Exodus 29 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 எனக்குக் குருத்துவப் பணி புரிய நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு இவ்வாறுசெய். ஓர் இளங்காளையையும் குறைபாடற்ற இரு செம்மறிக்கிடாய்களையும் தேர்ந்தெடு.2 சிறந்த கோதுமை மாவினால் புளிப்பற்ற அப்பம், எண்ணெயில் பிசைந்த புளிப்பற்ற நெய்யப்பம், எண்ணெய் தோய்ந்த புளிப்பற்ற மெல்லிய அடைகள் ஆகியவற்றைச் செய்து,3 ஒரு கூடையில் இட்டு, கூடையோடு அவற்றை எடுத்துவா. மேலும், அந்தக் காளையையும் இரு செம்மறிக்கிடாய்களையும் கொண்டு வா.4 சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் ஆரோனையும் அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.5 உடைகளை எடுத்து வந்து கோடிட்ட உள்ளாடை, ஏப்போதின் அங்கி, ஏப்போது, மார்புப்பட்டை இவற்றை ஆரோனுக்கு அணிவித்து ஏப்போதின் கைவண்ணமிக்க கச்சையால் கட்டுவாய்.6 அவன் தலைமேல் தலைப்பாகையை வைத்து அதன் மேல் புனித மணிமுடியையும் வை.7 திருப்பொழிவு எண்ணெயை எடுத்துவந்து, அவன் தலைமேல் ஊற்றி அவனுக்கு அருள்பொழிவு செய்.8 அவன் புதல்வரையும் கூட்டி வந்து, அவர்களுக்கும் ஆடைகள் அணிவிப்பாய்.9 ஆரோனுக்கும், அவன் புதல்வருக்கும் இடைக்கச்சைகள் கட்டி, அவர்களுக்கும் தலைப்பாகைகள் அணிவி. குருத்துவப்பணி என்றுமுள்ள நியமமாக அவர்களோடு இருக்கும். இவ்வாறாக, ஆரோனையும் அவன் புதல்வரையும் திருநிலைப்படுத்துவாய்.⒫10 பின்னர், சந்திப்புக் கூடாரத்தின் முன் காளையைக் கொண்டு வருவாய். ஆரோனும் அவன் புதல்வரும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைத்தபின்,11 அக்காளையைச் சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் அடிப்பாய்.12 காளையின் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் கொம்புகளில் உன் விரலால் பூசியபின், மீதி இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடு.13 குடல்களைச் சுற்றி அமைந்த அனைத்துக் கொழுப்பு, ஈரல் மேல் உள்ள சவ்வு, இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு ஆகியவற்றை எடுத்துப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துப் போடுவாய்.14 காளையின் சதை, அதன் தோல், அதன் சாணம் இவற்றைப் பாளையத்திற்கு வெளியே நெருப்பால் எரித்துவிடு. இது ஒரு பாவம்போக்கும் பலி!⒫15 பின்னர், செம்மறிக்கிடாய் ஒன்றினைக் கொண்டுவா. ஆரோனும் அவன் புதல்வரும் அந்தச் செம்மறிக் கிடாயின் தலைமேல் தம் கைகளை வைப்பர்.16 அந்தச் செம்மறிக்கிடாயைக் கொன்று அதன் இரத்தத்தை எடுத்துப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளிப்பாய்.17 செம்மறிக்கிடாயைப் பகுதி பகுதியாக வெட்டு. அதன் குடலையும் அதன் கால்களையும் கழுவு. அவற்றை ஆட்டின் பகுதிகளோடும் தலையோடும் வைத்து,18 செம்மறியாடு முழுவதையும் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துவிடு. இது ஆண்டவருக்கு எரிபலி ஆகும். இது ஆண்டவருக்கு இனிய நறுமண மிக்க நெருப்புப்பலி ஆகும்.19 இரண்டாவது செம்மறிக்கிடாயையும் கொண்டுவா. அச்செம்மறியின் தலைமேல் ஆரோனும் அவன் புதல்வரும் கைகளை வைக்கட்டும்.20 அந்தச் செம்மறிக்கிடாயையும் வெட்டு. அதன் இரத்தத்தை எடுத்து ஆரோனின் வலக்காது நுனியிலும், அவன் புதல்வரின் வலக்காது நுனியிலும் அவர்கள் வலக்கை பெருவிரலிலும், அவர்கள் வலக்கால் பெருவிரலிலும் தொட்டு வைத்தபின், எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளித்துவிடு.21 பலிபீடத்தின் மீதுள்ள இரத்தத்திலும் திருப்பொழிவு எண்ணெயிலும் சிறிது எடுத்து, அவற்றை ஆரோன், அவன் உடைகள், அவன் புதல்வர்கள், அவர்களின் உடைகள் மீது தெளிப்பாய். இதனால், அவன் அவனுடைய உடைகளோடும், அவன் புதல்வர்கள் அவர்களுடைய உடைகளோடும் புனிதம் பெறுவர்.⒫22 செம்மறிக்கிடாயின் கொழுப்பு, கொழுப்பு வால், குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பு, ஈரல் மேலுள்ள சவ்வு, இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு, வலப்பக்க முன்னந்தொடை ஆகியவற்றை எடுத்துக்கொள். ஏனெனில், இது திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாய்.23 மேலும், ஓர் அப்பம், ஒரு நெய்யப்பம், ஒரு மெல்லிய அடை ஆகியவற்றை ஆண்டவர் திருமுன் உள்ள புளிப்பற்ற அப்பக் கூடையிலிருந்து எடுத்து,24 இவை யாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் புதல்வரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவற்றை ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக உயர்த்துவாய்.25 பின் அவற்றை அவர்கள் கையிலிருந்து எடுத்து எரிபலியோடு சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாகப் பலிபீடத்தின் மேல் எரித்துவிடு. இது ஆண்டவருக்கு நெருப்புப் பலி.