1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

2 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக அனுசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:

3 ஆறுநாட்களும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் குடியிருப்புகளிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாக இருப்பதாக.

4 சபைகூடிவந்து பரிசுத்தமாக அனுசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் அறிவிக்கவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:

5 முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,

6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையுமாக இருக்கும்; ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும்.

7 முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

8 ஏழுநாட்களும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது என்று சொல் என்றார்.

9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

10 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் விளைச்சலை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.

11 உங்களுக்காக அது அங்கீகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

12 நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,

13 கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய உணவுபலியையும், திராட்சைப்பழ ரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

14 உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்தநாள்வரை, அப்பமும் வாட்டிய கதிரையும் பச்சைக்கதிரையும் சாப்பிடவேண்டாம்; இது உங்களுடைய குடியிருப்புகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.

15 நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் முடிந்தபின்பு,

16 ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்வரை கணக்கிட்டு, கர்த்தருக்குப் புதிய உணவுபலியைச் செலுத்தக்கடவீர்கள்.

17 நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாக வேகவைக்கப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாக இருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வீடுகளிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,

18 அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாக அவைகளுக்குரிய உணவுபலியையும், பானபலியையும் செலுத்தி,

19 வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் செலுத்தக்கடவீர்கள்.

20 அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.

21 அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது; இது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.

22 உங்கள் தேசத்தின் விளைச்சலை நீங்கள் அறுக்கும்போது, வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் அந்நியனுக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

24 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாம்தேதி எக்காளச்சத்தத்தால் நினைவுகூறுதலாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாக இருப்பதாக.

25 அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.

26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

27 அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாக இருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.

28 அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாக இருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

29 அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

30 அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் மக்களின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.

31 அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.

32 அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாம்தேதி மாலை துவக்கி, மறுநாள் மாலைவரை உங்கள் ஓய்வை அனுசரிப்பீர்களாக என்றார்.

33 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

34 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் ஏழுநாட்களும் கர்த்தருக்கு அனுசரிக்கும் கூடாரப்பண்டிகையாக இருப்பதாக.

35 முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது.

36 ஏழுநாட்களும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது அனுசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

37 நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,

38 நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாகக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, உணவுபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாக அனுசரிப்பதற்காக நீங்கள் அறிவிக்கவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.

39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாட்கள் அனுசரிப்பீர்களாக; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.

40 முதல் நாளிலே அலங்காரமான மரங்களின் பழங்களையும் பேரீச்சை மரங்களின் ஓலைகளையும் தழைத்திருக்கிற மரங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாட்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.

41 வருடந்தோறும் ஏழுநாட்கள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை அனுசரிப்பீர்களாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை அனுசரிக்கவேண்டும்.

42 நான் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச்செய்ததை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,

43 ஏழுநாட்கள் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

44 அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்தான்.

Leviticus 23 ERV IRV TRV