Psalm 41 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல் பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை.
3 படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்.
4 கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
5 அவன் எப்பொழுது சாவான், அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள்.
6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்.
7 என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து,
8 தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
9 என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.
10 கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும்.
11 என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன்.
12 நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர். ஆமென், ஆமென்.