Numbers 34 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:2 இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; கானான் நாட்டின் முழுப்பரப்பும் உங்களுக்கு உரிமைச் சொத்தாக வந்து சேரும். கானான் நாட்டில் நீங்கள் நுழையும் போது,3 உங்கள் தெற்குப் பகுதி சீன்பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கடலின் முடிவிலிருந்து துவங்கும் பகுதியாகும்.4 அந்த எல்லை அக்கிரபிம் மேட்டுக்குத் தெற்கே சுற்றிச் சீனைத் தாண்டிக் காதேசு பர்னேயாவுக்குத் தென்புறத்தை அடையும்; பின், அது அட்சராதாருக்குச் சென்று அட்சமோன் ஓரமாகக் கடந்து செல்லும்.5 அந்த எல்லை அட்சமோனிலிருந்து எகிப்தின் சிற்றாறு வரைக்கும் சுற்றிப் போய்ப் பெருங்கடலில் முடிவுறும்.⒫6 உங்கள் மேற்கு எல்லை பெருங்கடலும், அதன் கரையோரமும்; இதுவே உங்கள் மேற்கு எல்லை.7 உங்கள் வட எல்லையாகப் பெருங்கடலிலிருந்து ஓர் மலை வரை நீங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ளுங்கள்.8 ஓர் மலையிலிருந்து காமாத்தின் நுழைவாயில் வரை அதனைக் குறிப்பீர்கள்; எல்லையின் முடிவு செதாதில் இருக்கும்.9 அந்த எல்லை சிப்ரோன் வரை தொடர்ந்து சென்று அட்சரேனோனில் முடிவுறும்; இதுவே உங்கள் வடஎல்லை.⒫10 உங்கள் கிழக்கு எல்லையாக அட்சரேனோனிலிருந்து செபாம் வரைக்குமுள்ள பகுதியைக் குறித்துக் கொள்ளுங்கள்.11 அந்த எல்லை அயினுக்குக் கிழக்கே செபாம் முதல் ரிப்லா வரைக்கும் செல்லும்; அந்த எல்லை கிழக்கு நோக்கிச் சென்று கினரேத்துக் கடலின் சரிவை வந்தடையும்;12 அந்த எல்லை யோர்தானுக்குச் சென்று பின் உப்புக் கடலில் முடிவுறும்.⒫13 மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: திருவுளச் சீட்டு மூலம் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாடு இதுவே: இதனை ஒன்பது குலங்களுக்கும் பாதிக் குலத்துக்கும் கொடுக்க ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்;14 மூதாதையர் வீடுகள் வாரியாக ரூபன் புதல்வர் குலமும், தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் காத்து புதல்வர் குலமும் மனாசேயின் பாதிக் குலமும் தங்கள் உரிமைச் சொத்தினைப் பெற்றுவிட்டனர்.15 இரண்டு குலங்களும் பாதிக் குலமும் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் கிழக்கே கதிரவன் உதயம் நோக்கித் தங்கள் உரிமைச் சொத்தைப் பெற்றுள்ளார்கள்.16 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:17 உரிமைச் சொத்துக்காக உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுத் தருவோரின் பெயர்களாவன; குரு எலயாசர்; நூனின் மகன் யோசுவா.18 இவர்களைத் தவிர உரிமைச் சொத்துக்காக நாட்டைப் பங்கிடும்படி ஒவ்வொரு குலத்திலிருந்தும் தலைவன் ஒருவனை நீங்கள் தேர்ந்து கொள்ள வேண்டும்.⒫19 அவர்களின் பெயர்கள்: யூதாக் குலத்திலிருந்து எபுன்னேயின் மகன் காலேபு;20 சிமியோன் மக்களின் குலத்திலிருந்து அம்மிகூதின் மகன் செமுவேல்.21 பென்யமீன் குலத்திலிருந்து கிஸ்லோனின் மகன் எலிதாது;22 தாண் மக்களின் குலத்திலிருந்து வரும் தலைவன், யோக்லியின் மகன் புக்கி.23 யோசோப்பின் மக்களில் மனாசே புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன் எப்போத்தின் மகன் கன்னியேல்;24 எப்ராயிம் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், சிப்தானின் மகன் கெமுவேல்;25 செபுலோன் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், பர்னாக்கின் மகன் எலிசாபான்;26 இசக்கார் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அசானின் மகன் பல்தியேல்;27 ஆசேர் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், செலோமியின் மகன் அகிகூத்து;28 நப்தலி புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அம்மிகூத்தின் மகன் பெதாவேல்;29 கானான் நாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு உரிமைச் சொத்தைப் பங்கிடும்படி ஆண்டவரால் பணிக்கப்பட்டவர்கள் இவர்களே.