Luke 8 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.4 பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது:5 “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.6 வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.8 இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.9 இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.10 அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே, ⁽‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்துகொள்வதில்லை.’ ”⁾11 “இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை.12 வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.13 பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்; சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.14 முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.15 நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.16 “எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.17 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.18 ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.”19 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால், மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.20 “உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.21 அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார்.22 ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், “ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள்.23 படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.24 அவர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று.25 அவர் அவர்களிடம், “உங்கள் நம்பிக்கை எங்கே?” என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், “இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.26 அவர்கள் கலிலேயாவுக்கு எதிரே இருக்கும் கெரசேனர் பகுதியை நோக்கிப் படகைச் செலுத்தினார்கள்.27 கரையில் இறங்கியதும் அந்நகரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார். பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை; வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கிவந்தார்.28 இயேசுவைக் கண்டதும் கத்திக்கொண்டு அவர்முன் விழுந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? என்னை வதைக்க வேண்டாம் என உம்மிடம் மன்றாடுகிறேன்” என்று அவர் உரத்த குரலில் கூறினார்.29 ஏனென்றால், அவரைவிட்டு வெளியேறுமாறு அத்தீய ஆவிக்கு இயேசு கட்டளையிட்டிருந்தார். அது எத்தனையோ முறை அவரைப் பிடித்திருந்தது. அவ்வேளைகளில் அவர் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் கட்டப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தும் அவற்றை உடைத்து எறிந்துவிடுவார். அது மட்டுமல்ல, தீய ஆவி அவரைப் பாலை நிலத்திற்கும் இழுத்துச் செல்லும்.30 இயேசு அவரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க, அவர், “இலேகியோன்” என்றார். ஏனெனில், பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன.31 அவை தங்களைப் பாதாளத்துக்குள் போகப் பணிக்கவேண்டாமென அவரை வேண்டின.32 அங்கு ஒரு மலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றுக்குள் புகும்படி தங்களை அனுமதிக்குமாறு பேய்கள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார்.33 பேய்கள் அவரைவிட்டு வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. பன்றிக்கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து ஏரியில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.34 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் நடந்ததைக் கண்டு ஓடிப்போய், நகரிலும் நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள்.35 நடந்தது என்ன என்று பார்க்க மக்கள் இயேசுவிடம் வந்தனர்; பேய்கள் நீங்கப்பெற்றவர் ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.36 நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.37 அப்பொழுது கெரசேனரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த மக்கள் அனைவரும் அச்சம் மேலிட்டவர்களாய்த் தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகேறித் திரும்பிச் சென்றார்.38 ❮38-39❯அப்போது பேய்கள் நீங்கப்பெற்றவர் தம்மைக் கூட்டிச் செல்லும்படி இயேசுவிடம் மன்றாடினார். அவரோ, “உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப்போம்; கடவுள் உமக்குச் செய்ததையெல்லாம் எடுத்துக்கூறும்” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார். அவரும் நகரெங்கும் போய், இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் அறிவித்தார்.39 Same as above40 இயேசு திரும்பி வந்தபோது அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.41 அப்போது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினார்.42 ஏனெனில், பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தறுவாயிலிருந்தாள். ⒫ இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது43 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.44 அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று.45 “என்னைத் தொட்டவர் யார்?” என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர். பேதுரு, “ஆண்டவரே, மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறதே” என்றார்.46 அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்” என்றார்.47 அப்பெண்தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக்கொண்டே வந்து அவர்முன் விழுந்து, தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார்.48 இயேசு அவரிடம், “மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ” என்றார்.⒫49 அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஒருவர் வந்து, “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். இனி போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றார்.50 இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, “அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்” என்றார்.51 வீட்டுக்குள் வந்ததும் பேதுரு, யோவான், யாக்கோபு, சிறுமியின் தாய், தந்தை ஆகியோரைத் தவிர எவரையும் அவர் தம்மோடு உள்ளே வர அனுமதிக்கவில்லை.52 அவளுக்காக அனைவரும் மாரடித்துப் புலம்பி அழுதுகொண்டிருந்தார்கள். இயேசுவோ, “அழாதீர்கள்; இவள் இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார்.53 அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால் அவரைப் பார்த்து அவர்கள் நகைத்தார்கள்.54 அவர் அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்திடு!” என்று கூப்பிட்டார்.55 உயிர் மூச்சுத் திரும்பி வரவே, உடனே அவள் எழுந்தாள்; இயேசு அவளுக்கு உணவு கொடுக்கப் பணித்தார்.56 அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர். நடந்ததை எவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.Luke 8 ERV IRV TRV