1 ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, அவர்களிடம் கூறியது:2 “நீங்கள் இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; உலகில் உள்ள உயிரினங்களில் நீங்கள் உண்ணத்தக்கவை இவைகளே.3 கால்நடைகளில், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிற, விரிசல் குளம்புள்ள, அசைபோடுபவற்றை நீங்கள் உண்ணலாம்.4 அசைபோடும் கால்நடைக்கு விரிகுளம்பில்லையெனில், அதனை நீங்கள் உண்ணலாகாது. குறிப்பாக ஒட்டகம்; அது அசைபோடும்; ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை; எனவே, அது உங்களுக்குத் தீட்டு.5 குழிமுயல் அசைபோடும்; ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை; எனவே, அது உங்களுக்குத் தீட்டு.6 முயல் அசைபோடும்; ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை; எனவே, அது உங்களுக்குத் தீட்டு.7 பன்றி இரண்டாகப் பிரிந்திருக்கும் விரிகுளம்புடையது; ஆனால், அது அசைபோடாது; எனவே, அது உங்களுக்குத் தீட்டு.8 இவற்றின் இறைச்சியை உண்ணலாகாது. இவற்றின் சடலங்களைத் தொடவும் கூடாது. இவை உங்களுக்குத் தீட்டானவை.⒫9 நீர்நிலைகளில் இருப்பனவற்றில் நீங்கள் உண்ணத்தக்கவை; கடல்களும், ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் இருப்பனவற்றில் துடுப்பும் செதிலுமுள்ளவை அனைத்தும் நீங்கள் உண்ணத்தக்கவை.10 ஆனால், கடல்களும் ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் செறிந்திருக்கும் உயிரினங்களும், துடுப்பும் செதிலும் அற்றவை உங்களுக்கு அருவருப்பு.11 அவை உங்களுக்கு அருவருப்பு. அவற்றின் இறைச்சியை உண்ணலாகாது. அவற்றின் சடலங்களை அருவருப்பாகக் கருதுங்கள்.12 நீர்வாழ்வனவற்றில் துடுப்பும் செதிலும் அற்றவையாவும் உங்களுக்கு அருவருப்பு.⒫13 பறவைகளிலும் நீங்கள் உண்ணாமல் அருவருக்க வேண்டியவை; கழுகு, கருடன், கடலூராஞ்சி,14 பருந்து, வல்லூறு, அதன் இனம்,15 காகம், அதன் இனம்,16 தீக்கோழி, கூகை, சம்புகம், சிறுகழுகு, அதன் இனம்,17 ஆந்தை, சகோரம், கோட்டான்,18 நாரை, கூழக்கடா, குருகு,19 கொக்கு, இராசாளி, அதன் இனம், புழுக்கொத்தி, வெளவால்.⒫20 பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் ஊர்வன யாவும் உங்களுக்கு அருவருப்பு.21 ஆயினும், நான்கு கால்களால் நடமாடியும் தரையில் தத்திப் பாயும்படி நெடிய பின்னங்கால்கள் உடையனவற்றை உண்ணலாம்.22 நீங்கள் உண்ணக்கூடியவை; தத்துக்கிளி, அதன் இனம்; வெட்டுக்கிளி, அதன் இனம்; மொட்டை வெட்டுக்கிளி, அதன் இனம்; சுவர்க்கோழி, அதன் இனம்.23 பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பு.⒫24 அவை உங்களுக்குத் தீட்டு, அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.25 அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். மாலைவரை அவர் தீட்டுடையவர்.26 இரண்டாய்ப் பிரிந்த குளம்புகள் இல்லாமலும் அசைபோடாமலும் இருக்கும் அனைத்து உயிரினங்களைத் தொடுகிற எல்லாரும் தீட்டுடையவர்.27 நான்கு கால் உயிர்களில் உள்ளங்கால் ஊன்றி நடக்கும் அனைத்தும் உங்களுக்குத் தீட்டு.28 அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். மாலைவரை அவர் தீட்டுடையவர். அவர் உங்களுக்குத் தீட்டு.⒫29 நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் உங்களுக்குத் தீட்டானவை; எலி, சுண்டெலி, ஆமை இனம்;30 உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி31 ஊர்வனவற்றில் இவை உங்களுக்குத் தீட்டு. அவற்றுள் செத்ததைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.32 அவற்றுள் செத்த ஏதேனும், எதன்மேலாவது விழுந்தால் அது தீட்டுப்படும். அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், கோணிப்பையானாலும், வேலைக்கு உதவும் எந்தக் கருவியானாலும் மாலைவரை அது தண்ணீரில் போடப்பட வேண்டும். மாலைவரை அது தீட்டுப்பட்டது. பின்னால் அது தூய்மையாகும்.33 அவற்றுள் ஏதேனும் மண் பாண்டத்துக்குள் விழுந்தால் அதனுள் இருக்கும் அனைத்தும் தீட்டுப்பட்டுவிடும். எனவே, அது உடைக்கப்பட வேண்டும்.34 உண்ணத்தக்க எந்த உணவிலும் இப்பாண்டத்துத் தண்ணீரில்பட்டால் அது தீட்டு; அந்தப் பாண்டத்திலிருக்கும் எந்தப் பானமும் தீட்டு.35 அவற்றின் சடலம் எதன்மீது விழுந்தாலும் அது தீட்டு; அடுப்போ சமையல் பாண்டமோ எனில், அவை உடைக்கப்பட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டு, ஏனெனில், அவை தீட்டுப்பட்டிருக்கும்.36 நீரூற்றும் மிகுந்த நீருள்ள கிணறும் எனில், அவை தூய்மையாய் இருக்கும்; ஆனால், அவற்றின் சடலம் தொடும்பகுதி தீட்டுப்பட்டது.37 விதைக்கிற தானியத்தின் மீது அவற்றின் சடலம் விழுந்தால் அது தீட்டன்று.38 தண்ணீர் விடப்பட்ட விதைமேல் விழுந்தால், அது தீட்டாகும்.⒫39 உங்கள் உணவுப்பொருளான கால்நடை ஒன்று சாக, அதன் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.40 அதன் சடலத்தைத் தின்பவர் தம் உடைகளைத் துவைக்கவேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர். மேலும் அதன் சடலத்தை எடுத்துப் போகிறவரும் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர்.⒫41 தரையில் நகர்ந்து செல்லும் ஊர்வன அனைத்தும் அருவருப்பானவை. அவற்றை உண்ணலாகாது.42 நிலத்தில் ஊர்வனவற்றையும், வயிற்றால் நகர்வனவற்றையும், நான்கு காலால் ஊர்வனவற்றையும் பல கால்களுள்ள எதனையும் உண்ணலாகாது. அவை அருவருப்பு.43 நகருகிற எந்த ஊர்வனவும் உங்களையும் தீட்டுப்படுத்தலாகாது. அவற்றால் தீட்டுப்படாமல் இருங்கள். ஏனெனில், அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.44 நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள். எனவே, உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர். நிலத்தில் ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டுப்படுத்தலாகாது.45 உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர்!⒫46 விலங்கினம், பறவைகள், நீர்வாழும் எல்லா உயிரினங்கள், நிலத்தில் நகரும் உயிரினங்கள் ஆகியவை பற்றிய சட்டம் இதுவே.47 இதனின்று, தீட்டுடையதற்கும் தீட்டற்றதற்கும், உண்ணத்தகுந்த உயிரினங்களுக்கும் உண்ணத்தகாத உயிரினங்களுக்கும் வேறுபாடு தெரிந்துகொள்க!
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.