1 தம் நகரில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் ஏழாம் மாதம் வந்த போது எருசலேமில் ஒருசேரக் கூடினர்.2 அப்பொழுது யோசதாக்கின் மகன் ஏசுவாவும் அவருடைய சகோதர குருக்களும், செயல்தியேல் மகனான செருபாபேலும், அவருடைய சகோதரர்களும், கடவுளின் மனிதரான மோசே திருச்சட்டநூலில் எழுதியுள்ளபடி எரிபலிகள் ஒப்புக்கொடுக்க இஸ்ரயேலின் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டியெழுப்பினர்.3 வேற்று நாட்டு மக்களால் அச்சம் தோன்றினும் பலிபீடத்தை அதற்குரிய இடத்திலே அமைத்தார்கள். காலையிலும், மாலையிலும் ஆண்டவருக்கு எரிபலிகள் ஒப்புக்கொடுத்தனர்.4 திருச்சட்ட நூலில் உள்ளபடி கூடாரத்திருவிழாவைக் கொண்டாடினர். ஒவ்வொரு நாளும் முறைமைப்படி அந்நாளுக்குரிய எரிபலிகளைச் செலுத்தினர்.5 அதன்பிறகு ஒவ்வொரு அமாவாசையின்போதும், ஆண்டவரின் எல்லாத் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்தினர். ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக்கொடுக்க விரும்பியவர்கள் ஒப்புக்கொடுத்தார்கள்.6 ஏழாவது மாதத்தில் முதல் நாளிலிருந்து ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால், ஆண்டவருடைய கோவிலுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை.7 பாரசீக மன்னர் சைரசு அவர்களுக்குக் கொடுத்திருந்த அனுமதியின்படி, கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து யோப்பா கடலுக்குக் கொண்டுவரச் சீதோன், தீர் நகரத்தினருக்கு உணவு, பணம், எண்ணெய் ஆகியன கொடுத்தார்கள்.8 அவர்கள் எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் தளத்திற்கு வந்தடைந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில், செயல்தியேலின் மகன் செருபாபேல், யோசதாக்கின் மகன் ஏசுவா, அவருடைய சகோதர குருக்கள், லேவியர்கள், மற்றும் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்கள் அனைவரும் கோவில் வேலையைத் தொடங்கினர். ஆண்டவரின் இல்ல வேலையைக் கண்காணிக்க இருபதும், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய லேவியர்களை நியமித்தனர்.9 ஏசுவா, அவருடைய புதல்வர், உறவினர், கத்மியேல், அவருடைய புதல்வர், யூதாவின் புதல்வர், லேவியரான ஏனிதாதின் புதல்வர், அவர்களுடைய புதல்வர், உறவினர் ஆகியோர் கோவில் வேலையைக் கண்காணிக்க ஒருசேர நின்றனர்.⒫10 கட்டுபவர்கள் ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இட்டபோது இஸ்ரயேலின் அரசர் தாவீது உரைத்தபடி குருக்கள் தங்களுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, எக்காளத்தோடும், ஆசாபின் புதல்வரான லேவியர் கைத்தாளங்களோடும் ஆண்டவரைப் புகழ்ந்தனர்.11 அவர்கள் ஆண்டவரைப் புகழ்ந்து நன்றி கூறி, “அவர் நல்லவர், ஏனெனில் அவர் இரக்கம் இஸ்ரயேல்மீது என்றென்றும் உள்ளது” என்று பாடினர். ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்.12 முதல் கோவிலைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மூப்பர்கள் பலர் இந்தப் புதிய கோவிலின் அடித்தளத்தைக் கண்டபோது, உரத்த குரலில் அழுதனர். வேறு பலர் மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்பாலும் குரல் எழுப்பினர்.13 நெடுந்தொலைவு கேட்குமளவுக்கும் மக்கள் பெருங்கூக்குரல் எழுப்பியதால், மகிழ்ச்சிக் குரலொலியை அவர்களின் அழுகைக் குரலிலிருந்து பிரித்துணர எவராலும் இயலவில்லை.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.