1 பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள். எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்! தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்! பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்! நீங்கள் இவற்றை செய்யுங்கள். ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது. பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.

2 சீயோனின் மகளே, நீ ஒரு அழகான மென்மையான பெண் போன்றுள்ளாய்.

3 மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள், அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள். எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர். ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர்.

4 “எருசலேமிற்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள். எழுந்திருங்கள்! நாம் மதிய நேரத்தில் நகரத்தைத் தாக்குவோம்; ஆனால் ஏற்கனவே தாமதமாகிவிட்டது. மாலை நிழல் நீளமாக வளர்ந்துக்கொண்டிருக்கின்றது.

5 எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்! எருசலேமைச் சுற்றியிருக்கின்ற உறுதியான சுவர்களை அழிப்போம்.”

6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள். இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்! இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை.

7 ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது, இதுபோலவே எருசலேமும் தனது தீங்கை சுரக்கபண்ணுகிறது, நகரத்திற்குள் எல்லா நேரத்திலும், கொடுமையும், வன்முறையும் நிகழ்வதை நான் கேள்விப்படுகிறேன். எருசலேமிற்குள் எப்பொழுதும் துன்பமும், நோயும் இருப்பதைப் பார்க்கிறேன்.

8 எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி! நீ கவனிக்காவிட்டால், பிறகு நான் உனக்கு எனது முதுகைத் திருப்புவேன், உனது நாட்டை ஒரு வெறும் வனாந்தரமாக நான் செய்வேன். அங்கு எவரும் வாழமுடியாமல் போகும்” என்று கூறுகிறார்.

9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “தங்கள் தேசத்தில் விடப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேருங்கள், நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் இறுதியில் பழுத்த பழங்களை சேகரிப்பதுபோன்று அவர்களை ஒன்று சேருங்கள். ஒரு வேலைக்காரன் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் பறிக்குமுன் சோதிப்பதுபோன்று சோதியுங்கள்” என்று கூறுகிறார்.

10 நான் யாரோடு பேசுவேன்? நான் யாரை எச்சரிக்க முடியும்? நான் சொல்வதை யார் கேட்பார்கள்? இஸ்ரவேல் ஜனங்கள் தம் காதுகளை மூடிக்கொண்டார்கள். எனவே, எனது எச்சரிக்கைகளை அவர்களால் கேட்கமுடியாது. ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளை விரும்புகிறதில்லை, அவரது செய்தியை அவர்கள் கேட்க விரும்பவில்லை.

11 ஆனால் நான், (எரேமியா) கர்த்தருடைய கோபத்தால் முழுமையாக நிறைந்திருக்கிறேன்! நான் அதனைத் தாங்குவதில் சோர்ந்துபோனேன். “தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள். கூடுகின்ற இளைஞர் மேல் கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள். ஒரு ஆணும் அவனது மனைவியும் சேர்த்து கைபற்றப்படுவார்கள். வயதான ஜனங்கள் அனைவரும் கைபற்றப்படுவார்கள்.

12 அவர்களின் வீடுகள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். அவர்களின் வயல்களும் மனைவிகளும் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். நான் என்னுடைய கையை உயர்த்தி யூதாவின் ஜனங்களைத் தண்டிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13 “இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள்வரை அனைத்து ஜனங்களும், இதுபோலவே இருக்கின்றனர். தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள்வரை, அனைத்து ஜனங்களும் பொய்களைக் கூறுகின்றனர்.

14 என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப் போடவேண்டும். அவர்கள் சிறிய காயங்களுக்கு, சிகிச்சை செய்வதுபோன்று, அவர்கள் புண்களுக்கு சிகிச்சை செய்கின்றனர். ‘இது சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது!’ என்று கூறுகிறார்கள். ஆனால் அது சரியாக இல்லை!

15 தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும். ஆனால், அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை தங்கள் பாவங்களுக்காக வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவில்லை; எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள். நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர்கள் தரையில் வீசியெறியப்படுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

16 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “வழிகளில் நின்று கவனி. பழையசாலை எங்கே என்று கேள். நல்ல சாலை எங்கே என்று கேள். அந்தச் சாலையில் நட. நீ செய்தால், உனக்குள் நீ ஓய்வைக் கண்டுபிடிப்பாய். ஆனால் நீங்களோ, ‘நாங்கள் நல்ல சாலைகளில் நடக்கமாட்டோம்!’ என்று கூறினீர்கள்.