⒫26 ஆரோனின் திருநிலைப்பாட்டிற்கான செம்மறியின் மார்புக்கண்டத்தை எடுத்து, அதனை ஆரத்திப் பலியாய் ஆண்டவர் திருமுன் உயர்த்துவாய். அது உனக்குரிய பங்காக அமையும்.27 ஆரோனுடையவும் அவன் புதல்வருடையவும் திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயிலிருந்து எடுக்கப்பட்டு ஆரத்திப் பலியாக்கப்பட்ட மார்புக் கண்டத்தையும், ஆரத்தியாக உயர்த்தி குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கான சந்தையும் நீ புனிதப்படுத்து.28 இது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் என்றுமுள்ள உரிமைப்பங்காக விளங்கும். ஏனெனில், இது குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கு. இது இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளிலிருந்து குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்காகும். ஏனெனில், இது அவர்கள் அளிக்கும் ஆண்டவருக்கான பங்கு.29 ஆரோனுக்குப்பின் திருவுடைகள் அவன் புதல்வரைச் சேரும். அவர்கள் அருள்பொழிவு பெறும் போதும் திருநிலைப்படுத்தப்படும் போதும் அவற்றை அணிந்திருக்க வேண்டும்.30 அவனுக்குப் பதிலாக புதல்வர்களுள் குருவாகிறவன் சந்திப்புக் கூடாரத்தில் உள்ள தூயகத்தில் பணிபுரிய வருகையில் அவற்றை ஏழு நாள்கள் அணிந்திருப்பான்.⒫31 திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயைக் கொண்டுவந்து, அதன் இறைச்சியை ஒரு புனிதமான இடத்தில் கொதித்து வேகவைப்பாய்.32 ஆரோனும் அவன் புதல்வர்களும் செம்மறிக்கிடாயின் கறியையும், கூடையிலுள்ள அப்பத்தையும் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின்கண் உண்பார்கள்.33 அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணம் செய்யும்போது பாவக்கழுவாய்க்காகப் பயன்பட்டவற்றை அவர்கள் உண்பார்கள். அந்நியரோ அவற்றை உண்ணலாகாது. ஏனெனில், அவை புனிதமானவை.34 திருநிலைப்பாட்டிற்கான கறியோ அப்பமோ காலைவரை எஞ்சியிருந்தால், எஞ்சியுள்ளதை நெருப்பில் சுட்டெரித்துவிடு. அது உண்ணப்படல் ஆகாது. ஏனெனில், அது புனிதமானது.⒫35 நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் செய். ஏழு நாள்கள் நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவாய்.36 பாவக் கழுவாய்க்கென்று ஒவ்வொரு நாளும், நீ ஒரு காளையைப் பாவம்போக்கும் பலியாக ஒப்புக்கொடு. இவ்வாறு, பாவக்கழுவாய் செய்து பலிபீடத்தைத் தூய்மைப்படுத்துவாய். அதனை அர்ப்பணிப்பதற்காகத் திருப்பொழிவு செய்வாய்.37 ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து, அதனை அர்ப்பணம் செய். பலிபீடம் தூய்மைமிக்கதாகும். பலிபீடத்தைத் தொடுவதெல்லாம் புனிதம் பெறும்.38 ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.39 ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியைக் காலையிலும், இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு.40 இரண்டு படி* அளவில் பத்தில் ஒரு அளவு மெல்லிய மாவை ஆட்டிப்பிழிந்த கால்கலயம்** அளவு எண்ணெயில் கலந்து அதையும், நீர்மப்படையலாகக் கால்கலயம் அளவு திராட்சைப்படி இரசத்தையும் ஒரு செம்மறிக்குட்டியோடு படைப்பாய்.41 மாலைமங்கும் வேளையில் மற்றச் செம்மறிக் குட்டியைப் பலியிடுவாய். காலையில் செய்தது போலவே, உணவுக் காணிக்கைகளோடு நீர்மப்படையலையும் சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாக நெருப்புப் பலியாக்குவாய்.42 நான் உங்களைச் சந்தித்து உன்னிடம் பேசுகின்ற சந்திப்புக் கூடார நுழைவாயிலில், அது உங்கள் தலைமுறைதோறும் என்றுமுள்ள எரிபலியாக ஆண்டவர் திருமுன் நடந்தேறட்டும்.43 நான் அங்கு இஸ்ரயேல் மக்களைச் சந்திப்பேன். அந்த இடம் என் மாட்சியால்புனிதம் பெறும்.44 நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன். எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும் அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன்.45 நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்; அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்.46 அவர்களிடையே குடியிருப்பதற்காக எகிப்து நாட்டினின்று அவர்களை நடத்திவந்த அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வர். ஆம், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்.Exodus 29 ERV IRV TRV