Exodus 33 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் மோசேயை நோக்கி, “எகிப்து நாட்டிலிருந்து நீ நடத்தி வந்த மக்களுடன் இங்கிருந்து புறப்பட்டுச் செல். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோருடன் அவர்கள் வழிமரபினருக்குத் தருவதாக நான் வாக்களித்த அந்த நாட்டிற்குச் செல்.2 நான் ஒரு தூதரை உனக்குமுன் அனுப்பிக் கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரைத் துரத்தி விடுவேன்.3 பாலும் தேனும் பொழியும் நாட்டுக்குப் போங்கள். நான் உங்களோடு வரப்போவதில்லை. ஏனெனில், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், ஆதலால், வழியில் நான் உங்களை அழித்தொழிக்க நேரிடும்” என்றார்.4 இத்துயரச் செய்தியைக் கேட்டபோது மக்கள் அழுது புலம்பினர். யாருமே அணிகலன்கள் அணிந்துகொள்ளவில்லை.5 ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம், “நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், நொடிப்பொழுதில் நான் உங்களிடையே வந்து, உங்களை அழித்தொழிக்கப்போகிறேன். உடனடியாக உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியும் என இஸ்ரயேல் மக்களுக்கு அறிவி” என்று கூறியிருந்தார்.6 அவ்வாறே, இஸ்ரயேல் மக்கள் ஓரேபு மலையை விட்டுப் புறப்பட்டபின் தங்கள் அணிகலன்களை அணியவே இல்லை.7 மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.8 மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்றுகொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர்.9 மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார்.10 கூடார நுழை வாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழை வாயிலில் நின்றுகொண்டே மக்கள் அனைவரும் வணங்கித்தொழுவர்.11 ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டகலாமல் இருப்பார்.12 மோசே ஆண்டவரிடம், “‘இம்மக்களை நடத்திச்செல்’ என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. ‘பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்’ என்றும் ‘நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய்’ என்றும் கூறியுள்ளீர்.13 இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும். உம்மை இதனால் அறிந்துகொள்வேன். உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன். மேலும், இந்த இனம் உம்மக்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும்” என்றார்.14 அதற்கு ஆண்டவர், “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” என்று கூற,15 மோசே அவரிடம், “உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்.16 நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?” என்றார்.⒫17 அதற்கு ஆண்டவர் மோசேயிடம், “நீ கூறியபடியே நான் செய்வேன். ஏனெனில், நீ என் பார்வையில் தயைபெற்றுள்ளாய். மேலும் பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்” என்றார்.18 அப்போது மோசே, “உம்மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்” என்று கூற,19 அவர், “என் நிறை அழகை உன்முன் கடந்து போகச் செய்து ஆண்டவர் என்ற பெயரை உன்முன் அறிவிப்பேன். யார்யாருக்கு நான் பரிவு காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன். யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றார்.20 மேலும் அவர், “என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது” என்றார்.21 பின்பு, ஆண்டவர் “இதோ, எனக்கருகில் ஓர் இடம். இங்கிருக்கும் பாறையின் மேல் நீ நின்று கொள்.22 என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்.23 பின்பு, நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார்.Exodus 33 ERV IRV TRV