Leviticus 12 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 மேலும் கர்த்தர் மோசேயிடம்,
2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: ஒரு பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால், அவள் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவளாக இருப்பாள். இது மாதவிலக்காக இருக்கும் நாட்களைப் போல் இருக்கும்.
3 எட்டாவது நாள் அந்த குழந்தை விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.
4 பிறகு அவள் முப்பத்துமூன்று நாட்கள் இரத்த சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அந்நாட்களில் அவள் பரிசுத்தமான எந்தப் பொருட்களையும் தொடவோ, பரிசுத்தமான எந்த இடத்திற்குள்ளும் நுழையவோ கூடாது.
5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் இரு வாரங்களுக்குத் தீட்டாக இருப்பாள். அந்நாட்கள் அவளுக்கு மாத விலக்கான நாட்களைப் போன்றே கருதப்படும். இரத்த சுத்திகரிப்புக்கு அவளுக்கு அறுபத்தாறு நாட்கள் தேவைப்படும்.
6 “ஒரு பெண், ஆண் அல்லது பெண் பிள்ளையைப் பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சிறப்பான பலிகளைக் கொண்டு வர வேண்டும். அவள் ஆசாரியனிடம் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் பலிகளை வழங்க வேண்டும். அவள் ஓராண்டு நிறைந்த ஆட்டுக் குட்டியை தகன பலிக்காகவும், ஒரு புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறாவைப் பாவப்பரிகார பலிக்காகவும் கொண்டு வர வேண்டும்.
7 ஒரு பெண்ணுக்கு ஆட்டுக் குட்டியைக் கொடுக்க முடியாவிட்டால் அவள் இரண்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது கொண்டு வரலாம். இவற்றில் ஒரு புறா தகன பலிக்காகவும் இன்னொரு புறா பாவப்பரிகார பலிக்காகவும் பயன்படும். ஆசாரியன் இவற்றைக் கர்த்தரின் சந்நிதானத்தில் பலியிட வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அவளுக்காக பாவ நிவாரணம் செய்ய வேண்டும். அவள் அப்படியே சுத்தமாவாள். இவையே ஆண் அல்லது பெண் குழந்தைப் பெற்ற ஒரு புதிய தாய்க்குரிய விதிகள் ஆகும்” என்று கூறினார்.