1 கர்த்தர், “இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்கள் திட்டங்களைப் போடுவார்கள். ஆனால் என்னிடம் உதவியைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால், எனது ஆவி அந்த ஒப்பந்தங்களை விரும்புவதில்லை. இந்த ஜனங்கள் தங்களுக்குள் மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள்.
2 இந்தக் குழந்தைகள் உதவிக்காக எகிப்துக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் செய்வது சரிதானா என்பதை என்னிடம் கேட்கவில்லை. அவர்கள் பார்வோனால் காப்பாற்றப்படுவதாக நம்பினார்கள். எகிப்து அவர்களைக் காப்பாற்றும் என்று நினைக்கிறார்கள்.
3 “ஆனால், எகிப்தில் ஒளிந்துக்கொள்வது உங்களுக்கு உதவாது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். எகிப்தால் உங்களைக் காப்பாற்ற இயலாது.
4 உங்கள் தலைவர்கள் சோவானுக்குப் போயிருக்கிறார்கள். உங்கள் வெளியுறவு அதிகாரிகள் ஆனேஸ் நாட்டுக்குப் போயிருக்கிறார்கள்.
5 ஆனால் அவர்கள், ஏமாற்றம் அடைவார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய முடியாத ஜனத்தை அவர்கள் சார்ந்துள்ளனர். எகிப்து பயனற்றது. அதினால் உதவிசெய்ய முடியாது. வெட்கத்திற்கும் துக்கத்திற்குமே எகிப்து காரணமாக அமையும்” என்றார்.
6 வனாந்திரத்தில் உள்ள மிருகங்களைப் பற்றிய துக்க செய்தி: வனாந்திரம் ஒரு ஆபத்தான இடம். இப்பூமியில் சிங்கங்களும் விஷப் பாம்புகளும் வேகமாகச் செல்லும் பாம்புகளும் நிறைந்துள்ளன. ஆனால் சில ஜனங்கள் எகிப்துக்குப் போகிறவர்கள் இதின் வழியாகப் பயணம் செய்வார்கள். அவர்கள் தங்கள் செல்வங்களைக் கழுதையின் முதுகில் ஏற்றிக் கொண்டுசெல்வார்கள். ஒட்டகங்களின் முதுகில் தங்கள் பொக்கிஷங்களை வைத்திருப்பார்கள். இதற்குப் பொருள், ஜனங்கள் தமக்கு உதவ முடியாத ஜனத்தையே சார்ந்துகொண்டிருக்கிறார்கள்.
7 அந்தப் பயனற்ற நாடு தான் எகிப்து. எகிப்தின் உதவி எதற்கும் பயனற்றது. எனவே, நான் எகிப்தை, “எதுவும் செய்யாத அரக்கன்” என்று அழைப்பேன்.
8 இப்பொழுது, இதை அடையாளத்தின் மேல் எழுது. எல்லா ஜனங்களும் இதனைப் பார்க்க முடியும். இதனை ஒரு புத்தகத்தில் எழுது. இறுதி நாட்களுக்காக இவற்றை எழுது. இது நீண்ட காலத்துக்குப்பின் எதிர்காலத்தில் இருக்கும்.
9 இந்த ஜனங்கள் தம் பெற்றோருக்கு அடிபணிய மறுக்கும் பிள்ளைகளைப் போன்றுள்ளனர். கர்த்தருடைய போதனைகளைக் கேட்க அவர்கள் மறுத்துப் பொய் சொல்கிறார்கள்.
10 “நாம் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி கனவுகளைக் காணாதீர்கள். எங்களிடம் உண்மைகளைச் சொல்லாதீர்கள். எங்களுக்கு நலமானவற்றை மட்டும் சொல்லுங்கள். எங்களுக்கு நல்லுணர்வை உண்டாக்குங்கள். எங்களுக்காக நல்லவற்றை மட்டும் பாருங்கள்.
11 உண்மையில் நிகழப்போவதைக் காணுவதை நிறுத்துங்கள். எங்கள் வழியில் இருந்து வெளியேறுங்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரைப் பற்றி எங்களுக்குக் கூறுவதை நிறுத்துங்கள்” என்று அவர்கள் தீர்க்கதரிசிகளிடம் கூறுகிறார்கள்.
12 இஸ்ரவேலின் பரிசுத்தர் கூறுகிறார், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுக்கிறீர்கள். சண்டையும், பொய்யும் உங்களுக்கு உதவும் என்று அதனைச் சார்ந்து இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள்.
