ஆதியாகமம் 25

fullscreen1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.

fullscreen2 அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

fullscreen3 யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்

fullscreen4 மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

fullscreen5 ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.

fullscreen6 ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

fullscreen7 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.

fullscreen8 பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

fullscreen9 அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

fullscreen10 அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.

fullscreen11 ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.

fullscreen12 சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்ச வரலாறு:

fullscreen13 பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,

fullscreen14 மிஷ்மா, தூமா, மாசா,

fullscreen15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.

fullscreen16 தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.

fullscreen17 இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

fullscreen18 அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.

fullscreen19 ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.

fullscreen20 ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.

fullscreen21 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.

fullscreen22 அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.

fullscreen23 அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.

fullscreen24 பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.

fullscreen25 மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.

fullscreen26 பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

fullscreen27 இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.

fullscreen28 ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.

fullscreen29 ஒரு நாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.

fullscreen30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

fullscreen31 அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.

fullscreen32 அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.

fullscreen33 அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.

fullscreen34 அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.