1 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:

2 “மனுபுத்திரனே, நீ நியாயம் தீர்ப்பாயா? கொலைக்காரர்களின் நகரத்தை (எருசலேம்) நியாயம்தீர்ப்பாயா? நீ அவளிடம் அவள் செய்த அருவருப்புகளை எல்லாம் சொல்வாயா?

3 நீ கூறவேண்டும், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இந்நகரம் கொலைக்காரர்களால் நிறைந்திருக்கிறது. எனவே அவளது தண்டனைக் காலம் வந்திருக்கிறது. அவள் தனக்குள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தாள். அவை அவளை தீட்டுப்படுத்தின.

4 “‘எருசலேம் ஜனங்களே, நீங்கள் பல ஜனங்களைக் கொன்றீர்கள், நீங்கள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தீர்கள். நீங்கள் குற்றவாளிகள், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. உங்கள் முடிவு வந்திருக்கிறது. மற்ற நாடுகள் உங்களைக் கேலிசெய்கின்றன. அந்நாடுகள் உங்களைப் பார்த்துச் சிரிக்கின்றன.

5 தொலைவிலும் அருகிலும் உள்ள ஜனங்கள் உங்களைக் கேலிசெய்கின்றனர். நீங்கள் உங்கள் பெயர்களை அழித்தீர்கள். நீங்கள் உரத்த சிரிப்பைக் கேட்க முடியும்.

6 “‘பாருங்கள்! எருசலேமில் எல்லா ஆள்வோர்களும் தம்மைப் பலப்படுத்தினர். எனவே, அவர்கள் மற்ற ஜனங்களைக் கொல்லமுடியும்.

7 எருசலேமில் உள்ள ஜனங்கள் தம் பெற்றோரை மதிப்பதில்லை. அந்நகரத்தில் அவர்கள் அயல் நாட்டினரைத் துன்புறுத்தினார்கள். அந்த இடத்தில் அவர்கள் அநாதைகளையும் விதவைகளையும் ஏமாற்றினார்கள்.

8 நீங்கள் என் பரிசுத்தமான பொருட்களை வெறுக்கிறீர்கள். எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை நீங்கள் முக்கியமற்றவையாகக் கருதினீர்கள்.

9 எருசலேமில் உள்ள ஜனங்கள் மற்ற ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள். அவர்கள் அப்பாவி ஜனங்களைக் கொல்வதற்காக இவ்வாறு செய்கின்றனர். ஜனங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள மலைகளுக்குப் போகிறார்கள். பிறகு அவர்களின் ஐக்கிய உணவை உண்ண எருசலேமிற்கு வருகிறார்கள். “‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர்.

10 எருசலேமில் ஜனங்கள் தம் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொள்கின்றனர். எருசலேமில் ஆண்கள் பெண்களின் மாதவிலக்கு நாட்களிலும் பலவந்தமாக பாலின உறவுகொள்கின்றனர்.

11 ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த மகளை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான்.

12 எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

13 தேவன் சொன்னார்: “‘இப்போது பார்! நான் எனது கையை நீட்டி உன்னைத் தடுக்கிறேன். நீ ஜனங்களை ஏமாற்றியதற்கும் கொன்றதற்கும் நான் உன்னைத் தண்டிப்பேன்.

14 பிறகு தைரியமாக இருப்பாயா? நான் உன்னைத் தண்டிக்க வரும் காலத்தில் நீ பலமுடையவனாக இருப்பாயா? இல்லை! நானே கர்த்தர், நான் பேசியிருக்கிறேன்! நான் சொன்னவற்றைச் செய்வேன்.

15 நான் உங்களைப் பலநாடுகளில் சிதறடிப்பேன். நீங்கள் பலநாடுகளுக்குப் போகும்படி நான் உங்களைப் பலவந்தப்படுத்துவேன். இந்நகரிலுள்ள தீட்டானவைகளை நான் முழுவதுமாக அழிப்பேன்.

16 ஆனால் எருசலேமே, நீ தீட்டாவாய். இவை எல்லாம் நிகழ்வதை மற்ற நாடுகள் எல்லாம் பார்க்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”

17 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:

18 “மனுபுத்திரனே, பித்தளை, தகரம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை வெள்ளியோடு ஒப்பிடும்போது அவை பயன் குறைந்தவை. வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பிலே போடுவார்கள். வெள்ளி உருகிய பின் அதிலுள்ள அசுத்தத்தை வேலைக்காரர்கள் நீக்குவார்கள். இஸ்ரவேல் நாடு அந்த உதவாத மீதியான அழுக்கைப் போலாயிற்று.

