Ezra 9 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இவைகளுக்குப் பின்னர், அதிகாரிகள் என்னிடம் வந்து, ‘இஸ்ரயேல் மக்களும் குருக்களும் லேவியரும், கானானியர், இத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய நாட்டினரின் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவில்லை.2 ஏனெனில், அவர்கள் தங்களுக்கும் தங்கள் புதல்வர்களுக்கும் அவர்களுடைய புதல்வியரை மனைவியராக எடுத்துக்கொண்டனர். எனவே புனித இனம் வேற்று நாட்டு மக்களோடு கலக்கப்பட்டது. இந்தப் பற்றுறுதியின்மைக்கு அதிகாரிகளும், ஆளுநர்களுமே முதற்காரணம் ஆவர்’ என்று கூறினார்கள்.3 இதைக் கேட்டவுடன், நான் என் ஆடையையும், மேலுடையையும் கிழித்தேன்; மேலும் தலைமுடியையும் தாடியையும் பிய்த்துக் கொண்டு திகைப்புற்று உட்கார்ந்தேன்.4 இஸ்ரயேலின் கடவுளின் வார்த்தைகளுக்கு அஞ்சிய யாவரும், அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்தவர்களின் குற்றத்திற்காக என்னைச் சூழ்ந்து நின்றனர். நானோ மாலைப்பலி நேரம்வரை செயலற்று அமர்ந்திருந்தேன்.⒫5 மாலைப்பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து நான் கூறியது:6 “கடவுளே; உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்கு மேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டு விட்டன.7 எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும் அடிமைத்தனத்திற்கும் கொள்ளைக்கும் வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்பவிக்கப்பட்டோம்.8 ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர்.9 நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுதுபார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளினீர்!10 ஆயினும், எம் கடவுளே! இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும் நாங்கள் இப்பொழுது என்ன சொல்லமுடியும்? நாங்கள் உம் கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டோமே!11 நீர் உம் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம், ‘நீங்கள் குடியேறவிருக்கிற நாடு வேற்றினத்தாரின் தீட்டினாலும், பிற நாடுகளின் தீட்டினாலும் அந்நாட்டை ஒருமுனை தொடங்கி மறுமுனை வரை மாசுபடுத்தியுள்ள மக்களின் அருவருப்புகளாலும் தூய்மை இழந்திருக்கின்றது.12 எனவே நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும், அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமாயின் வேற்றினத்தாருடன் பெண் கொள்வதும் கொடுப்பதும் இருத்தலாகாது. மேலும் அவர்களின் நல்லலுறவையும் நலத்தையும் என்றுமே நாடாலாகாது’ என்று நீர் கட்டளையிட்டிருப்பதைப் புறக்கணித்தோம்.13 எம் தீச்செயல்களினாலும் எமது பெரும் பாவத்தினாலுமே இவையெல்லாம் எங்கள்மீது வந்தன. ஆனால் எங்கள் கடவுளாகிய நீர் எங்கள் குற்றத்திற்கு ஈடாக தண்டியாமல் எங்களை எஞ்சியிருக்கச் செய்தீர்.14 நாங்கள் மீண்டும் உமது கட்டளைகளை மீறுவோமா? இவ்வாறு வெறுப்பானவைகளைச் செய்கின்ற மக்களோடு இனி கலப்பு மணம் செய்து கொள்வோமா? அப்படிச் செய்தால், எஞ்சியுள்ள எங்களுள் எவரும் இல்லாதபடி, யாரும் தப்பாதபடி, நீர் எம்மை அழிக்கும்வரை எம்மீது சினம் கொள்வீர் அன்றோ?15 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர். ஏனெனில், இன்று நாங்களே எஞ்சியுள்ளோராய் விடப்பட்டிருக்கிறோம். இதோ நாங்கள் உம்முன் குற்றவாளிகளாய் இருக்கிறோம். இதனால் எங்களில் யாரும் உம்முன் நிற்க இயலாது.”Ezra 9 ERV IRV TRV