1 ஆகாஸ் யோதாமின் மகன், யோதாம் உசியாவின் மகன், ரேத்சீன் ஆராமின் அரசன். ரெமலியாவின் மகனான பெக்கா இஸ்ரவேலின் அரசன். ஆகாஸ் யூதாவின் அரசனாக இருந்த காலத்திலே, ரேத்சீனும் பெக்காவும் எருசலேமிற்குப் போய் அதற்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களால் அந்நகரத்தைத் தோற்கடிக்க முடியவில்லை.
2 “ஆராமின் படையும் இஸ்ரவேலின் படையும் சேர்ந்துகொண்டு அவை இரண்டும் போருக்கு வந்துள்ளன” என்ற செய்தி தாவீதின் குடும்பத்திற்குச் சொல்லப்பட்டது. ஆகாஸ் அரசன் இதனைக் கேள்விப்பட்டதும், அவனும் ஜனங்களும் மிகவும் பயந்தனர். அவர்கள் புயல் காற்றில் அகப்பட்ட மரங்களைப் போன்று நடுங்கினார்கள்.
3 பிறகு கர்த்தர் ஏசாயாவிடம், நீயும் உனது மகனான சேயார் யாசூபும் வெளியே போய் ஆகாசிடம் பேசுங்கள். மேல் குளத்தில் தண்ணீர் பாய்கிற இடத்துக்குப் போங்கள். இது வண்ணார நிலத்துக்குப் போகும் தெரு.
4 “ஆகாசிடம், ‘எச்சரிக்கையாக இரு, ஆனால் அமைதியாக இரு. அஞ்சாதே, ரேத்சீனையும் ரெமலியாவின் மகனையும் உனக்கு அச்சம் ஏற்படுத்தும்படிவிடாதே! அவர்கள் இருவரும் இரண்டு எரிந்த கட்டைகளைப் போன்றவர்கள். முன்பு எரிந்தார்கள். இப்போது அவர்கள் வெறுமனே புகைகிறார்கள். ரேத்சீன், ஆராம், ரெமலியாவின் மகன் ஆகிய அனைவரும் கோபமாக இருக்கிறார்கள்.
5 அவர்கள் உனக்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள்.
6 அவர்கள்: “நாம் போய் யூதாவிற்கு எதிராகச் சண்டையிடுவோம். நாம் யூதாவை நமக்காகப் பங்கிட்டுக்கொள்வோம். நாம் தாபேயாலின் மகனை யூதாவின் புதிய அரசனாக்குவோம் என்றனர்.”’”
7 எனது கர்த்தராகிய ஆண்டவர், “அவர்களின் திட்டம் வெற்றி பெறாது. அது நிறைவேறாது.
8 தமஸ்குவின் அரசனாக ரேத்சீன் இருக்கும்வரை இது நடக்காது. எப்பிராயீம் (இஸ்ரவேல்) இப்போது ஒரு தேசம். ஆனால் எதிர்காலத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு நாடாக இருக்காது.
9 சமாரியா எப்பீராயீமின் (இஸ்ரவேலின்) தலைநகரமாக இருக்கும்வரை இது நடக்காது. ரெமலியாவின் மகன் சமாரியாவின் அரசனாக இருக்கும் அவர்களின் திட்டம் நிறைவேறாது. நீங்கள் இந்தச் செய்தியை நம்பாவிட்டால் பிறகு ஜனங்கள் உன்னை நம்பமாட்டார்கள்” என்றார்.
10 பிறகு கர்த்தர் தொடர்ந்து ஆகாசோடு பேசினார்.
11 கர்த்தர், “இவையெல்லாம் உண்மை என்று உங்களுக்கு நிரூபிக்க ஒரு அடையாளத்தைக் கேளுங்கள், நீங்கள் விரும்புகிற எந்த அடையாளத்தையும் நீங்கள் கேட்கலாம். அந்த அடையாளம் பாதாளம் போன்ற ஆழமான இடத்தில் இருந்தும் வரலாம், அல்லது அந்த அடையாளம் வானம் போன்ற உயரமான இடத்திலிருந்தும் வரலாம்” என்றார்.
12 ஆனால் ஆகாஸ், “அதை நிரூபிக்க நான் அடையாளத்தைக் கேட்கமாட்டேன். நான் கர்த்தரைச் சோதிக்கமாட்டேன்” என்றான்.
