Genesis 32 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 பின்னர், யாக்கோபு தம் பயணத்தைத் தொடர்ந்தார். கடவுளின் தூதர்கள் வழியில் அவரைச் சந்தித்தார்கள்.2 யாக்கோபு அவர்களைக் கண்டபோது, ‘இதுதான் கடவுளின் படை’ என்று கூறி, அந்த இடத்திற்கு ‘மகனயிம்’ என்று பெயரிட்டார்.⒫3 பின்பு, யாக்கோபு ஏதோம் நாட்டிலுள்ள சேயிர் பகுதியில் வாழ்ந்து வந்த தம் சகோதரன் ஏசாவிடம் தூதரை அனுப்பினார்.4 அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: “நீங்கள் என் தலைவன் ஏசாவிடம் போய், உம் ஊழியனாகிய யாக்கோபு கூறுவது: ‘நான் இதுவரை லாபானிடம் அந்நிந்நியனாய் தங்கியிருந்தேன்.5 மாடுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் எனக்கு உள்ளனர். உம் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கும்படி என் தலைவரான உமக்கு ஆளனுப்பி அறிவிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.”⒫6 அத்தூதர் யாக்கோபிடம் திரும்பி வந்து, “நாங்கள் உம் சகோதரர் ஏசாவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் உம்மைச் சந்திக்க வருகிறார்” என்றனர்.7 யாக்கோபு மிகவும் அஞ்சிக் கலங்கித் தம்முடன் இருந்த ஆள்களையும், ஆடுமாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரு பகுதிகளாகப் பிரித்தார்.8 ஏனெனில், ஏசா வந்து ஒரு பகுதியைத் தாக்கினாலும் எஞ்சிய பகுதியாவது தப்புமே என்று நினைத்துக் கொண்டார்.9 மேலும், யாக்கோபு, “என் மூதாதை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமான ஆண்டவரே! நீர் என்னை நோக்கி, ‘உன் சொந்த நாட்டிற்கும் உன் உறவினரிடமும் திரும்பிப் போ; நான் உனக்கு நன்மையே புரிவேன்’ என்று உரைத்தீர்.10 அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும் நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன். நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே. இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன்.11 என் சகோதரர் ஏசாவுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன். அவர் கையினின்று என்னை விடுவித்தருளும். இல்லையேல் அவர் வந்து என்னையும் பிள்ளைகளையும், தாய்களையும் தாக்குவார்.12 நீர் ‘நான் உனக்கு உறுதியாக நன்மை புரிவேன்; உன் வழிமரபை எண்ண முடியாத கடல் மணலைப் போலப் பெருகச் செய்வேன்’என்று வாக்களித்துள்ளீர்” என்றார்.13 அன்றிரவு அவர் அங்கேயே தங்கி, தமக்குச் சொந்தமானவற்றிலிருந்து14 சகோதரர் ஏசாவுக்கு அன்பளிப்பாக இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கிடாய்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களையும்,15 முப்பது பெண் ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்து ஆண் கழுதைகளையும் தேர்ந்தெடுத்தார்.16 அவற்றுள் ஒவ்வொரு மந்தையையும் வேலைக்காரர் கையில் தனித்தனியாய் ஒப்புவித்து, “நீங்கள் மந்தைகளுக்கு இடையே இடம்விட்டு, எனக்குமுன் ஓட்டிக்கொண்டு போங்கள்” என்று சொன்னார்.17 பின்பு, அவர் முதலில் போகிறவனை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது: “என் சகோதரர் ஏசா உனக்கு எதிர்ப்பட்டு, ‘நீ யாருடைய ஆள்? நீ எங்கே போகிறாய்? உனக்கு முன் செல்லும் இவை யாருடையன?’ என்று உன்னிடம் கேட்டால்,18 “இவை உம் ஊழியன் யாக்கோபினுடையவை. அவர் தம் தலைவராகிய ஏசாவுக்கு இவற்றை அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார். அவரும் எங்கள் பின்னர் வருகிறார்” என்று நீ சொல்வாய்” என்றார்.19 அதேவிதமாய் அம்மந்தைகளை ஓட்டிச் செல்லும் இரண்டாம், மூன்றாம் ஆள்களுக்கும் மற்ற அனைவருக்கும் கட்டளையிட்டுக் கூறியது: “ஏசாவை நீங்கள் சந்திக்கும்பொழுதும்,20 ‘இதோ, உம் ஊழியன் யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார்’ என்று சொல்லுங்கள்”. ஏனெனில், யாக்கோபு ‘நான் அவர் முன்னே இவ்வன்பளிப்புகளை அனுப்பி அவரை அமைதிப்படுத்துவேன். பின்பு, நான் அவரை நேரில் காணும்பொழுது, அவர் ஒருவேளை என்னை ஏற்றுக் கொள்வார்’ என்று நினைத்தார்.21 அவ்விதமே யாக்கோபின் அன்பளிப்புகள் அவருக்கு முன் சென்றன. அவரோ அன்றிரவு கூடாரத்தில் தங்கினார்.22 அந்த இரவிலேயே அவர் எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார்.23 அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார்.24 யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார்.25 யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.26 அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார்.27 ஆடவர், “உன் பெயர் என்ன?” என,28 அவர்: “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, ‘இஸ்ரயேல்’* எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார்.29 யாக்கோபு அவரை நோக்கி “உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர் “என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.30 அப்பொழுது யாக்கோபு, “நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் ‘பெனியேல்’** என்று பெயரிட்டார்.31 அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார்.32 அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.Genesis 32 ERV IRV TRV