1 பின்னர் அந்தத் தூதன் ஜீவதண்ணீர் ஓடுகின்ற ஆற்றினை எனக்குக் காட்டினான். அது பளிங்குபோன்று பிரகாசமாக இருந்தது. அது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருந்த சிம்மாசனத்தில் இருந்து பாய்ந்தது.
2 அது நகரத் தெருவின் நடுவில் பாய்ந்தது. அந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் வாழ்வின் மரம் இருந்தது. அது ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை கனிகளைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் அது கனிதருகிறது. அம்மரத்தின் இலைகள் மக்களின் நோயைக் குணமாக்கும் தன்மையுடையவை.
3 தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள்.
4 தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும்.
5 அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் அரசர்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர்.
6 அந்தத் தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் உண்மையானவை, நம்பத் தகுந்தவை. பரிசுத்த தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவனாக இருக்கிற கர்த்தர் உடனடியாக என்ன நடக்க வேண்டுமென தம் ஊழியர்களுக்குக் காட்டத் தன் தூதனை அனுப்பினார்.
7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான்.
8 நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன்.
9 ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான்.
10 மேலும் அத்தூதன் என்னிடம், “இந்நூலில் உள்ள தீர்க்கதரிசனமான வசனங்களை இரகசியம் போல் மூடிவைக்க வேண்டாம். இவை நிகழ்வதற்குரிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
11 அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும். அசுத்தமாய் இருக்கிறவன் மேலும் அசுத்தமாய் இருக்கட்டும். பரிசுத்தவான் மேலும் பரிசுத்தவானாய் இருக்கட்டும்.
12 “கவனி! நான் விரைவில் வருவேன். என்னோடு பலன்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய செயல்களுக்கு பலன் அளிப்பேன்.
13 நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்.
14 “தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும்.
15 நகரத்துக்கு வெளியே, நாய் போன்றவர்களும், சூனியக்காரர்களும், விபசாரகர்களும், கொலைகாரர்களும், உருவ வழிபாடு செய்கிறவர்களும் பொய்யை விரும்பி, அதின்படி செய்பவர்களும் இருப்பார்கள்.
16 “இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார்.
17 ஆவியானவரும் மணமகளும் “வாருங்கள்” என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் “வாருங்கள்” என்று சொல்லவேண்டும். தாகமாய் இருக்கிறவன் வருவானாக. விருப்பம் உள்ளவன் ஜீவத் தண்ணீரைப் பெறுவானாக.
18 இந்நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். “எவனாவது ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற துன்பங்களை தேவன் அவன் மேல் கூட்டுவார்.”
19 எவனாவது ஒருவன் தீர்க்கதரிசனப் புத்தக வசனங்களிலிருந்து எதையேனும் நீக்கினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற வாழ்வின் மரத்திலிருந்தும் பரிசுத்த நகரிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் நீக்கிவிடுவார்.
20 இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்!
21 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
Revelation 22 ERV IRV TRV