1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடம் போ, அவர்களின் நடுவே நான் என்னுடைய இந்த அடையாளங்களைச் செய்யும்படி,
2 நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.
3 அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து: நீ எதுவரைக்கும் உன்னைத் தாழ்த்த மனமில்லாமல் இருப்பாய்? என்னுடைய சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு.
4 நீ என்னுடைய மக்களைப் போகவிடமாட்டேன் என்று சொன்னால், நான் நாளைக்கு உன்னுடைய எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச்செய்வேன்.
5 தரையை காணமுடியாதபடி அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும்.
6 உன்னுடைய வீடுகளும் உன்னுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளும் எகிப்தியர்களின் வீடுகளும் அவைகளால் நிரம்பும்; உன்னுடைய தகப்பன்களும் உன்னுடைய தகப்பன்களின் தகப்பன்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்த நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயர்களின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பி பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
7 அப்பொழுது பார்வோனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: எதுவரைக்கும் இந்த மனிதன் நமக்குத் தொல்லை கொடுக்கிறவனாக இருப்பான்? தங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதர்களைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.
8 அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யார் யார் போகிறார்கள் என்று கேட்டான்.
9 அதற்கு மோசே: எங்களுடைய வாலிபர்களோடும், எங்களுடைய முதியோர்களோடும், எங்களுடைய மகன்களோடும், எங்களுடைய மகள்களோடும், எங்களுடைய ஆடுகளையும், எங்களுடைய மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
10 அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்களுடைய குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களுடன் இருப்பாராக; எச்சரிக்கையாக இருங்கள், உங்களுக்கு தீங்குநேரிடும்;
11 அப்படி வேண்டாம்; ஆண்களாகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்திலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.
12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படி, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு என்றார்.
13 அப்படியே மோசே தன்னுடைய கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும், அன்று இரவுமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசச்செய்தார்; அதிகாலையில் கிழக்குக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
14 வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாக இறங்கியது; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்கு முன்பு இருந்ததும் இல்லை, அதற்குப்பின்பு இருப்பதும் இல்லை.
15 அவைகள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் மூடியது; தேசம் அவைகளால் இருளடைந்தது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் எல்லாவற்றையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் சாப்பிட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையைக் கூட மீதியாக வைக்கவில்லை.
16 அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும் விரைவாக அழைத்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.
17 இந்த ஒருமுறைமட்டும் நீ என்னுடைய பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் இந்த மரணத்தைமட்டும் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்செய்யுங்கள் என்றான்.
18 அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்தான்.
19 அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேற்குக்காற்றை வீசும்படிச் செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளிகூட மீதியாக இருக்கவில்லை.
20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் போகவிடவில்லை.
21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கும்படியாக இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
22 மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது.
23 மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது.
24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.
25 அதற்கு மோசே: நாங்கள் எங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குச் செலுத்தும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்களுடைய கையிலே கொடுக்கவேண்டும்.
26 எங்களுடைய மிருகஜீவன்களும் எங்களுடன் வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்வதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேரும்வரை எங்களுக்குத் தெரியாது என்றான்.
27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாமல் இருந்தான்.
28 பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அந்தப்பக்கம் போ; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்காதபடி எச்சரிக்கையாக இரு; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய் என்றான்.
29 அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கமாட்டேன் என்றான்.
Exodus 10 ERV IRV TRV