13 பிறகு ஏசாயா, “தாவீதின் குடும்பமே, கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் ஜனங்கள் பொறுமையைச் சோதிக்கிறீர்கள். அது உங்களுக்கு முக்கியமாகப்படவில்லை. எனவே இப்பொழுது என் தேவனுடைய பொறுமையைச் சோதிக்கிறீர்கள்.
14 ஆனால் எனது தேவனாகிய ஆண்டவர் உனக்கு ஒரு அடையாளம் காட்டுவார். இந்த இளம் கன்னிப் பெண்ணைப் பாரும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். இவள் ஒரு மகனைப் பெறுவாள் அவள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.
15 இம்மானுவேல் வெண்ணெயையும் தேனையும் தின்பார், அவர் இவ்வாறு வாழ்வார், நல்லவற்றை எவ்வாறு செய்வது என்றும் பாவத்தை எவ்வாறு செய்யாமல் விடுவது என்றும் வாழ்ந்துக்காட்டுவார்.
16 ஆனால் அக்குழந்தை நன்மை தெரிந்து தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளும் வயது வரும் முன்னால், எப்பிராயீம் (இஸ்ரவேல்) மற்றும் ஆராம் நாடு காலியாகிவிடும். நீ இப்பொழுது அந்த இரண்டு நாட்டு அரசர்கள் பற்றியும் பயப்படுகிறாய்.
17 “ஆனால் நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். ஏனென்றால், கர்த்தர் உனக்கு துன்பக் காலங்களைக் கொண்டுவருவார். அத்துன்பங்கள் உனது ஜனங்களுக்கும் உன் தந்தையின் குடும்பத்து ஜனங்களுக்கும் ஏற்படும். தேவன் என்ன செய்வார்? தேவன் அசீரியாவின் அரசனை உனக்கு எதிராகப் போரிட அழைத்து வருவார்.
18 “அப்பொழுது, கர்த்தர் ‘ஈயை’ அழைப்பார். (அந்த ‘ஈக்கள்’ இப்போது எகிப்து ஓடைக் கரைகளில் உள்ளன). கர்த்தர் ‘தேனீக்களை’ அழைப்பார். (இந்த தேனீக்கள் இப்பொழுது அசீரியா நாட்டிலுள்ளன). இந்தப் பகைவர்கள் உன் நாட்டிற்குள் வருவார்கள்.
19 இந்தப் பகைவர்கள், வனாந்தரங்களின் பள்ளத் தாக்குகளிலும், கல்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முள்காடுகளிலும், மேய்ச்சல் காடுகளிலும் தங்குவார்கள்.
20 கர்த்தர் யூதாவைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவார். அசீரியா வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கும். கர்த்தர் யூதாவை தலையிலிருந்து கால்வரை சவரம் செய்து நீக்குவது போன்றிருக்கும். அது யூதாவின் தாடியை கர்த்தர் நீக்குவது போன்று இருக்கும்.
21 “அப்போது, ஒருவன் ஒரு பசுவையும் இரு ஆடுகளையும் மட்டும் உயிரோடு பாதுகாப்பான்.
22 அவன் வெண்ணெய் தின்பதற்குரிய பாலை மட்டுமே பெறுவான். அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் வெண்ணையையும் தேனையும் உண்பார்கள்.
23 இந்தச் தேசத்தில், இப்பொழுது 1,000 திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 1,000 வெள்ளிகள் மதிப்புடையது. ஆனால் இந்த தேசம் முள்ளும் புதரும் நிறைந்ததாகும்.
24 அவை காடாக இருப்பதால் வேட்டைக்கு மட்டுமே பயன்படும்.
25 ஜனங்கள் ஒரு காலத்தில் உழைத்து இக்குன்றுகளில் உணவுப் பொருட்களை விளைய வைத்தனர். ஆனால் இப்போது ஜனங்கள் அங்கே செல்வதில்லை. அந்தத் தேசம் முள்ளாலும் பதராலும் நிறைந்துவிடும். அது ஆடு மாடுகள் செல்வதற்குரிய இடங்களாகும்” என்றான்.
Isaiah 7 ERV IRV TRV