1 ரெகபெயாம் செக்கேமுக்குச் சென்றான். ஏனெனில், அங்கு இஸ்ரயேலர் அனைவரும் அவனை அரசனாக்குவதற்காக ஒன்று கூடியிருந்தனர்.

2 சாலமோன் அரசருக்கு அஞ்சி எகிப்திற்கு ஓடிப் போய் அங்குக் குடியிருந்தவனும் நெபாற்றின் மகனுமான எரொபவாம் இதைக் கேள்வியுற்றான்.

3 இஸ்ரயேல் சபையார் ஆளனுப்பி அவனை வரவழைத்தார்கள். பின்பு அவர்கள் அனைவருடன் எரொபவாமும், ரெகபெயாமிடம் வந்து அவனை நோக்கி,

4 “உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார். இப்போது நீர் உம் தந்தை சுமத்திய கடும் வேலைகளைக் குறைத்து, அவர் எங்கள் மேல் வைத்த பளுவான நுகத்தை எளிதாக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாங்கள் உமக்காகப் பணியாற்றுவோம்” என்றனர்.

5 அவன் அவர்களிடம், “நீங்கள் போய் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். அப்படியே மக்கள் சென்றனர்.⒫

6 அப்பொழுது அரசன் ரெகபெயாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அரசவையில் பணியாற்றிய முதியோரிடம் “இம் மக்களுக்கு என்ன மறுமொழி கூறலாம்? உங்கள் கருத்தென்ன?” என்று ஆலோசனை கேட்டான்.

7 அவர்கள் அவனிடம், “இன்று இம்மக்களுக்கு நீ பணியாளனாகி அவர்களுக்குப் பணிந்து இனிய சொற்களில் பதிலளித்தால், அவர்கள் எந்நாளும் உனக்குப் பணியாளர்களாய் இருப்பார்கள்” என்றனர்.

8 அவனோ முதியோர் தனக்களித்த அறிவுரையைத் தள்ளி விட்டு, தன்னோடு வளர்ந்து தன் அவையில் இருந்த இளைஞரோடு கலந்து ஆலோசித்தான்.

9 “‘உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை எளிதாக்கும்” என்று என்னிடம் சொன்ன இம்மக்களுக்கு என்ன மறுமொழி கூறலாம்? உங்கள் கருத்தென்ன?” என்று அவன் அவர்களிடம் வினவினான்.

10 அவனோடு வளர்ந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, “உம் தந்தை எங்கள் மீதுள்ள நுகத்தைப் பளுவாக்கினார். நீர் அதன் பளுவைக் குறைத்தருளும் என்று அம்மக்கள் உம்மிடம் வேண்டினார்கள் அல்லவா? அவர்களுக்கு இந்தப் பதில் கொடும்: ‘என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பை விடப் பெரியது;

11 என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்; நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன்’ என்று நீர் சொல்லும்” என்றனர்.⒫

12 ‘மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்’ என்று ரெகபெயாம் சொல்லியிருந்தபடியே எரொபவாமுடன் மக்கள் அனைவரும் அவனிடம் மூன்றாம் நாள் வந்தனர்.

13 அப்பொழுது அரசன், முதியோர் தனக்கு அளித்த அறிவுரையைத் தள்ளிவிட்டு, மக்களுக்கு மிகக் கடுமையான பதில் அளித்தான்.

14 இளைஞரின் அறிவுரைக்கேற்ப, “என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்; நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன்” என்று கூறினான்.

15 இவ்வாறு, அரசன் மக்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டான். இந்தத் திருப்பம் ஆண்டவரால் நிகழ்ந்தது. சீலோவைச் சார்ந்த அகியாவின் மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிற்குத் தாம் கூறிய வாக்கை ஆண்டவர் இவ்வாறு நிறைவேற்றினார்.⒫

16 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்து விட்டதைக் கண்டு, “எங்களுக்குத் தாவீதுடன் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ராயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்புங்கள். தாவீதே! உன்வீட்டை நீயே பார்த்துக்கொள்!” என்று அவனுக்கு எதிராக முழங்கிக் கொண்டே தம் கூடாரங்களுக்குத் திரும்பினர்.

17 எனினும், யூதாவின் நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ரெகபெயாமே அரசனாய் இருந்தான்.

18 பின்பு, அரசன் ரெகபெயாம் கட்டாய வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தியவனான அதோராமைப் பிற இஸ்ரயேலரிடம் தூதனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள் எல்லாரும் சேர்ந்து அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடிப்போனான்.⒫

19 தாவீதின் குடும்பத்துக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.

20 எரொபவாம் திரும்பி வந்து விட்டான் என்பதை இஸ்ரயேலர் அனைவரும் கேள்வியுற்று, அவனுக்கு ஆளனுப்பிச் சபைக்கு வரவழைத்து அவனை இஸ்ரயேல் நாடு முழுவதற்கும், அரசனாக்கினர். யூதா குலம் தவிர, வேறு எந்தக் குலமும் தாவீது குடும்பத்தின் பக்கம் சேரவில்லை.

21 எருசலேமுக்குத் திரும்பி வந்த சாலமோனின் மகனாகிய ரெகபெயாம் இஸ்ரயேலர்மீது போர் தொடுக்கவும் அந்நாட்டைத் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வரவும் எண்ணினான். இதற்கென அவன் யூதாவின் வீட்டிலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் இலட்சத்து எண்பதினாயிரம் போர் வீரர்களைத் திரட்டினான்.

22 அப்போது இறையடியார் செமயாவுக்குக் கடவுள் அருளிய வாக்கு;

23 “சாலமோனின் மகனும் யூதாவின் அரசனுமான ரெகபெயாமிடமும் யூதா, பென்யமின் வீட்டார் அனைவரிடமும் ஏனைய மக்களிடமும் போய்ச் சொல்:

24 ‘நீங்கள் படையெடுத்து உங்கள் சகோதரரான இஸ்ரயேலரோடு போரிடச் செல்ல வேண்டாம். எல்லாரும் அவரவர் வீடு திரும்புங்கள். இது நிகழ்வது என்னாலேயே’ என்று ஆண்டவர் உரைக்கிறார்.” ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள் அவரது சொற்படியே திரும்பிப் போய் விட்டார்கள்.

25 எரொபவாம், எப்ராயிம் மலைநாட்டில் செக்கேமைக் கட்டி எழுப்பி, அங்குக் குடியிருந்தான். பின்பு அங்கிருந்து வெளியேறிப் பெனுவேலைக் கட்டி எழுப்பினான்.

26 அப்பொழுது எரொபவாம் “இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்று விடும்.

27 ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால் அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்து விட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள்” என்று தன் இதயத்தில் சொல்லிக் கொண்டான்.

28 இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, “நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!” என்றான்.

29 இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான்.

30 இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில், மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர்.

31 மேலும், அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள்* கட்டி லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான்.

32 அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை ஏற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே, பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும், தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான்.

33 தான் நினைக்கும்படி குறித்த எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அவன் பெத்தேலில் கட்டியிருந்த பலிபீடத்திற்குச் சென்றான். இஸ்ரயேல் மக்களுக்கென்று தான் ஏற்படுத்திய விழாவின்போது பலிபீடத்தின்மேல் பலி செலுத்தித் தூபம் காட்டினான்.

1 Kings 12 ERV IRV TRV