1 உனது உரிமைச்சொத்தாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குள் சென்று, அதை உன் உடைமையாக்கி, அதில் நீ குடியேறும்போது,

2 அந்த நாட்டின் நிலத்து முதற்பலன் அனைத்தையும் எடுத்துக்கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயர் விளங்குமாறு தேர்ந்து கொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோ.

3 அன்றைய நாளில் அங்கு பணியில் இருக்கும் குருவிடம் சென்று அவரை நோக்கி, ‘எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் வந்து சேர்ந்துள்ளேன் என எம் கடவுளாகிய ஆண்டவர்முன் இன்று அறிக்கையிடுகிறேன்’ என்று சொல்.

4 அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார்.

5 நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: ‘நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அந்நியராய் இருந்தார். ஆனால், அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.

6 எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர்.

7 அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார்.

8 தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.

9 அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.

10 எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்’ என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

11 பின்னர், நீயும் லேவியரும், உன்னோடு உள்ள அந்நியரும், கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த அனைத்து நன்மைகளை முன்னிட்டு அக்களியுங்கள்.

12 பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டாகிய மூன்றாம் ஆண்டில், அவ்வாண்டின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை, லேவியருக்கும், அந்நியருக்கும், அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் கொடு. அதனால் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடைவர்.

13 அதன்பின், நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிவிக்க வேண்டியது: நீர் எனக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி, தூய பகுதியை என் வீட்டிலிருந்து எடுத்து அவற்றை லேவியருக்கும், அந்நியருக்கும், அநாதைக்கும், கைம்பெண்ணுக்கும் கொடுத்துள்ளேன். உம் கட்டளைகளை நான் மீறவில்லை, அவைகளை நான் மறக்கவுமில்லை.

14 எனது துயர நாளில் அதிலிருந்து உண்டதுமில்லை; தீட்டான போது அதிலிருந்து எடுக்கவுமில்லை; இழவுக்காக அதிலிருந்து கொடுக்கவும் இல்லை. என் கடவுளாகிய ஆண்டவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, நீர் எனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்துள்ளேன்.

15 நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக’.

16 இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

17 ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும் உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவி கொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

18 நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும்,

19 அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

Deuteronomy 26 ERV IRV TRV