13 நீங்கள் இவற்றைப்பற்றிய குற்றம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் விரிசல்களையுடைய உயரமான சுவர்களைப்போல இருக்கிறீர்கள். அந்தச் சுவர் விழுந்து சிறு துண்டுகளாக உடையும்.
14 நீங்கள் பெரிய களிமண் ஜாடி உடைந்து பற்பல சிறு துண்டுகளாக உடைந்ததைப் போல இருக்கிறீர்கள். அந்தத் துண்டுகள் பயனற்றவை. நீங்கள் அதைக்கொண்டு நெருப்பிலிருந்து எரியும் கரித்துண்டை வெளியே எடுக்கவோ, குளத்திலே தண்ணீர் எடுக்கவோ முடியாது”.
15 இஸ்ரவேலில் பரிசுத்தராயிருக்கிற, கர்த்தராகிய எனது ஆண்டவர் சொல்கிறார், “என்னிடம் நீங்கள் திரும்பி வந்தால் பாதுகாக்கப்படுவீர்கள். என்னை நம்பினால் அது உங்களுக்கு வரப்போகிற உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்” என்கிறார். ஆனால் நீங்கள் அவற்றைச் செய்ய விரும்பவில்லை.
16 “இல்லை எங்களுக்கு ஓடிப்போகக் குதிரைகள் வேண்டும்!” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மை. நீங்கள் குதிரைகள் மேலேறி ஓடுவீர்கள். ஆனால் பகைவர்கள் உங்களைத் துரத்துவார்கள். அவர்கள் உங்கள் குதிரைகளை விட வேகமாக இருப்பார்கள்.
17 ஒரு பகைவன் பயங்காட்டுவான். உங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சி ஓடுவார்கள். ஐந்து பகைவர்கள் பயங்காட்டுவார்கள். நீங்கள் அனைவரும் அவர்களை விட்டு ஓடிவிடுவீர்கள். மலையின் மேல் உள்ள கொடிக் கம்பம் மட்டுமே உங்கள் சேனையில் விடப்பட்டிருக்கும்.
18 கர்த்தர் அவரது இரக்கத்தை உங்கள்மீது காட்ட விரும்புகிறார். கர்த்தர் காத்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் எழுந்து உங்களுக்கு ஆறுதல் செய்ய விரும்புகிறார். தேவனாகிய கர்த்தர் நீதி செய்கிறார். கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருக்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
19 சீயோன் மலையின் மேலுள்ள எருசலேமில் கர்த்தருடைய ஜனங்கள் வாழுவார்கள். நீங்கள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள். கர்த்தர் உங்களுடைய அழுகையைக் கேட்டு ஆறுதல் செய்வார். கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுப்பார். அவர் உங்களுக்கு உதவுவார்.
20 கடந்த காலத்தில், எனது ஆண்டவர் (தேவன்) உங்களுக்குத் துன்பமும், தொல்லைகளும் கொடுத்தார். அது உங்களுக்கு தினமும் உண்ணும் அப்பம் போன்றும் தண்ணீர் போன்றும் இருந்தது. ஆனால் தேவன் உங்கள் ஆசிரியர். அவர் உன்னிடமிருந்து இனி தொடர்ந்து ஒளிந்துகொள்ளமாட்டார். நீ உனது ஆசிரியரை உனது சொந்தக் கண்ணால் பார்க்கலாம்.
21 பிறகு, நீ தவறு செய்தால், தவறான வழியில் போனால் (வாழ்ந்தால்), (இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ) நீ உனக்கு பின்னால், “இதுதான் சரியான வழி. இந்த வழியில் நீ போக வேண்டும்” என்ற ஒரு ஓசையைக் கேட்பாய்.
22 உங்களிடம் பொன்னாலும், வெள்ளியாலும் மூடப்பட்ட சிலைகள் உள்ளன. அந்த பொய்த் தெய்வங்கள் உங்களை கறைப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களுக்குச் சேவை செய்வதை நிறுத்துவீர்கள். நீ அந்த தெய்வங்களைத் தீட்டுப்பட்ட ஆடைபோல தூர எறிவாய்.
23 அந்தக் காலத்தில், உனக்காகக் கர்த்தர் மழையை அனுப்புவார். பூமியில் நீ விதைகளை விதைக்கலாம். பூமி உனக்காக உணவை விளைய வைக்கும். நீ ஒரு பெரிய அறுவடையைச் செய்வாய். உங்கள் மிருகங்களுக்கு வயலில் ஏராளமான உணவு இருக்கும். உன் ஆடுகளுக்கு அகலமான மேய்ச்சல் இடம் இருக்கும்.
