Genesis 47 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 பின்பு, யோசேப்பு பார்வோனிடம் போய், “என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடு மாடுகளோடும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்” என்று அறிவித்தார்.2 மேலும், தம் சகோதரரில் ஐந்து பேரைப் பார்வோன் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினார்.3 பார்வோன் அவர்களை நோக்கி, “உங்கள் தொழில் என்ன?” என்று கேட்க, அவர்கள் அவனிடம் “உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் ஆடு மேய்ப்பவர்கள்.4 கானான் நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருப்பதாலும், உம் பணியாளர்களாகிய எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாது போனதாலும், சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கி இருக்க வந்திருக்கிறோம். உம் பணியாளர்களாகிய நாங்கள் கோசேன் பகுதியில் தற்போதைக்குக் குடியிருக்க இசைவு தருமாறு வேண்டுகிறோம்” என்றனர்.5 அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி, “உம் தந்தையும் உம் சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்கள் அல்லவா?6 எகிப்து நாடு உமக்கு முன்பாக இருக்கிறது. இந்த நாட்டின் சிறந்த பகுதியில் உம் தந்தையும் சகோதரரும் குடியேறும்படி செய்யும். கோசேன் பகுதியில் அவர்கள் வாழட்டும். அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீரானால், எனக்குச் சொந்தமான மந்தைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளாக அவர்களை ஏற்படுத்தலாம்” என்றான்.⒫7 பின்னர், யோசேப்பு தம் தந்தையை அழைத்துவந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்துமொழி கூறினார்.8 பார்வோன் யாக்கோபை நோக்கி, “உமது வயதென்ன?” என்று வினவினான்.9 அதற்கு யாக்கோபு பார்வோனை நோக்கி, “என் வாழ்க்கைப் பயண நாள்கள் நூற்றுமுப்பது ஆண்டுகள். அவை எண்ணிக்கையில் குறைந்தவை; துன்பத்தில் மிகுந்தவை. ஆனால், அவை என் மூதாதையரின் நாள்களுக்குக் குறைந்தவையே” என்றார்.10 யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்து மொழி கூறியபின் அவனிடம் விடைபெற்றுச் சென்றார்.11 பார்வோன் கட்டளையிட்டிருந்தபடி, யோசேப்பு தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.12 மேலும், யோசேப்பு தம் தந்தை, தம் சகோதரர், தம் தந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் அவரவர் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப உணவளித்து அவர்களைப் பேணிக் காத்துவந்தார்.13 பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது. உலகெங்கும் உணவு கிடைக்கவில்லை. குறிப்பாக எகிப்துநாடும் கானான்நாடும் பஞ்சத்தால் வாடின.14 எகிப்தியருக்கும் கானானியருக்கும் தானியம் விற்றதால் கிடைத்த பணத்தையெல்லாம் ஒன்று சேர்த்து யோசேப்பு பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தார்.15 எகிப்து, கானான் நாடுகளில் பணம் தீர்ந்துபோனபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பிடம் வந்து, “எங்களுக்கு உணவு தாரும்; பணம் இல்லையென்பதால், உம் முன் நாங்கள் ஏன் சாகவேண்டும்?” என்றனர்.16 அதற்கு அவர், “உங்களிடம் பணம் இல்லையெனில், உங்கள் மந்தைகளைக் கொண்டு வாருங்கள்; அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் தருவேன்” என்றார்.17 எனவே, அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்தபோது, யோசேப்பு குதிரைகளையும் ஆட்டுமந்தைகளையும், மாட்டுமந்தைகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்தார். இப்படிக் கால்நடைகளையெல்லாம் ஈடாகப் பெற்று அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றினார்.18 அந்த ஆண்டு முடிந்தபின் அடுத்த ஆண்டில் அவர்கள் மீண்டும் வந்து, அவரை நோக்கி, “எம் தலைவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பணம் தீர்ந்து போயிற்று. கால்நடைகளும் எம் தலைவருக்கு சொந்தமாகிவிட்டன. எம் தலைவருக்கு அளிக்க எங்கள் உடலும் நிலமும் தவிர எங்களிடம் எஞ்சியிருப்பது எதுவுமில்லை.19 உம் கண்முன் நாங்களும் எங்கள் நிலமும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலத்தையும் உணவுப் பொருளுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளும். நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாய் இருப்போம். நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும் நிலம் பாழடையாமல் இருக்கவும் எங்களுக்குத் தானியம் தாரும்” என்றனர்.⒫20 அவ்வாறே, யோசேப்பு எகிப்திய நிலம் முழுவதையும் பார்வோனுக்கென்று வாங்கிக்கொண்டார். ஏனென்றால், பசியின் கொடுமையால் எகிப்தியர் அனைவரும் தங்கள் வயல்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர். அந்த நாடே பார்வோனுக்குச் சொந்தமாயிற்று.21 எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை இருந்த மக்கள் அனைவரையும் யோசேப்பு அடிமை வேலைக்கு உள்ளாக்கினார்.22 அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான். பார்வோன் அவர்களுக்குத் தந்திருந்த மானியத்திலிருந்து அவர்கள் உண்டு வந்ததால், அவர்கள் தங்கள் நிலபுலன்களை விற்கவில்லை.23 அப்பொழுது யோசேப்பு மக்களை நோக்கி, “இன்று உங்களையும், உங்கள் நிலங்களையும் பார்வோனுக்கு உடைமையாக வாங்கிவிட்டேன். இப்போது, உங்களுக்கு விதைத்தானியம் தருகிறேன். அதை நிலத்தில் விதையுங்கள்.24 விளைச்சலில் ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குச் செலுத்துங்கள். எஞ்சிய நான்கு பாகம் உங்கள் வயல்களுக்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும் இருக்கட்டும்” என்று சொன்னார்.25 அதற்கு அவர்கள், “எங்கள் உயிரைக் காப்பாற்றிவிட்டீர். தலைவராகிய உம் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைப்பதாக! நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாகவே இருப்போம்” என்றார்கள்.26 யோசேப்பு எகிப்து நாட்டில் நிலச்சட்டம் ஒன்று கொண்டுவந்தார். அது இன்றுவரை வழக்கில் உள்ளது. ஐந்திலொரு பாகம் பாவோனுக்கு உரியது என்றாயிற்று. அர்ச்சகர்களின் நிலபுலன்கள் மட்டும் பார்வோனின் உடைமையாகவில்லை.27 இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் கோசேன் பகுதியில் குடியேறி, அதனை உரிமையாக்கிக்கொண்டு, அங்கே மிகவும் பல்கிப் பெருகினர்.28 யாக்கோபு பதினேழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார். அவரது வாழ்நாள் மொத்தம் நூற்றுநாற்பத்தேழு ஆண்டுகள்.29 அவர் தாம் இறக்கும் நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தம் மகன் யோசேப்பை வரவழைத்து, அவரை நோக்கி, “உன் பார்வையில் எனக்குத் தயை கிடைக்குமானால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, எனக்குக் கனிவும் பற்றும் காட்டுவதாக வாக்களி. என்னை எகிப்து நாட்டில் அடக்கம் செய்யாதே.30 நான் என் மூதாதையரோடு துஞ்சியபின், என்னை எகிப்தினின்று எடுத்துக் கொண்டு சென்று, என் மூதாதையரின் கல்லறையில் என்னையும் அடக்கம் செய்” என்றார். அதற்கு யோசேப்பு, “நீர் சொன்னபடியே செய்வேன்” என்றார்.31 அவரோ, “எனக்கு ஆணையிட்டுக் கொடு” என்றார். யோசேப்பும் ஆணையிட்டுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரயேல் படுக்கையின் தலைப்பக்கம் திரும்பித் தொழுதார்.Genesis 47 ERV IRV TRV