1 “இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்போம்; நெஞ்சே! நீ வா!” என்றேன். அதுவும் வீண் என நான் கண்டேன்.

2 சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்;

3 இன்பம் நன்மை பயக்காது என்றேன். ஞானத்தின் மீதுள்ள ஆவலை விட்டுவிடாமலே, மதுவால் உடலுக்குக் களிப்பூட்டவும் மதிகெட்ட திட்டத்தில் ஈடுபடவும் தலைப்பட்டேன்; மக்கள் தங்கள் குறுகிய உலக வாழ்க்கையில் செய்யக்கூடிய நலமான செயல் எதுவென்று அறிவதற்காக இவ்வாறு செய்யலானேன்;

4 பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்; எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன்.

5 எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்;

6 தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்;

7 ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கினேன்; என் வீட்டிலேயே பிறந்த அடிமைகளும் எனக்கு இருந்தார்கள்; ஏராளமான ஆடுமாடுகளும் எனக்கு இருந்தன. எனக்குமுன் எருசலேமில் இருந்த எவருக்கும் அத்தனை ஆடுமாடுகள் இருந்ததில்லை.

8 வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம், மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர். மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன்.⒫

9 இவ்வாறு என் செல்வம் வளர்ந்தது. எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப் பெரிய செல்வனானேன். எனினும், எனக்கிருந்த ஞானம் குறைபடவில்லை.

10 என் கண்கள் விரும்பின அனைத்தையும் அவற்றிற்கு அளித்தேன். எந்த மகிழ்ச்சியையும் என் மனத்திற்குக் கொடுக்க நான் தவறவில்லை. என் முயற்சி அனைத்தும் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டியது. இதுவே என் முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலனாகும்.

11 நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்; முற்றும் பயனற்ற செயல்களே.⒫

12 நான் ஞானம், மூடத்தனம், மதிகேடு ஆகியவற்றை ஆராயத்தலைப்பட்டேன். ஓர் அரசன் தனக்கு முன்னிருந்த அரசர் செய்ததைத் தவிர வேறென்ன செய்வான்?

13 ஒளி இருளை விட மேலானதாய் இருப்பதுபோல, ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன்.

14 ⁽ஞானிகளின் கண்கள்␢ ஒளி படைத்தவை;␢ மூடரோ இருளில் நடப்பவர்.␢ ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.⁾

15 மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும். அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக? அதனால் பயனென்ன என்று சிந்தித்து, அதுவும் வீணே என்ற முடிவுக்கு வந்தேன்.

16 ஞானிகளையோ, மூடரையோ யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர். மூடர் மடிவதுபோல ஏன் ஞானிகளும் மடியவேண்டும்?

17 எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லையையே கொடுத்தன. எல்லாம் வீண்; யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.⒫

18 நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன். ஏனெனில், அவற்றை எனக்குப்பின் வருகிறவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும்.

19 அவர்கள் ஞானமுள்ளவராய் இருக்கலாம் அல்லது மதிகேடராய் இருக்கலாம்; யாருக்குத் தெரியும்? எத்தகையவராய் இருப்பினும், நான் இவ்வுலகில் ஞானத்தோடு உழைத்து அடைந்த பயன்களுக்கெல்லாம் அவர்களே உரிமையாளர் ஆவர்.

20 என் உழைப்பும் வீணே. நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்துபோனேன்.

21 ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.

22 இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன?

23 வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.

24 உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன்.

25 அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்? அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்?

26 கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.

Ecclesiastes 2 ERV IRV TRV