17 உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந்தெடுத்தேன். நான் அவர்களிடம், ‘போர் எக்காள சத்தத்தை கவனியுங்கள்’ என்று கூறினேன். ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கவனிக்கமாட்டோம்!’ என்று கூறினார்கள்.

18 எனவே, தேசத்திலுள்ளவர்களே! கேளுங்கள் சபையே,

19 பூமியின் ஜனங்களே, யூதா ஜனங்களுக்கு நான் பேரழிவைக் கொண்டுவருவேன். ஏனென்றால், அவர்கள் எல்லா தீயச்செயல்களுக்கும் திட்டமிடுகிறார்கள். அவர்கள் என் வார்த்தையை உதாசினப்படுத்தினார்கள். அந்த ஜனங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்.”

20 கர்த்தர் அவர்களிடம், “ஏன் நீங்கள் சேபா நாட்டிலுள்ள நறுமணப் பொருட்களையும், தொலை நாடுகளிலுள்ள சுகந்தப் பட்டைகளையும் எனக்குக் கொண்டு வருகிறீர்கள்? உங்களது சர்வாங்கத் தகன பலிகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை, உங்களது பலிகள் எனக்கு இன்பமாயிராது” என்று கூறினார்.

21 எனவே இதுதான் கர்த்தர் கூறுவது: “யூதாவிலுள்ள ஜனங்களுக்கு நான் சிக்கல்களை கொண்டு வருவேன். அவை ஜனங்களை விழச் செய்யும் கற்களைப்போன்று இருக்கும். தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் இடறி விழுவார்கள். நண்பர்களும் அருகில் உள்ளவர்களும் மரித்துப்போவார்கள்.”

22 கர்த்தர் சொல்லுகிறதாவது: “ஒரு படையானது வடக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. பூமியிலுள்ள, தொலைதூர இடங்களிலிருந்து ஒரு பெரிய தேசம் வந்துகொண்டிருக்கிறது.

23 வீரர்கள் வில்லையும் ஈட்டியையும் கொண்டு வருகின்றனர். அவர்கள் கொடுமையானவர்கள். அவர்களிடம் இரக்கம் இல்லை. அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள், குதிரைகள் மேல் சவாரி செய்து வரும்போது, இரைகின்ற கடலைப்போன்று சத்தம் எழுப்புகிறார்கள். சண்டை செய்வதற்கு தயாராக அப்படை வந்துக்கொண்டிருக்கிறது. சீயோனின் குமாரத்தியே! அந்தப் படை உங்களை தாக்கிட வந்துகொண்டிருக்கிறது.”

24 அந்தப் படையைப் பற்றியச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களின் துன்ப வலையில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறோம். பயத்தினால் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். பிரசவிக்கும் பெண்ணைப்போன்று வேதனையில் இருக்கிறோம்.

25 வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள். சாலைகளில் போகாதீர்கள், ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர். எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது.

26 என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள். சாம்பலில் புரளுங்கள். மரித்த ஜனங்களுக்காக உரக்க அழுங்கள். ஒரே மகனை இழந்ததைப்போன்று அழுங்கள், இவற்றையெல்லாம் செய்யுங்கள்; ஏனென்றால், நமக்கு எதிரியான, அழிவுக்காரன் மிகவேகமாக வந்துக்கொண்டிருக்கிறான்.

27 “எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன், நீ எனது ஜனங்களை சோதிப்பாய்; அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய்.

28 என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர், அவர்கள் மிகவும் கடினமானவர்கள். அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள். துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள். அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.

29 அவர்கள் வெள்ளியை சுத்தப்படுத்த முயலும் வேலைக்காரர்களைப் போன்றுள்ளனர். துருத்திகள் பலமாக ஊதப்படுகின்றன. நெருப்பு மேலும் சூடாகின்றது. ஆனால் நெருப்பிலிருந்து ஈயம்மட்டும் வருகின்றது. அந்த வெள்ளியை சுத்தப்படுத்துவதில் வேலையாள் தனது காலத்தை வீணாக்கிவிட்டான். இதுபோலவே, எனது ஜனங்களிடமிருந்து தீயவை விலக்கப்படவில்லை.

30 என்னுடைய ஜனங்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’ என்று அழைக்கப்படுவார்கள், அவர்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.”

Jeremiah 6 ERV IRV TRV