2 Kings 21 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். எப்சிபா என்பவரே அவன் தாய்.2 இஸ்ரயேலர் முன்னிருந்து ஆண்டவர் விரட்டிய வேற்றினத்தாரின் அருவருப்புகளை அவன் பின்பற்றி ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.3 அவன் அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த தொழுகை மேடுகளை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்; இஸ்ரயேல் அரசன் ஆகாசு செய்தது போல், அசேராக் கம்பங்களை நிறுவினான்; வானத்துப் படைகளையெல்லாம் வணங்கி வழிபட்டான்.4 ‘எருசலேமில் என் பெயர் விளங்கச் செய்வேன்’ என்று ஆண்டவர் கூறியிருந்த அவரது கோவிலில் அவன் பலிபீடங்களை நிறுவினான்.5 ஆண்டவரின் இல்லத்தின் இரு முற்றங்களிலும் வானத்துப் படைகளுக்கெல்லாம் அவன் பலிபீடங்களைக் கட்டினான்.6 மேலும், அவன் தன் மகனை நெருப்பில் பலியாக்கினான்; குறி கேட்பதிலும் சகுனம் பார்ப்பதிலும் நம்பிக்கை கொண்டு குறி கூறுபவர்களோடும், சகுனம் பார்ப்பவர்களோடும் தொடர்பு கொண்டு ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து ஆண்டவருக்குச் சினமூட்டினான்.⒫7 மேலும், அவன் அசேராவின் செதுக்கிய சிலையை ஆண்டவரின் இல்லத்தில் நிறுவினான். இவ்விடத்தைப் பற்றி ஆண்டவர் தாவீதிடமும் அவருடைய மகன் சாலமோனிடமும் பின்வருமாறு கூறினார்: “இக்கோவிலிலும் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேமிலும், எனது பெயரை என்றென்றும் விளங்கச் செய்வேன்.8 நான் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்கள் பின்பற்றி, என் அடியான் மோசே அவர்களுக்கு அளித்த சட்டம் முழுவதையும் கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களை நான் அவர்கள் மூதாதையருக்கு அளித்த நாட்டிலிருந்து வெளியேறி அலைந்து திரிய விடமாட்டேன்.”9 ஆனால், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில், மனாசே அவர்களை வழி தவறி நடக்கச் செய்தான். இஸ்ரயேலர், தம் முன்னிலையில் ஆண்டவர் அழித்த வேற்றினத்தாரைவிட அதிகமாக, தீயன செய்தனர்.⒫10 ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:11 “யூதாவின் அரசன் மனாசே அருவருப்பான வழக்கங்களில் ஈடுபட்டுத் தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்தவற்றைவிட மிகவும் தீயன செய்தான். சிலைகளை வழிபடச் செய்து யூதாவைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கினான்.12 எனவே, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ! நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும், கேட்கும் ஒவ்வொருவருடைய இரு காதுகளும் அதிரும் அளவுக்கு, கேடு வரச் செய்வேன்.13 சமாரியாவுக்கு எதிராக நான் பிடித்த அளவுநூலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராக நான் பிடித்த தூக்குநூலையும் எருசலேமுக்கு எதிராகப் பிடிப்பேன். ஒருவர் உள்ளும் புறமும் தட்டினைத் துடைத்துத் தூய்மையாக்குவதுபோல நானும் எருசலேமைத் துடைத்துத் தூய்மையாக்குவேன்.14 எனவே, எனது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரைக் கைவிட்டு, அவர்களின் பகைவரிடம் ஒப்புவிப்பேன். அப்போது அவர்கள் எதிரிகளுக்கெல்லாம் இரையாகவும் கொள்ளைப் பொருளாகவும் இருப்பர்.15 ஏனெனில், அவர்களின் மூதாதையர் எகிப்திலிருந்து வெளிவந்த நாள்முதல் இன்றுவரை இடைவிடாமல் என் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து எனக்குச் சினமூட்டியுள்ளனர்.”⒫16 மனாசே, எருசலேமில் ஒருமுனை முதல் மறு முனைவரை நிரம்பும் படியாக, மிகுதியான மாசற்றவரின் குருதியைச் சிந்தினான். இவ்வாறு, அவன் பாவம் செய்ததோடு யூதா மக்களை ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ய வைத்துப் பாவத்துக்கு உள்ளாக்கினான்.17 மனாசேயின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் அவன் செய்த பாவமும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?18 மனாசே தன் மூதாதையரோடு துயில்கொண்டு, ‘ஊசாப் பூங்கா’ என்ற அவனது அரண்மனைப் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் ஆமோன் அரசனானான்.19 ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு, அவன் ஈராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். யோற்றுபாவைச் சார்ந்த ஆரூசின் மகள் மெசுல்லமேத்து என்பவளே அவன் தாய்.20 அவன் தன் தந்தை மனாசேயைப் போலவே ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.21 தன் தந்தை நடந்த வழியிலெல்லாம் அவனும் நடந்தான்; தன் தந்தை வணங்கி வழிபட்டு வந்த சிலைகளை அவனும் வழிபட்டான்.22 அவன் தன் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தான்; ஆண்டவரின் வழியில் நடக்கவே இல்லை.⒫23 ஆமோனுடைய அலுவலர் அவ்வரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவனை அவன் மாளிகையிலேயே கொலை செய்தனர்.24 ஆனால், நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தவர்களையெல்லாம் கொன்றுவிட்டு, அவனுடைய மகன் யோசியாவை அவனுக்குப் பதிலாக அரசனாக்கினர்.25 ஆமோனின் பிற செயல்கள், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?26 ஊசாப் பூங்காவிலிருந்த அவனது கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோசியா அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.2 Kings 21 ERV IRV TRV