Ruth 1 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாபு நாட்டிற்கு சென்றார்.2 அவர் பெயர் எலிமலேக்கு; அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர்.3 அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.4 அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டனர். ஒருவர் பெயர் ஓர்பா; மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின.5 பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.6 நகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார்.7 பிறகு, அவரும், அவருடைய மருமக்கள் இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு யூதா நாட்டுக்குப் பயணமானார்கள்.8 ஆனால் வழியில் நகோமி அவர்களிடம், “உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இறந்தவர்களுக்கும் எனக்கும் நீங்கள் பரிவு காட்டியதுபோல், ஆண்டவரும் உங்களுக்குப் பரிவு காட்டுவாராக!9 நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக!” என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார்.10 அவர்களோ கதறி அழுது, “இல்லையம்மா, நாங்கள் உம்மோடு வந்து, உம்முடைய இனத்தவரிடையே இருப்போம் என்றார்கள்.11 அதற்கு நகோமி, “மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா?12 மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும்13 அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா? மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று சொன்னார்.14 அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.15 ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், “இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ” என்றார்.16 அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்.17 நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்; அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்; சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்; அப்படிப் பிரிந்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக” என்றார்.⒫18 ரூத்து தம்மோடு வர மன உறுதியுடன் இருப்பதைக் கண்டு, நகோமி வேறொன்றும் கூறவில்லை.19 பின்னர் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேம் ஊரை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த ஊர் முழுவதிலும் பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஊர்பெண்கள் “இவள் நகோமி தானே? என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவரோ,20 ⁽“என்னை ‛நகோமி’ என அழைக்காதீர்கள்;␢ ‛மாரா’** என அழையுங்கள்.⁾21 ⁽நிறைவுடன் இங்கிருந்து சென்றேன்.␢ ஆனால் ஆண்டவர் என்னை § வெறுமையாய்த் திரும்பி வரச்செய்தார்.␢ ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார்.␢ எல்லாம் வல்லவர் என்மீது␢ துயரத்தைச் சுமத்தியுள்ளார்.␢ இப்படியிருக்க என்னை␢ ‛நகோமி’ என அழைப்பது ஏன்?” என்றார்.⁾⒫22 இவ்வாறு நகோமியும் அவர் தம் மருமகளான மொவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத் திரும்பி வந்தனர். அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.