யாத்திராகமம் 3

fullscreen1 மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

fullscreen2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

fullscreen3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.

fullscreen4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

fullscreen5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.

fullscreen6 பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.

fullscreen7 அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

fullscreen8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.

fullscreen9 இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

fullscreen10 நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

fullscreen11 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.

fullscreen12 அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

fullscreen13 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.

fullscreen14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

fullscreen15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.

fullscreen16 நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,

fullscreen17 நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.

fullscreen18 அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.

fullscreen19 ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.

fullscreen20 ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.

fullscreen21 அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும் போது வெறுமையாய்ப் போவதில்லை.

fullscreen22 ஒவ்வொரு ஸ்திரீயும், தன் தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டுவாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.