1 கர்த்தாவே, நான் உம்மோடு வாதம் செய்தால் நீர் எப்பொழுதும் சரியாகவே இருப்பீர்! ஆனால், நான் உம்மிடம் சரியாக தோன்றாத சிலவற்றைப்பற்றி கேட்க விரும்புகிறேன். கெட்டவர்கள் ஏன் சித்தி பெறுகிறார்கள்? உம்மால் நம்பமுடியாதவர்கள், ஏன் இத்தகைய இலகுவான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்?

2 நீர் அந்த கெட்ட ஜனங்களை இங்கே வைத்திருக்கிறீர், அவர்கள் பலமான வேர்களையுடைய செடிகளைப்போல் உள்ளனர். அவர்கள் வளர்ந்து கனிகளை உற்பத்தி செய்கின்றனர். அவர்கள் தம் வாயில் நீர் அவர்களோடு அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் இதயத்தில் உண்மையில் உம்மை விட்டுத் தூரத்தில் உள்ளனர்.

3 ஆனால், கர்த்தாவே! நீர் என் இதயத்தை அறிவீர், நீர் என்னைப் பார்க்கிறீர். என் மனதை சோதிக்கிறீர். வெட்டுவதற்கு இழுத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போன்று அந்தத் தீய ஜனங்களை வெளியே இழுத்துப்போடும். அவர்களை வெட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடும்.

4 இந்தப் பூமி இன்னும் எவ்வளவு காலத்திற்கு வறண்டிருக்கும்? இந்தப் புல் நிலங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் காய்ந்து மடிந்திருக்கும்? இந்தப் பூமியிலுள்ள மிருகங்களும், பறவைகளும், செத்திருக்கின்றன. இது தீய ஜனங்களின் குற்றமாகும், எனினும் அத்தீய ஜனங்கள், “எரேமியா நமக்கு நிகழப்போவதைப் பார்க்க நீண்டகாலம் உயிர்வாழமாட்டான்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

5 “எரேமியா! நீ மனிதர்களோடும் ஓடும் பந்தயத்திலேயே சோர்வடைந்துவிட்டால், குதிரைகளோடு பந்தயத்தில் எப்படி ஓடுவாய்? பாதுகாப்பான இடங்களிலேயே நீ சோர்வடைந்துவிட்டால், ஆபத்தான இடங்களில் நீ என்ன செய்யப்போகிறாய்? யோர்தான் ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களின் மத்தியில் நீ என்ன செய்யப் போகிறாய்?

6 இந்த மனிதர்கள் உனது சொந்தச் சகோதரர்கள். உனது சொந்தக் குடும்பத்து உறுப்பினர்களே உனக்கு எதிராகத் திட்டங்களைப் போடுகிறார்கள். உனது சொந்தக் குடும்பத்து ஜனங்களே உனக்கெதிராய் கூச்சல் போடுகிறார்கள். அவர்கள் நண்பர்களைபோன்று பேசினாலும் கூட நம்பாதே.”

7 “நான் (கர்த்தர்) எனது வீட்டைத் தள்ளிவிட்டிருக்கிறேன். நான் எனது சொந்த சொத்தை விட்டுவிட்டேன். நான் நேசம் வைத்த ஒன்றை (யூதா) அவளின் பகைவர்களிடமே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.

8 ஒரு காட்டுச் சிங்கத்தைப்போன்று, எனது சொந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் என்மீது கெர்ச்சிக்கிறார்கள். எனவே நான் அவர்களிடமிருந்து திரும்பி வந்துவிட்டேன்.

9 எனது சொந்த ஜனங்கள், கருடகழுகுகளின் நடுவிலே சூழப்பட்ட, மரிக்கிற மிருகத்தைப் போல ஆனார்கள். அப்பறவைகள் அவனைச் சுற்றி பறக்கின்றன. காட்டு மிருகங்களே வாருங்கள். நீங்கள் உண்பதற்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.

10 பல மேய்ப்பர்கள் (தலைவர்கள்) எனது திராட்சைத் தோட்டங்களை அழித்திருக்கின்றனர். அந்த மேய்ப்பர்கள் எனது வயல்களில் அந்தச் செடிகளின் மேல் நடந்திருந்தார்கள்: அந்த மேய்ப்பர்கள் எனது அழகிய வயலை வெறுமையான வனாந்தரமாக ஆக்கிவிட்டனர்.

11 அவர்கள் எனது வயலை வனாந்தரமாக்கினார்கள். இது காய்ந்து செத்துப்போனது. எந்த ஜனங்களும் அங்கே வாழவில்லை. நாடு முழுவதும் ஒரு வறுமையான வனாந்தரமாக ஆயிற்று. அந்த வயலை கவனித்துக்கொள்ள எவரும் விடப்படவில்லை.

12 வானந்தரத்தின் பசுஞ்சோலையைக் கொள்ளையடிக்க சிப்பாய்கள் வந்தனர். தேசத்தைத் தண்டிக்கும்படி கர்த்தர் அந்தப் படைகளை பயன்படுத்தினார். தேசத்தின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர். ஒருவனும் பத்திரமாக இருக்கவில்லை.

13 ஜனங்கள் கோதுமையை விதைப்பார்கள். ஆனால் அவர்கள் முட்களையே அறுவடை செய்வார்கள். அவர்கள் களைத்து போகிறவரை கடுமையாக உழைப்பார்கள். ஆனால் அவர்கள் தமது வேலைக்காக எதையும் பெறமாட்டார்கள். அவர்கள் தங்கள் விளைச்சலுக்காக வெட்கப்படுவார்கள். கர்த்தருடைய கோபம் அவற்றுக்குக் காரணமாயிற்று.”

14 இதுதான் கர்த்தர் சொன்னது; “இஸ்ரவேல் நாட்டைச்சுற்றி வாழும் அனைத்து ஜனங்களுக்கும் நான் என்ன செய்வேன் என்பதை நான் சொல்வேன். அந்த ஜனங்கள் மிகவும் கெட்டவர்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த பூமியை அவர்கள் அழித்திருக்கின்றனர். நான் அந்தத் தீய ஜனங்களை இழுத்து, அவர்களின் நாட்டுக்கு வெளியே போடுவேன்; நான் யூதா ஜனங்களையும் அவர்களோடு இழுப்பேன்.

15 ஆனால் அந்த ஜனங்களை நான் அவர்களின் நாடுகளிலிருந்து வெளியே இழுத்தப்பிறகு நான் அவர்களுக்காக வருத்தப்படுவேன். நான் ஒவ்வொரு குடும்பத்தையும் அவர்களின் சொந்த சொத்துக்கும் பூமிக்கும் திரும்பக் கொண்டுவருவேன்.

16 அந்த ஜனங்கள், என் ஜனங்களின் வழிகளை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன், கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் எனது ஜனங்களுக்கு, வாக்குறுதிச் செய்வதற்குப் பாகாலின் பெயரைப் பயன்படுத்த கற்றுக் கொடுத்தனர். இப்பொழுது, அந்த ஜனங்கள் தங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அந்த ஜனங்கள் என் பெயரைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த ஜனங்கள் ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு’ ஆணையிட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த ஜனங்கள் இதனைச் செய்தால், நான் அவர்களை வெற்றிபெற அனுமதிப்பேன். அவர்கள் என் ஜனங்களோடு வாழவிடுவேன்.

17 ஆனால், எனது செய்தியை எந்த நாடாவது கேளாமல் போனால், அதனை நான் முழுமையாக அழிப்பேன். செத்துப்போன செடியைப்போன்று நான் அதனை பிடுங்குவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 12 ERV IRV TRV