Job 29 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 யோபு அவனுடைய பேச்சைத் தொடர்ந்தான்.
2 யோபு: “தேவன் என்னைக் கண்காணித்துக் கவனித்து வந்தபோது, பல மாதங்களுக்கு முன்பு இருந்தாற்போன்று என் வாழ்க்கை அமையாதா என விரும்புகிறேன்.
3 அந்நாட்களில் தேவனுடைய ஒளி என் மீது பிரகாசித்ததால், நான் இருளின் ஊடே நடக்க முடிந்தது. தேவன் நான் வாழ வேண்டிய சரியான வழியைக் காண்பித்தார்.
4 நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன். அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார்.
5 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னோடிருந்தும், என் பிள்ளைகள் என்னருகே இருந்ததுமான காலத்தை நான் விரும்புகிறேன்.
6 என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது. நான் பாலேட்டில் என் கால்களைக் கழுவினேன், சிறந்த எண்ணெய்கள் என்னிடம் ஏராளம் இருந்தன.
7 “நான் நகரவாயிலுக்குச் சென்று, பொது ஜனங்கள் கூடும் இடத்தில் நகர மூப்பர்களுடன் வீற்றிருந்த நாட்கள் அவை.
8 அங்கு எல்லா ஜனங்களும் எனக்கு மதிப்பளித்தார்கள்! நான் வருவதைப் பார்க்கும்போது இளைஞர்கள் என் பாதையிலிருந்து (எனக்கு வழிவிட்டு) விலகி நின்றார்கள். முதியோர் எழுந்து நின்றனர். என்னை அவர்கள் மதித்ததைக் காட்டும் பெருட்டு அவர்கள் எழுந்தனர்.
9 ஜனங்களின் தலைவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள். பிறரும் அமைதியாயிருக்கும்படி அவர்கள் தங்கள் கைகளை வாய்களில் வைத்தார்கள்.
10 மிக முக்கியமான தலைவர்கள் கூட தங்கள் சத்தத்தைக் குறைத்து (தாழ்ந்த தொனியில்) பேசினார்கள். ஆம், அவர்கள் நாவு வாயின்மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டாற்போலத் தோன்றிற்று.
11 ஜனங்கள் எனக்குச் செவிகொடுத்தார்கள், என்னைப்பற்றி நல்ல காரியங்களைச் சொன்னார்கள்.
12 ஏனெனில், ஏழை உதவிக்காக கூப்பிட்டபோது, நான் உதவினேன். நான் பெற்றோரற்ற பிள்ளைகளுக்கும், கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும் உதவினேன்.
13 கெட்டுப்போன மனிதன் என்னை ஆசீர்வதித்தான். உதவி தேவைப்பட்ட விதவைகளுக்கு நான் உதவினேன்.
14 நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன். நியாயம் எனக்கு அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்தது.
15 குருடர்களுக்கு நான் கண்களானேன். அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு வழி நடத்தினேன். முடவருக்கு நான் காலானேன். அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு அவர்களைச் சுமந்து சென்றேன்.
16 நான் ஏழைகளுக்குத் தந்தையைப் போன்றிருந்தேன். நான் அறிந்திராத ஜனங்களுக்கு உதவினேன். நியாயசபையில் அவர்களின் வழக்கு வெற்றிப்பெற உதவினேன்.
17 நான் தீயோரின் ஆற்றலை அழித்தேன். அவர்களிடமிருந்து களங்கமற்றோரைக் காப்பாற்றினேன்.
18 “என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க வயது முதிர்ந்தவனாக நீண்ட காலம் வாழ்வேன் என எண்ணியிருந்தேன்.
19 பனிப்படர்ந்த கிளைகளும் தண்ணீரை மிகுதியாகப் பெற்ற வேர்களையுமுடைய ஆரோக்கியமான செடியைப்போல நானும் ஆரேக்கியமாயிருப்பேன் என எண்ணியிருந்தேன்.
20 என் பெலன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது. என் கையிலுள்ள வில் புதுப்பெலன் கொண்டது.
21 “கடந்தக் காலத்தில், ஜனங்கள் எனக்குச் செவி கொடுத்தார்கள். அவர்கள் எனது அறிவுரைக்காகக் காத்திருந்தபோது அமைதியாக இருந்தார்கள்.
22 நான் பேசி முடித்தப் பின்பு, எனக்குச் செவி கொடுத்த ஜனங்கள், அதற்குமேல் எதையும் கூறவில்லை. என் வார்த்தைகளை அவர்கள் மகிழ்சியாக ஏற்றுக்கொண்டனர்.
23 மழைக்காக காத்திருப்பதைப்போல நான் பேசுவதற்காக ஜனங்கள் காத்திருந்தார்கள். வசந்த காலத்தில் தரை மழையை உறிஞ்சுவதுபோல, அவர்கள் என் வார்த்தைகளை குடித்தார்கள்.
24 நான் அந்த ஜனங்களோடு சேர்ந்து சிரித்தேன். அவர்களால் அதை நம்ப முடியவில்லை. என் புன்னகை அவர்களுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது.
25 நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன். பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் அரசனைப் போன்று, நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.