யோசுவா 17

fullscreen1 மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.

fullscreen2 அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயின் மற்றக்குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத்தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.

fullscreen3 மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை. அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

fullscreen4 அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..

fullscreen5 யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.

fullscreen6 மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது.

fullscreen7 மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.

fullscreen8 தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வம்சமாயிற்று.

fullscreen9 அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயின் பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பீராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்.

fullscreen10 தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும் கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.

fullscreen11 இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும் எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.

fullscreen12 மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.

fullscreen13 இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.

fullscreen14 யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

fullscreen15 அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம்பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.

fullscreen16 அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.

fullscreen17 யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.

fullscreen18 அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.