அவன், ‘நான் இந்த தண்ணீரை சுத்தமாக்குகிறேன்! இப்பொழுதிலிருந்து இந்த தண்ணீர் எவ்வித மரணத்துக்கும் காரணமாக இருக்காது. விளை நிலங்களில் தொடர்ந்து நல்ல விளைச்சலைத் தரும்’ என்று கர்த்தர் சொல்கிறார்” என்றான்.
22 எலிசா சொன்னதுபோல் தண்ணீர் பரிசுத்தமானது. இன்றளவும் அத்தண்ணீர் சுத்தமாக இருக்கிறது. அனைத்துமே எலிசா சொன்னதுபோல் நடந்தது.
23 எலிசா அங்கிருந்து பெத்தேல்வரை சென்றான். அவன் மலைமீது ஏறிக்கொண்டிருந்தபொழுது, சில சிறுவர்கள் நகரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். அவர்கள் அவனை கேலிச்செய்தார்கள். அவர்கள், “வழுக்கைத் தலையனே மேலே போ! வழுக்கைத் தலையனே மேலே போ” என்றனர்.
24 எலிசா திரும்பி அவர்களைப் பார்த்தான். அவர்களுக்குத் தீமை ஏற்படுமாறு கர்த்தரை வேண்டினான். உடனே இரண்டு கரடிகள் காட்டிலிருந்து வந்து அவர்களைத் தாக்கி 42 சிறுவர்களைக் கொன்றுபோட்டன.
25 எலிசா பெத்தேலிலிருந்து கர்மேல் மலைக்குச் சென்றான். பின்னர் அங்கிருந்து சமாரியாவிற்குத் திரும்பிச்சென்றான்.
2 Kings 2 ERV IRV TRV