Numbers 20 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 முதல் மாதத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.2 அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர்.3 மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: “ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே!4 ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா?5 இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர எங்களை எகிப்திலிருந்து வெளியேறப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை; குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!”6 பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது.7 ஆண்டவர் மோசேயிடம்,8 “கோலை எடுத்துக் கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறைத் தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு, அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள்” என்றார்.9 அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார்.⒫10 மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா?” என்று கேட்டார்.11 பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இருமுறை அடித்தார்; தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர்.12 ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக்கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்க மாட்டீர்கள்” என்றார்.13 இது மெரிபாவின்* தண்ணீர்; இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார்.14 காதேசிலிருந்து மோசே ஏதோம் மன்னனிடம் தூதரை அனுப்பிக் கூறியது: உன் சகோதரன் இஸ்ரயேல் கூறுவது இதுவே; எங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் நீர் அறிவீர்;15 எங்கள் மூதாதையர் எகிப்துக்குச் சென்றனர்; நாங்கள் எகிப்திலே நெடுங்காலம் தங்கியிருந்தோம்; எகிப்தியர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் மிகவும் கொடுமையாக நடத்தினார்கள்;16 நாங்கள் ஆண்டவரை நோக்கி அழுதபோது அவர் எங்கள் குரலைக் கேட்டு எங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர ஒரு தூதனை அனுப்பினார்; நாங்கள் இங்கு உமது எல்லையின் ஓரத்திலுள்ள காதேசு நகரில் இருக்கிறோம்.17 இப்போதும் உம் நாடு வழியே எங்களைப் போக விடும்; நாங்கள் வயலின் ஊடேயோ திராட்சைத் தோட்டத்தின் ஊடேயோ கடந்து செல்ல மாட்டோம்; எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கமாட்டோம்; நாங்கள் அரச நெடுஞ்சாலை வழியே செல்வோம்; உம் எல்லையைத் தாண்டும்வரை நாங்கள் வலப்புறமோ இடப்புறமோ திரும்ப மாட்டோம்.⒫18 ஆனால் ஏதோம், “நீங்கள் கடந்து செல்லக்கூடாது, மீறினால் நான் உங்களுக்கெதிராக வாளெடுத்து வரவேண்டியிருக்கும் “என்று அவருக்குக் கூறியனுப்பினான்.19 இஸ்ரயேல் மக்கள் அவனிடம், “நாங்கள் நெடுஞ்சாலை வழியே செல்வோம்; நாங்களோ, எங்கள் கால்நடைகளோ, உம் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைத் தருவோம்; கால்நடையாகக் கடந்து செல்லமட்டும் எங்களுக்கு அனுமதி தாரும், வேறெதுவும் வேண்டாம்” என்றனர்.20 ஆனால் அவனோ, “நீங்கள் கடந்து செல்லவே கூடாது” என்று கூறிவிட்டான். ஏதோம் திரண்ட வலிமை மிகுந்த படையோடு அவர்களுக்கெதிராக வந்தான்.21 இவ்வாறு, ஏதோம் தன் எல்லைக்குள் இஸ்ரயேலுக்கு வழி தர மறுத்தான்; எனவே, இஸ்ரயேலர் அவனை விட்டு விலகிப் போயினர்.22 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் காதேசிலிருந்து பயணம்செய்து, ‘ஓர்’ என்ற மலைக்கு வந்தனர்.23 ஆண்டவர் ஏதோம் நாட்டின் எல்லையில் ஓர் என்ற மலையில் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:24 ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவான்; நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டுக்குள் அவன் நுழைய மாட்டான்; ஏனெனில், ‘மெரிபாவின் தண்ணீர்’ அருகில் நீங்கள் என் கட்டளையை மீறினீர்கள்.25 ஆரோனையும் அவனுடைய மகன் எலயாசரையும் ஓர் என்ற மலைக்குக் கூட்டிக் கொண்டு வா;26 ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவனுடைய மகன் எலயாசருக்கு உடுத்து; ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக் கொள்ளப்படுவான், அங்கேயே இறப்பான்”.27 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்; மக்கள் கூட்டமைப்பு முழுவதின் பார்வையிலும் அவர்கள் ஓர் என்ற மலைக்கு ஏறிப் போனார்கள்.28 மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர் மகன் எலயாசருக்கு உடுத்தினார்; ஆரோன் அங்கேயே மலையுச்சியில் இறந்தார். பின் மோசேயும் எலயாசரும் மலையைவிட்டுக் கீழிறங்கி வந்தனர்.29 ஆரோன் இறந்ததை மக்கள் கூட்டமைப்பு அறிந்தது; இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரோனுக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.Numbers 20 ERV IRV TRV