Ezekiel 4 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மானிடா! நீ செங்கல் ஒன்றை எடுத்து, அதை உன் முன்னே வைத்து அதன் மேல் எருசலேம் நகரை வரைந்திடு.2 அதைச் சுற்றி முற்றுகைமயிட்டாற்போல் அதற்கெதிராகத் கொத்தளங்கள் கட்டி, மணல்மேடு ஒன்றையும் எழுப்பு. அதற்கு எதிராகப் போர்ப் பாசறைகளை அமைத்து, சுற்றிலும் அரண்தகர் பொறிகளையும் வை.3 மேலும் நீ இரும்புத்தட்டு ஒன்றை எடுத்து அதனை உனக்கும் நகருக்கும் இடையே ஓர் இரும்புச் சுவராக எழுப்பு. அதற்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொள். இப்பொழுது அது முற்றுகையின்கீழ் உள்ளது. முற்றுகையிடுபவன் நீயே; இது இஸ்ரயேல் வீட்டாருக்கு ஓர் அடையாளம்.4 நீ உன் இடப்பக்கமாய்ப் படுத்து, உன்மேல் இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமத்திக் கொள். நீ அப்பக்கமாய்ப் படுத்திருக்கும் நாள்கள் வரை அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய்.5 எத்தனை ஆண்டுகள் அவர்கள் தவறிழைத்தார்களோ, அத்தனை நாள்களை அதாவது முந்நூற்றுத் தொண்ணூறு நாள்களை உன்மேல் சுமத்தியுள்ளேன். இத்தனை நாள்கள் நீ இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமக்க வேண்டும்.6 இதை நீ செய்தபின், மீண்டும் உன் வலப்பக்கமாய்ப் படுத்து, யூதா வீட்டாரின் குற்றத்தை ஓர் ஆண்டுக்கு ஒரு நாளென நாற்பது நாள்களுக்குச் சுமக்கவேண்டும். ஓர் ஆண்டுக்கு ஒரு நாள் என்றே நான் உனக்குக் குறித்துள்ளேன்.7 மேலும் முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, திறந்த புயத்தோடு, அதற்கெதிராக இறைவாக்கு உரைக்க வேண்டும்.8 மேலும் உன்னைக் கயிறுகளால் கட்டுவேன். நீ உன் முற்றுகையின் நாள்களை முடிக்கும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குப் புரள உன்னால் இயலாது.9 நீயோ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமை ஆகியவற்றை ஒரு பானையில் எடுத்துக்கொள். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்நூற்றுத் தொண்ணூறு நாள்கள்வரை அவற்றால் அப்பம் சுட்டுச் சாப்பிடு.10 நாளொன்றுக்கு இருபது செக்கேல் நிறையுள்ள உணவே சாப்பிடு. அதையும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நீ உண்ண வேண்டும்.11 தண்ணீரையும் அளவு பார்த்தே குடிக்கவேண்டும். ஒரு கலயம் அளவையில் ஆறிலொரு பங்கைக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே குடி.12 உணவை வாற்கோதுமை அடைகளெனச் சாப்பிடு. மனித மலத்தின் வறட்டிகளைப் பயன்படுத்தி அவர்கள் கண்முன் அந்த அடையைச் சுடவேண்டும்.13 ஆண்டவர் உரைத்தது:‘ இவ்வாறே இஸ்ரயேல் மக்களும் நான் அவர்களை விரட்டியடிக்கும் நாடுகளுக்குள் தங்கள் அப்பத்தைத் தீட்டுப்பட்டதாகச் சாப்பிடுவார்கள்.’14 அப்போது நான், “தலைவராகிய ஆண்டவரே! நான் ஒருபோதும் தீட்டுப்பட்டதில்லை. என் இளமை முதல் இப்போதுவரை தானாய்ச் செத்ததையோ, மற்ற விலங்குகளால் கிழிக்கப்பட்டதையோ நான் உண்டதில்லை. தீட்டான இறைச்சி கூட என் வாயில் நுழைந்ததே இல்லை” என்றேன்.15 அப்போது அவர் என்னிடம், “சரி, மனித மலத்துக்குப் பதிலாக உனக்கு மாட்டுச் சாணத்தை அனுமதிக்கிறேன். அதைக் கொண்டு உன் அப்பத்தைச் சுடு” என்றார்.16 மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! இதோ நான் எருசலேமில் உணவின் தரவைக் குறையச் செய்வேன். அவர்கள் அப்பத்தை நிறைபார்த்துக் கவலையோடு உண்பர். தண்ணீரை அளவு பார்த்துக் கலக்கத்தோடு குடிப்பர்.17 இதனால் அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறைந்து கொண்டே போக, ஒவ்வொருவரும் தம் சகோதரை அவநம்பிக்கையோடு பார்த்துத் தம் குற்றப்பழியை முன்னிட்டு நலிந்து போவர்.