19 எனவே எனது ஆண்டவரும் கர்த்தருமானவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் எல்லோரும் பயனற்றவர்களாவீர்கள். நான் உங்களை எருசலேமிற்குள் கூட்டிச் சேர்ப்பேன்.

20 வேலைக்காரர்கள் வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் போன்றவற்றை நெருப்பிலே போடுவார்கள். அது வெப்பம் அடைய காற்றை ஊதுவார்கள். பிறகு அந்த உலோகங்கள் உருக ஆரம்பிக்கும். அதுபோலவே, நான் உங்களை என் நெருப்பில்போட்டு உருகவைப்பேன். அந்நெருப்புதான் என் கோபம்.

21 நான் உன்னை அந்நெருப்பில் போடுவேன். என் கோபத்தீயில் காற்று ஊதுவேன். நீ உருகத் தொடங்குவாய்.

22 வெள்ளி நெருப்பில் உருகும். வேலைக்காரர்கள் வெள்ளியை மட்டும் தனியே ஊற்றி அதனைக் காப்பாற்றுவார்கள். அது போலவே நகரில் நீ உருகுவாய். பிறகு நானே கர்த்தர் என்பதை அறிவாய். அதோடு என் கோபத்தை உனக்கு எதிராக ஊற்றியதையும் நீ அறிவாய்.’”

23 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:

24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலிடம் பேசு. அவள் பரிசுத்தமாக இல்லை என்பதைக் கூறு. அந்நாட்டின் மீது நான் கோபமாக இருக்கிறேன். எனவே அந்நாடு அதன் மழையைப் பெறவில்லை.

25 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் பாவத் திட்டங்களை இடுகிறார்கள். அவர்கள் சிங்கத்தைப் போன்றவர்கள். அது தான் பிடித்த விலங்கைத் தின்னத் தொடங்கும்போது கெர்ச்சிக்கும். அத்தீர்க்கதரிசிகள் பலரது வாழ்வை அழித்திருக்கின்றனர். அவர்கள் பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்திருக்கின்றனர். எருசலேமில் பல பெண்கள் விதவையாவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றனர்.

26 “ஆசாரியர்கள் உண்மையில் எனது போதனைகளை சிதைத்துவிட்டனர். எனது பரிசுத்தமானவற்றை அவர்கள் சரியாக வைத்துக்கொள்ளவில்லை. அவற்றை அவர்கள் முக்கியமானதாகக் காண்பிப்பதில்லை. பரிசுத்தமானவற்றை பரிசுத்தமற்றவை போன்று நடத்துகிறார்கள். அவர்கள் சுத்தமானவற்றைச் சுத்தமற்றவற்றைப் போல் நடத்துகிறார்கள். அவர்கள் ஜனங்களுக்கு இதைப்பற்றி கற்றுத் தரவில்லை. எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களுக்கு மதிப்பு மறுக்கிறார்கள். அவர்கள் என்னை முக்கியமற்றவராக நடத்தினார்கள்.

27 “எருசலேமில் தலைவர்கள் எல்லாம் தான் பிடித்த இரையைத் தின்கிற ஓநாய்களைப் போன்றவர்கள். அத்தலைவர்கள் செல்வம் பெறுவதற்காக ஜனங்களைப் பிடித்துக் கொல்கின்றனர்.

28 “தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரிப்பதில்லை. அவர்கள் உண்மையை மூடினார்கள். அவர்கள் சுவர் கட்டத்தெரியாத வேலைக்காரர்களைப் போன்றவர்கள். அவர்கள் துவாரங்களில் சாந்தை மட்டும் பூசுகிறவர்கள். அவர்கள் பொய்களை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள மந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்களை மட்டும் சொல்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு பேசவில்லை!

29 “பொது ஜனங்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்கள்: ஒருவரை ஒருவர் திருடுகின்றனர். அவர்கள் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் பிச்சைக்காரர்களையும் தங்கள் உபயோகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் அந்நிய நாட்டவரை ஏமாற்றுகின்றனர், அவர்களுக்கு எதிராக எந்த நியாயமும் இல்லை என்பது போன்று நடந்து கொள்கின்றனர்!

30 “நான் ஜனங்களிடம் அவர்களது வாழ்க்கையை மாற்றும்படியும் நாட்டைக் காப்பாற்றும்படியும் கேட்டேன். நான் ஜனங்களிடம் சுவரை இணைக்கும்படி கேட்டேன். அவர்கள் திறப்புகளில் நின்று பகைவருடன் சண்டையிட்டு நகரைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எவரும் உதவிக்கு வரவில்லை!

31 எனவே, நான் என் கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களை முழுமையாக அழிப்பேன். அவர்கள் செய்திருக்கிற தீயவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிப்பேன். இதெல்லாம் அவர்களுடைய தவறு!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

Ezekiel 22 ERV IRV TRV