1 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:

2 இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.

3 நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்கலம்;

4 நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்; மெல்லிய நார்ப்பட்டு; வெள்ளாட்டு உரோமம்;

5 செந்நிறமாகப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள்; சித்திம் மரம்;

6 விளக்குக்கான எண்ணெய்; திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமண வகைகள்;

7 ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிவகைக் கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.

8 நான் அவர்கள் நடுவில் தங்குவதற்கென ஒரு தூயகம் அமைக்கப்படட்டும்.

9 திருஉறைவிட அமைப்பையும் அதன் அனைத்துப் பொருள்களின் அமைப்பையும் நான் உனக்குச் சொல்லிக் காட்டுகிறபடியெல்லாம் செய்யுங்கள்.

10 சித்திம் மரத்தால் அவர்கள் ஒரு பேழை செய்யட்டும். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.

11 அதன் மேலெங்கும் பசும்பொன்னால் மூடுவாய். உள்ளும்புறமும் வேய்ந்திடுவாய். அதைச் சுற்றிலும் ஒரு பொன் தோரணம் பொருத்திடுவாய்.

12 நான்கு பொன் வளையங்களை வார்த்து, இரு வளையங்களை ஒரு பக்கத்திலும் இரு வளையங்களை மறுபக்கத்திலுமாக அதன் நான்கு கால்களோடும் பொருத்துவாய்,

13 சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றையும் பொன்னால் மூடுவாய்.

14 பேழையைத் தூக்கிச்செல்லும்படி பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளை மாட்டிவைப்பாய்.

15 தண்டுகள் பேழையிலுள்ள வளையங்களில் மாட்டப்பட்டிருக்கட்டும். அங்கிருந்து அவை கழற்றப்படலாகாது.

16 நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளைப் பேழையினுள் வைப்பாய்.⒫

17 மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.

18 இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.

19 ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.

20 அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்.

21 பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து, பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய்.

22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.

23 சித்திம் மரத்தால் ஒரு மேசை செய். அதன் நீளம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.

24 அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன்தோரணம் செய்து வைப்பாய்.

25 மேலும், நான்கு விரல்கடை அளவில் அதற்குச் சுற்றுச்சட்டம் அமைத்து, சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைப்பாய்.

26 அதற்கு நான்கு பொன் வளையங்கள் செய்து, நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் இணைத்துவிடு.

27 மேசையைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்கும் வளையங்கள் சட்டத்தின் அருகில் கிடக்கட்டும்.

28 சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து, அவற்றையும் பொன்னால் பொதிவாய். இவைகளைக் கொண்டே மேசை தூக்கிச் செல்லப்பட வேண்டும்.

29 அதற்குரிய தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மபலிக்கான குவளைகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். பசும் பொன்னால் அவற்றைச் செய்க.

30 என்முன் இம்மேசைமேல் எப்பொழுதும் ‘திருமுன்னிலை அப்பம்’ வைப்பாயாக!

31 பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய். அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.

32 விளக்குத்தண்டின் ஒரு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளும், விளக்குத்தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக, அதன் பக்கங்களில் ஆறுகிளைகள் செல்லும்.

33 ஒரு கிளையில் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் சேர்ந்து அமையும். மறுகிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் அமையும். இவ்வாறே விளக்குத்தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் இருக்கட்டும்.

34 ஆனால், விளக்குத் தண்டுக்கு நேர் மேலே வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் அமையும்.

35 முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளுக்கும் அமையும்.

36 அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தவையாயும் பசும்பொன் அடிப்பு வேலையுடன் அமைந்தவையாயும் இருக்கும்.

37 அதற்காக ஏழு அகல்கள் செய்வாய்; முன் பக்கமாக ஒளிவீசும் முறையில் அவற்றை ஏற்றிவைப்பாய்.

38 அதன் அணைப்பான்களும், நெருப்புத் தட்டுகளும் பசும்பொன்னாலேயே ஆக்கப்படவேண்டும்.

39 அதனையும் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்து முடிப்பாய்.

40 மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றைச் செய்யுமாறு கவனித்துக் கொள்.