2 Samuel 24 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மீண்டும் இஸ்ரயேல்மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், “புறப்பட்டுப் போய் இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார்.2 அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, “மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையை கணக்கிடுங்கள்” என்றார்.⒫3 யோவாபு அரசரை நோக்கி, “ஆண்டவராம் கடவுள் வீரர்களை இப்போது இருப்பதைப்போல் இன்னும் நூறு மடங்கு மிகுதிப்படுத்துவாராக! என் தரைவராம் அரசர் இதைக் காண்பாராக! ஆனால், என் தலைவராம் ஆண்டவர் இதை செய்ய விரும்புவது ஏன்?’ என்று கேட்டார்.4 இருப்பினும் யோவாபுக்கும் படைத்தலைவருக்கும் எதிராக அரசரின் வார்த்தையே நிலைத்தது. இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடுவதற்காக யோவாபும் படைத் தலைவர்களும் அரசர் முன்னிலையினின்று புறப்பட்டுச் சென்றனர்.⒫5 அவர்கள் யோர்தானைக் கடந்து, காத்துப் பள்ளத்தாக்கின் நடுவே இருந்த நகரின் வலப்புறம் ஆரோயரில் கூடாரமிட்டு, பின் யாசேர் நோக்கிச் சென்றனர்.6 கிலயாது வந்தடைந்த பிறகு, தத்தீம் கொத்சி எல்லைக்குள் சென்று, தாண்யானுக்கும் சீதோன் சுற்றுப்புறத்திற்கும் சென்றனர்.7 பிறகு தீர் கோட்டைக்கும், இவ்வியர் கானானியரின் அனைத்து நகரங்களுக்கும் சென்று, அங்கிருந்து யூதாவின் தென்புறமான பெயேர்செபாவரை சென்றனர்.8 இவ்வாறு அவர்கள் நாடெங்கும் சென்று ஒன்பது மாதங்களும் இருபது நாள்களும் கடந்தபின் எருசலேமை வந்தடைந்தனர்.9 யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு பேர் யூதாவிலும் இருந்தனர்.⒫10 வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்தபிறகு தாவீது மனம் வருந்தினார். “நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உன் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில், நான் பெரும் மதியீனனாய் நடந்துகொண்டேன்” என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார்.⒫11 தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:12 “நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: ‘நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன் படி நான் செய்வேன்’”.13 காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: “உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப்பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்”.⒫14 “நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில், அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழவேண்டாம்” என்று தாவீது கூறினார்.⒫15 ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம் வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர்.16 வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, “போதும்! உன் கையைக் கீழே போடு” என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார்.⒫17 மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, “பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!” என்று கூறினார்.⒫18 அன்று காது தாவீதிடம் வந்து அவரை நோக்கி, “நீ சென்று எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்திலே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும்” என்றார்.19 தாவீது காதின் வார்த்தைப்படி எழுந்து சென்று ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார்.⒫20 அப்போது அரசரும் அவருடைய பணியாளரும் தன்னை நோக்கி வருவதை அரவுனா கண்டான். அரவுனா புறப்பட்டுச்சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அரசரை வணங்கினான்.21 “என் தலைவராம் அரசர் உம் அடியானிடம் வருவதேன்?” என்று அரவுனா வினவ, தாவீது “மக்களிடமிருந்து கொள்ளைநோய் விலக ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பவேண்டும். அதற்காக உன்னிடமிருந்து உன் போரடிக்கிற களத்தை விலைக்கு வாங்க வந்தேன்” என்று கூறினார்.⒫22 “என் தலைவராம் அரசர் அதை எடுத்துக்கொண்டு தம் விருப்பம் போல் பலி செலுத்துவாராக! இதோ எரிபலிக்கு வேண்டிய காளைகள்; போரடிக்கும் உருளைகளும் காளைகளின் நுகத்தடிகளும் விறகாகட்டும்!23 அரசரே! இவையனைத்தையும் அரவுனா தங்களுக்குத் தருகிறான்! ஆண்டவராம் கடவுள் உம்மை ஏற்றுக்கொள்வாராக!” என்று அரவுனா தாவீதிடம் கூறினான்.⒫24 “இல்லை! நான் உன்னிடம் விலைக்குத்தான் வாங்குவேன். நான் இலவசமாகப் பெற்று என் கடவுளாம் ஆண்டவருக்கு எரி பலி செலுத்தமாட்டேன்” என்று அரசர் அரவுனாவிடம் கூறி, போரடிக்கும் களத்தையும் காளைகளையும் தாவீது ஐம்பது வெள்ளிக் காசுகளுக்கு வாங்கினார்.25 தாவீது அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவருக்கு எரி பலிகளும், நல்லுறவுப் பலிகளும் செலுத்தினார். நாட்டுக்காகச் செய்த மன்றாட்டை ஆண்டவர் கேட்டருள, இஸ்ரயேலிலிருந்து கொள்ளை நோய் நீங்கியது.2 Samuel 24 ERV IRV TRV