1 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் ஆண்டவர் குறித்த ஒழுங்கின்படி சீன் பாலை நிலத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் இரபிதிம் வந்தபோது அங்குப் பாளையம் இறங்கினர். மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை.2 இதனால் மக்கள் மோசேயிடம் வாதாடி, ‘குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்’ என்று கேட்டனர். மோசே அவர்களை நோக்கி, “நீங்கள் என்னோடு வாதாடுவது ஏன்? ஆண்டவரை ஏன் சோதிக்கிறீர்கள்?” என்றார்.3 அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, “நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?” என்று கேட்டனர்.4 மோசே ஆண்டவரிடம், “இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!” என்று கதறினார்.5 ஆண்டவர் மோசேயிடம், “இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ.6 இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார்.7 இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் ‘மாசா’* என்றும் ‘மெரிபா’** என்றும் பெயரிட்டழைக்கப்பட்டது.8 பின்னர், அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்.9 மோசே யோசுவாவை நோக்கி, “நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்” என்றார்.10 அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே மோசே. ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர்.11 மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்.12 மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக, அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன.13 யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.14 ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை; ‘நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்’ என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவை” என்றார்.15 மோசே பலிபீடம் ஒன்று கட்டி அதற்கு ‘யாவே நிசீ’* என்று பெயரிட்டழைத்தார்.16 ஏனெனில், “ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறைதோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்” என்றுரைத்தார் அவர்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.