24 உனது எருதுகளுக்கும் கழுதைகளுக்கும் தேவையான உணவு கிடைக்கும். அங்கு ஏராளமான உணவு இருக்கும். உன் மிருகங்கள் உண்பதற்கு முறத்தாலும், தூற்றுக் கூடையாலும் தூற்றப்பட்ட கப்பிகள் உன்னிடம் இருக்கும்.
25 ஒவ்வொரு மலையிலும் மேடுகளிலும் தண்ணீர் நிறைந்த ஓடைகள் இருக்கும். இவை ஏராளமான ஜனங்கள் கொல்லப்பட்ட பிறகு, கோபுரங்கள் தரையிலே விழுந்த பிறகு நிகழும்.
26 அந்தக் காலத்திலே, சந்திரனிலிருந்து வருகிற ஒளியானது சூரியனின் ஒளிபோல இருக்கும். சூரியனின் ஒளியானது இப்பொழுது இருப்பதைவிட ஏழு மடங்கு மிகுதியாக இருக்கும். சூரியனிலுள்ள ஒரு நாள் வெளிச்சம் ஒரு வாரம் (ஏழு நாள்) வெளிச்சம்போல் இருக்கும். இவை கர்த்தர் தமது உடைந்துபோன ஜனங்களின் அடிகளினிமித்தம் கட்டுகள் கட்டி அவற்றின் அடிக்காயத்தைக் குணமாக்கும்போது நிகழும்.
27 பார்! தொலைவிலிருந்து கர்த்தருடைய நாமம் வந்துகொண்டிருக்கிறது. அவரது கோபம் அடர்ந்த மேகப் புகையோடு நெருப்பு போன்றுள்ளது. கர்த்தருடைய வாய் கோபத்தால் நிறைந்துள்ளது. அவரது நாக்கானது எரிகின்ற நெருப்புபோல் உள்ளது.
28 கர்த்தருடைய சுவாசமானது (ஆவி) கழுத்து மட்டும் எட்டுகிற ஆற்று வெள்ளத்தைப் போன்றுள்ளது. தேசங்களைக் கர்த்தர் நியாயந்தீர்ப்பார். இது “நாசம் என்னும் சல்லடையில்” தேசங்களை அசைப்பது போல இருக்கும். கர்த்தர் அவர்களைக் கட்டுப்படுத்துவார். அது ஜனங்களின் வாயிலே போட்டு கட்டுப்படுத்துகிற கடிவாளத்தைப் போன்றிருக்கும்.
29 அந்தக் காலத்தில், நீங்கள் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவீர்கள். அந்த நேரமானது, ஓய்வு நாளைத் தொடங்கும் இரவுகளைப் போன்றிருக்கும். கர்த்தருடைய மலைக்கு நடந்துபோகையில், நீங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். வழியில் புல்லாங் குழலைக் கவனித்தவண்ணம் இஸ்ரவேலின் கன்மலை அருகில் தொழுதுகொள்ளப் போகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
30 கர்த்தர் அவரது சிறந்த குரலை ஜனங்கள் அனைவரும் கேட்குமாறு செய்வார். கர்த்தர், தம் கரத்தின் வல்லமையை ஜனங்கள் அனைவரும் காணும்படி கோபத்துடன் இறங்கி வருவார். அந்தக் கையானது பெரும் நெருப்பை போல எல்லாவற்றையும் எரிக்கத்தக்கதாக இருக்கும். கர்த்தருடைய வல்லமையானது மழையோடும், கல்மழையோடும் வருகிற புயல்போல இருக்கும்.
31 கர்த்தருடைய குரலைக் கேட்டதும் அசீரியா அஞ்சும். கர்த்தர் அசீரியாவை கோலால் அடிப்பார்.
32 கர்த்தர் அசீரியாவை அடிப்பார். அது முரசின்மீது தாளம் போடுவது போலவும், வீணைகளை மீட்டுவது போலவும் இருக்கும். கர்த்தர் தமது சிறந்த கையால் (வல்லமை) அசீரியாவைத் தாக்குவார்.
33 தோப்பேத் ஏற்கெனவே நீண்ட காலத்திற்கு முன்பே தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இது அரசனுக்குத் தயாராக உள்ளது. இது மிக ஆழமாகவும் அகலமாகவும் அமைக்கப்பட்டது. அங்கே பெரிய விறகுக் கட்டும், நெருப்பும் உள்ளது. கர்த்தருடைய ஆவியானவர் எரியும் கந்தக ஓடைபோல வந்து அதனை எரிப்பார்.
Isaiah 30 ERV IRV TRV