1 “பெண்களே மகிழ்ச்சியோடு இருங்கள்! உங்களுக்கு எந்தப் பிள்ளைகளும் இல்லை. ஆனால், நீங்கள் மிக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்!” கர்த்தர் கூறுகிறார், “தனியாக இருக்கும் பெண் கணவனோடு இருக்கும் பெண்ணைவிட மிகுதியான பிள்ளைகளைப் பெறுவாள்.”

2 “உனது கூடாரத்தைப் பெரிதாக்கு. உனது கதவுகளை அகலமாகத் திற. உன் வீட்டில் சேர்த்துக்கொள்வதை நிறுத்தாதே. உனது கூடாரத்தைப் பெரிதாகவும் பலமாகவும் செய்.

3 ஏனென்றால், நீ மிகவும் வளருவாய். உனது பிள்ளைகள் பல நாடுகளிலிருந்து ஜனங்களைப் பெறுவார்கள். உனது பிள்ளைகள், அழிந்துபோன இந்த நகரத்தில் மீண்டும் வாழ்வார்கள்.

4 அஞ்சாதே! நீ ஏமாற்றம் அடையமாட்டாய். உனக்கு எதிராக ஜனங்கள் தீயவற்றைச் சொல்லமாட்டார்கள். நீ இலச்சையடைவதில்லை. நீ இளைஞனாக இருந்து அவமானத்தை உணர்ந்தாய். ஆனால், இப்போது அந்த அவமானத்தை மறந்துவிட்டாய். நீ உன் கணவனை இழந்தபோது அடைந்த அவமானத்தை இப்போது நினைக்கமாட்டாய்.

5 ஏனென்றால், உன் கணவனாகிய ஒருவரே (தேவன்) உன்னைச் செய்தவர். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறவர் அவர் ஒருவரே. அவர் இஸ்ரவேலின் பரிசுத்தமானவர். அவர் பூமி முழுவதற்குமான தேவன் என்று அழைக்கப்படுவார்.

6 “கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய். உன் ஆவியில் மிகவும் துக்க முடையவளாக இருந்தாய். ஆனால், கர்த்தர் அவருடையவளாக உன்னை அழைத்தார். இளம் வயதில் திருமணம் செய்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய். ஆனால், தேவன் உன்னை அவருடையவளாக அழைத்தார்.”

7 தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன். ஆனால், அது கொஞ்சக் காலத்திற்குத்தான். நான் மீண்டும் உன்னை என்னிடம் கூட்டிக்கொள்வேன். நான் உன்னிடம் பெருங்கருணையைக் காட்டுவேன்.

8 நான் மிகவும் கோபம்கொண்டேன். கொஞ்ச காலத்திற்கு உன்னிடமிருந்து மறைந்திருந்தேன். ஆனால் என்றென்றும் உன்னைத் தயவுடன் ஆறுதல்படுத்துவேன்” உனது மீட்பரான கர்த்தர் இதனைக் கூறினார்.

9 தேவன் கூறுகிறார், “நினைவுகொள்! நோவாவின் காலத்தில் நான் உலகத்தை வெள்ளத்தால் தண்டித்தேன். ஆனால், நான் மீண்டும் இந்த உலகத்தை வெள்ளத்தால் அழிக்கமாட்டேன் என்று நோவாவிற்கு வாக்குறுதி அளித்தேன்! இதே வழியில், நான் மீண்டும் கோபங்கொண்டு உன்னைக் கடிந்துகொள்வதில்லை என்று வாக்களிக்கிறேன்.”

10 கர்த்தர் கூறுகிறார், “மலைகள் மறைந்து போகலாம்! குன்றுகள் புழுதி (தூள்) ஆகலாம்! ஆனால், எனது தயவு உன்னைவிட்டு விலகாது! நான் உன்னோடு சமாதானம் செய்துகொள்வேன். அது எப்பொழுதும் முடிவுபெறாது” கர்த்தர் உன்மீது இரக்கம் காட்டுகிறார். இவற்றையெல்லாம் சொன்னவர் அவர் ஒருவரே.

11 “ஏழை நகரமே! பகைவர்கள் புயலைப் போன்று உனக்கு எதிரே வந்தார்கள். எவரும் உனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஆனால், நான் உன்னை மீண்டும் கட்டுவேன். நான் ஒரு அழகான கல்லை உனது சுவர்களுக்கு வைப்பேன். நான் நீல ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி அஸ்திபாரம் அமைப்பேன்.

12 சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன். நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன். உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன்.

13 உனது பிள்ளைகள் தேவனைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அவர் கற்பிப்பார். உனது பிள்ளைகள் உண்மையான சமாதானத்தை அடைவார்கள்.

14 நீ நன்மையால் கட்டப்படுவாய். எனவே நீ கொடுமை மற்றும் அச்சத்திலிருந்து காப்பாற்றப்படுவாய். உனக்குப் பயப்படுவதற்கு எதுவுமில்லை. உன்னை எதுவும் பாதிக்காது.

15 உனக்கு எதிராக எந்தப் படையும் போரிடாது. எந்தப் படையாவது உன்னைத் தாக்க முயன்றால், நீ அந்தப் படையைத் தோற்கடிப்பாய்.”

16 “பார், நான் கொல்லனைப் படைத்தேன். அவன் நெருப்பை ஊதி மேலும் சூடாக்குகிறான். பிறகு, அவன் சூடான இரும்பை எடுத்து அவனது விருப்பம்போல் கருவிகளைச் செய்கிறான். அதே வழியில் பொருள்களை அழிக்கின்ற அழிவுக்காரனையும் படைத்தேன்.

17 “ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைச் செய்வார்கள். ஆனால், அந்த ஆயுதங்கள் உங்களைத் தோற்கடிக்காது. சிலர் உங்களுக்கு எதிராகச் சிலவற்றை சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனும் உனக்கு எதிராகப் பேசும்போது அது தவறு என்று காட்டப்படும்.” கர்த்தர் கூறுகிறார், “கர்த்தருடைய ஊழியர்கள் எதைப் பெறுவார்கள்? என்னிடமிருந்து வரும் நியாயமான நன்மை மட்டும் பெறுவார்கள்.”

Isaiah 54 ERV IRV TRV